மாயா பஜார்

பசுமைப் பள்ளி 14: தாது மணல்

நக்கீரன்

வணக்கம் குழந்தைகளே! நான்தான் பாலைப்பூ.

வறண்ட நிலத்தில் பயணம் செய்தனர் பசுமைப் பள்ளியின் குழந்தைகள். வழியெங்கும் முட்புதர் செடிகள். ஆங்காங்கே பனை மரங்கள். அப்போதுதான் வறண்ட பாலையிலும் செழிப்பாக பூத்திருக்கும் பாலைப் பூக்களைப் பார்த்தனர். பகலில் பூத்த விண்மீன்களைப் போல் வெண்ணிறத்தில் இருந்தன.

குழந்தைகளுக்குள் ஒரு சிந்தனை. ஒவ்வொரு திணைக்கும் ஒவ்வொரு பூவின் பெயரை சூட்டியுள்ளனர். இவை அனைத்தும் வெவ்வேறு வகை தாவரங்களின் பூக்கள். குறிஞ்சி என்பது ஒரு செடிப்பூ. முல்லை என்பது கொடிப்பூ. மருதம் என்பது மரப்பூ. நெய்தல் என்பது நீர்ப்பூ. பாலை என்பதோ ஒரு புதர்ப்பூ.

“என்ன யோசனை குழந்தைகளே?”

“ஒன்றுமில்லை பாலைப் பூவே, பாலைத் திணை என்றால் ஒட்டகங்கள் மேயும் பாலைவனமாக இருக்கும் என நினைத்தோம். இங்கு தாவரங்களும் இருக்கின்றனவே” என்றான் முகில் எனும் சிறுவன்.

“பாலை என்றதும் தார் பாலைவனம் நினைவுக்கு வந்துவிட்டதா? பாலைத் திணை என்பது வறண்ட நிலப் பகுதி. அதாவது குறிஞ்சியும் முல்லையும் வறண்டு போனால், அதுதான் பாலைத் திணை. ஆனால், இன்றைக்கு குறிஞ்சி, முல்லை மட்டுமல்ல, கூடவே மருதமும், நெய்தலும்கூட பாலை நிலமாக மாறிக்கொண்டிருக்கின்றன. நாளை பாலையும் வறண்டுபோனால், அதற்கு என்ன பெயர் வைப்பார்கள் எனத் தெரியவில்லை. அதோ பாருங்கள்…”

பாலைப் பூ சுட்டிக்காட்டிய திசையில் பார்த்தார்கள் குழந்தைகள். அங்கே தொலைவில் ஒரு தொழிற்சாலை.

“என்ன செய்கிறார்கள்?” என்று கேட்டான் முகில்.

“மண்ணிலிருந்து தாதுக்களைப் பிரிக்கும் தொழிற்சாலை. எல்லா தாதுக்களையும் இப்படி பிரித்து எடுத்துவிட்டால், நாளை இந்த மண்ணில் நான்கூட முளைக்க முடியாது” என்றது பாலைப் பூ.

குழந்தைகள் பெருமூச்சு விட்டனர். மனிதர்களின் பேராசையால் அழியும் ஐந்திணைகளின் இன்றைய நிலையை நினைத்துப் பார்த்தனர்.

இன்றைக்கு குறிஞ்சி என்றால், அது மலையும் மலைசார்ந்த இடமுமல்ல. அது கிரானைட்டும் கிரானைட் எடுக்கப்படும் இடமும்.

முல்லை என்பது காடும் காடு சார்ந்த இடமல்ல. அது பலகையும் பலகை அறுக்கும் இடமும்.

மருதம் என்பது வயலும் வயல் சார்ந்த இடமுமல்ல. அது வேதிப்பொருளும் வேதிப்பொருளைக் கொட்டும் இடமும்.

நெய்தல் என்பதும் கடலும் கடல் சார்ந்த இடமுமல்ல. அது கழிவுத்தொழிலும் கழிவுகளைக் கொட்டும் இடமும்.

பாலை என்பதும் மணலும் மணல் சார்ந்த இடமுமல்ல. அது தாதுக்களும் தாதுக்களை பிரிக்கும் இடமும்.

அப்போது சரியாக ஆள்காட்டிப் பறவை கத்தும் ஓசைக் கேட்கிறது. டிட் யு டூ யிட்… டிட் யு டூ யிட்…

குழந்தைகளின் காதுக்கு ஆங்கில மொழியில் அது இப்படி ஒலிக்கிறது. Did you do it?... Did you do it?...

நீயா செய்தாய்? நீயா செய்தாய்?

குழந்தைகள் முணுமுணுக்கின்றனர். “இல்லை, இந்த அழிவை நாங்கள் செய்யவில்லை. இனி எவரையும் செய்யவும் விட மாட்டோம்”

ஐந்திணை பாடம் முடிந்தது.

(அடுத்த வாரம்: ஐம்பூதம் வாழ்க)

கட்டுரையாளர்: குழந்தை எழுத்தாளர் மற்றும் சூழலியலாளர்
தொடர்புக்கு: vee.nakkeeran@gmail.com

SCROLL FOR NEXT