மாயா பஜார்

புதிய கண்டுபிடிப்புகள்: எப்படிப் பறக்கிறது பட்டாம்பூச்சி?

த.வி.வெங்கடேஸ்வரன்

பூப் பூவா பறந்து போகும் பட்டாம்பூச்சி அக்கா – நீ

படபடன்னு பறந்து போவது எப்படி அக்கா?’

என்ற ஆர்வம் ஸ்வீடனின் லுண்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஜோஹன்சனுக்கும் ஹென்னிங்சனுக்கும் ஏற்பட்டது.

சர்ரென்று பறந்து போகும் தேனீ, ஜிவ்வென்று பறக்கும் கொசு, கிண்னென்று பறக்கும் வண்டு ஆகியவற்றுடன் ஒப்பிட்டால், பட்டம்பூச்சி அங்கும் இங்கும் சீரற்ற முறையில் பறக்கிறது. காற்றில் மிதப்பதுபோல மெதுவாக இறக்கைகளை அடித்தபடி பறந்து செல்லும் பட்டாம்பூச்சி நம் மனத்தைக் கொள்ளைகொள்ளும். இந்தச் சிறிய உடலில் பெரிய இறக்கைகளுடன் எப்படிப் பறக்கிறது என்பது புதிர்தான்!

பூவின் மீது அமர்ந்து ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கும் பட்டாம்பூச்சி, இறக்கைகளைப் பலமாக அசைப்பதில்லை. ஆனால், சட்டென்று பறந்து செல்லும்போது ஓரிரு முறை மட்டுமே இறக்கைகளை மேலும் கீழும் அசைக்கிறது. ஆயினும் போதிய விசை ஏற்பட்டு, பட்டாம்பூச்சி ஜிவ்வென்று உயரே எழுவது எப்படி என்பது அறிவியல் உலகில் வியப்பாகத்தான் பார்க்கப்படுகிறது.

காற்றுப்புழையில் பட்டாம்பூச்சியைப் பறக்க வைத்தும் செயற்கைப் பட்டாம்பூச்சியை உருவாக்கி, ஆராய்ந்தும் லுண்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இதன் பின்னணியில் உள்ள காற்று இயக்கவியலைக் கண்டுபிடித்துள்ளனர்.

பட்டாம்பூச்சியின் இயக்கவியலை அறிந்துகொள்ள, நம் கைகளைத் தட்டி ஆராய்ச்சி செய்வோம். முகத்துக்கு நேர கைகளை வைத்து, தட்டிப் பாருங்கள். தட்டும்போது 'குப்' என்று காற்று வெளியேறுவதை உணரலாம்.

பூவில் அமர்ந்து தேனைக் குடித்துக்கொண்டிருக்கும் பட்டாம்பூச்சி, சட்டென்று பறக்க வேண்டும் என்றால் தனது பெரிய இறக்கைகள் இரண்டையும் தலைக்கு மேலே உயர்த்தி கைகளைத் தட்டுவது மாதிரி தட்டும். அப்போது அந்த இறக்கைகளின் இடையே உள்ள காற்று அதிக வேகத்தில் வெளியேறும். அப்படிக் காற்று வெளியேறுவதை ‘ஜெட்’ என்கிறார்கள்.

நியூட்டன் மூன்றாம் விதியின்படி ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு அல்லவா? இறக்கையை அடித்து எழுப்பிய காற்று வீசும் திசைக்கு எதிராகப் பட்டாம்பூச்சிக்கு உந்துவிசை கிடைக்கும். எரிபொருள் புகையை உந்தித் தள்ளி அதன் எதிர்த் திசையில் ஜெட் விமானம் பறப்பது போன்று, பட்டாம்பூச்சியால் சட்டென்று பூவிலிருந்து பறக்க முடிகிறது.

நுணுக்கமாகப் பட்டாம்பூச்சியின் இயக்கத்தை ஆராய்ந்த ஆய்வாளர்கள் ஆச்சரியப்பட்டார்கள். கைகளைத் தட்டும்போது நாம் இரண்டு உள்ளங்கைகளையும் தட்டையாக வைத்துதான் தட்டுவோம். உள்ளங்கைகள் இரண்டையும் கிண்ணம் போன்று குவித்து தட்டிப் பாருங்கள். கூடுதல் விசையுடன் ‘குப்’ என்று காற்று வெளியேறும்.

“நாங்கள் எதிர்பார்த்ததைவிட மிகவும் மேம்பட்ட வகையில் பட்டாம்பூச்சியின் இயக்கவியல் அமைந்திருக்கிறது. அவை அமர்ந்திருந்த இடத்திலிருந்து சட்டென்று பறக்க வேண்டும் என்பதால், இறக்கைகளை உள்புறமாகக் கிண்ணம் போன்று வளைத்து இரண்டு இறக்கைகளையும் ஒன்றோடு ஒன்று தட்டுகின்றன” என்கிறார் ஹென்னிங்சன். கிண்ணம் மாதிரி குவிக்கும்போது மேலும் கூடுதல் காற்றைச் சேமித்து, அதனை விசையூட்டி வெளியேற்றலாம். எனவே கூடுதல் உந்துவிசை கிடைக்கும். அதிவேகமாகவும் உயரமாகவும் பறந்து செல்ல முடியும்.

ஆய்வகத்தில் பட்டாம்பூச்சியின் இறக்கைகளைச் செயற்கையாகச் செய்து, குவித்து இறக்கைகளை அடிக்கும்போது பட்டாம்பூச்சிக்கு 22 சதவீதம் கூடுதல் உந்துவிசை கிடைத்தது. இறக்கைகளை விறைப்பாக வைத்துத் தட்டுவதோடு ஒப்பிட்டால், சுமார் 28 சதவீதம் குறைந்த ஆற்றலைச் செலவழித்து அதே உந்துவிசையைப் பெற முடிகிறது என்றும் கண்டுபிடித்துள்ளனர்.

பூவில் அமர்ந்து ரசித்து ருசித்து தேனைப் பருகும்போது, தன்னை வேட்டையாட வரும் எதிரிகளிடமிருந்து தப்பிக்க இந்த உத்தியைப் பயன்படுத்துகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள். தான் ஏற்படுத்தும் ‘ஜெட்’ உதவியோடு சட்டென்று பறக்க ஆரம்பித்து, ஒரே திசையில் செல்லாமல் அங்கும் இங்கும் குறுக்குமறுக்காகப் பறப்பதால் எதிரிகளிடமிருந்து தப்பிவிடுகிறது என்கிறார் ஹென்னிங்சன்.

இறக்கையை ஒன்றோடு ஒன்று அடித்துப் பட்டாம்பூச்சி பறக்கத் தேவையான விசையை ஏற்படுத்திக்கொள்கிறது என்கிற எண்ணம் 1970களில் உருவானது என்றாலும் இதுவரை யாரும் ஆய்வு செய்ததில்லை. பட்டாம்பூச்சியையும் செயற்கை இறக்கை அமைப்பையும் காற்றுப்புழை அமைப்பில் வைத்து சோதனை செய்து, ‘ஜெட்’ போன்ற காற்று வெளியேற்றம் உள்ளது என்பதை நிறுவினர்.

‘பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்’ என்பது போலப் பட்டாம்பூச்சியின் இந்த ஆய்வு, ட்ரோன் போன்ற பறக்கும் நுண் இயந்திரக் கருவிகளை வடிவமைக்க உதவும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

கட்டுரையாளர், விஞ்ஞானி

தொடர்புக்கு: tvv123@gmail.com

SCROLL FOR NEXT