டிங்டிங்டிங் மணிச் சத்தம்
எங்கள் தெருவில் கேட்டது!
பலூன்கள் கட்டி வைத்த
சைக்கிள் ஒன்று போனது!
பலூன் ஒன்றை வாங்கிடும்
ஆசை எனக்கு வந்தது!
அப்பாவிடம் சொன்னதும்
பணம் கைக்கு வந்தது!
பலூன் விற்கும் மாமாவிடம்
பணத்தை நான் கொடுத்ததும்
பளபளக்கும் சிவப்பு நிற
பலூன் ஒன்று கிடைத்தது!
எனக்கு பலூன் தாவென
தங்கை பாப்பா கேட்டது!
நானும் அதை கொடுக்கையில்
நூலும் நழுவிப் போனது!
பலூன் எழும்பி வானிலே
பறந்து போகப் பார்த்தது!
பாப்பாவின் முகத்திலே
ஏமாற்றம் தெரிந்தது!
துள்ளி நான் நூலைப் பிடித்து
அவள் கையில் கொடுத்ததும்
தங்கை பாப்பா மகிழ்ச்சியில்
வாய்விட்டுச் சிரித்தது!