குழந்தைகளே, நாணயத்தை மாயமாக்கும் வித்தையை இதற்கு முன்பு சில முறை செய்து பார்த்திருக்கிறோம், இல்லையா? இந்த வாரம், பென்சிலை வைத்து நாணயத்தை மாயமாக்கும் சுலபமான வித்தையைப் பார்ப்போமா?
என்னென்ன தேவை?:
பென்சில், நாணயம்.
மேஜிக்:
ஒரு மேஜை முன் அமர்ந்து, ஒரு கையில் நாணயத்தை வைத்துக்கொண்டு, மறு கையில் பென்சிலைப் பிடித்துக்கொள்ளுங்கள்.
மேஜிக் மந்திரத்தை சொல்லிக்கொண்டே, பென்சிலை நாணயத்தின் மீது மூன்று முறை தட்டுங்கள்.
மூன்று முறை தட்டியதும், நாணயம் மாயமாக மறைந்துவிடும்.
மேஜிக் ரகசியம்:
மேஜிக்கின் ரகசியம் என்ன என்று பார்ப்போமா? முதலில் நாணயத்தை கை விரல்களின் முனையில் வைத்துக்கொள்ளுங்கள்.
பென்சிலைக் கையின் உள்ளங்கை மற்றும் விரல்களின் நடுவே வைத்து பிடித்துக்கொள்ளுங்கள்.
இப்போது பென்சிலை நாணயத்தின் மீது இரண்டு முறை தட்டி, மூன்றாவது முறை தட்டும்போது, வேகமாக நாணயத்தை ஒரு கையிலிருந்து மற்றொரு கைக்கு மாற்றி லாவகமாகப் பிடித்துக்கொள்ள வேண்டும்.
இதை மின்னல் வேகத்தில் யாருக்கும் தெரியாதவாறு செய்ய வேண்டும்.
நாணயத்தை மற்றொரு கைக்கு மாற்றியதும், அதை யாருக்கும் தெரியாமல் மேஜையின் கீழே விழவைத்துவிட வேண்டும்.
பென்சிலால் நாணயத்தை மூன்று முறை தட்டும்போது, ஒவ்வொரு முறையும் ஒரே வேகத்தில் தட்ட வேண்டும். அப்போதுதான் அது மற்றவர்களுக்கு எந்தச் சந்தேகத்தையும் ஏற்படுத்தாது.
நீங்கள் பென்சிலுக்குப் பதில், பேனாவையோ அல்லது மந்திரக்கோலையோ பயன்படுத்தி இந்த வித்தையைச் செய்யலாம்.