கீழடி தொல்லியல் ஆய்வுகள் குறித்துக் கேள்விப்பட்டிருப்பீர்கள். நமது மூதாதையர்கள் எப்படி வாழ்ந்தார்கள், அவர்களுடைய அறிவு எந்த அளவுக்கு வளர்ந்திருந்தது, என்ன சாப்பிட்டார்கள், என்னென்ன வேலை செய்தார்கள் என்பதை எல்லாம் அறிந்துகொள்ளும் ஆர்வம் இயல்பாகவே நமக்கு இருக்கும்.
அப்படியே இன்னும் சற்று பின்னோக்கிப் போனால், கீழடிக்கு வந்துசேர்வதற்கு முன் நம் மூதாதையர்கள் எங்கே வாழ்ந்தார்கள், அவர்களுடைய வாழ்க்கை எப்படி இருந்தது, அங்கிருந்து எதற்காக நாட்டின் தென் பகுதி நோக்கி வந்தார்கள் என்கிற கேள்விகள் அடுத்தடுத்து எழும்.
இந்தியாவின் பூர்விக மக்கள் சிந்து சமவெளியை மையமாகக் கொண்டவர்கள். இந்தியா (India) என்கிற பெயரே சிந்து (Indus) என்கிற பேராற்றை ஒட்டி வாழ்ந்த நாகரிகத்திலிருந்து பிறந்ததுதான். சரி, சிந்து சமவெளிக்கும் கீழடிக்கும் என்ன தொடர்பு?
இப்படி வரலாற்றை எட்டிப் பார்த்தால், ஒரு கேள்வியைப் பின்தொடர்ந்து இன்னொரு கேள்வி என ரயில்பெட்டிகளைப் போல் கேள்விகள் நீண்டுகொண்டே போகும். ரயில் பயணங்களைப் போல் வரலாற்றுப் பயணங்களும் இனிமையானவை, நமக்கு அறிவூட்டக்கூடியவை.
மேற்கண்ட விஷயங்களை எல்லாம் ஒரு கதையாகப் படித்தால் எவ்வளவு சுவாரசியமாக இருக்கும்? பெரியவர்களுக்கு மட்டுமே அதிகம் எழுதப்பட்ட கீழடி பண்டைத் தமிழ் நாகரிகம் பற்றி, இளையோருக்கு நாவல் வடிவில் தந்துள்ளார் எழுத்தாளர் உதயசங்கர்.
கேப்டன் பாலு
கீழடி தென்னந்தோப்புகளில் கேப்டன் பாலு எனும் பதின் வயதுச் சிறுவன் கண்டெடுக்கும் பொம்மையின் வழியாக, நம்மை வரலாற்றுக்குள் கூடு விட்டுக் கூடு பாய வைத்துவிடுகிறார் ஆசிரியர். வரலாற்றின் வெவ்வேறு களங்களுக்குள் கேப்டன் பாலுவை ஆதன் அழைத்துச் செல்லும்போது, நாமும் அவர்களுடன் பயணம் செய்யத் தொடங்கிவிடுகிறோம்.
ஜல்லிக்கட்டு, சேவல் சண்டை, கால்நடைகள் போன்றவை ஏன் நம்மிடமிருந்து பிரிக்க முடியாதவையாக இருக்கின்றன? சக மனிதர்களிடம் பாகுபாடு காட்டக் கூடாது-அனைவரும் ஒரு தாய்மக்கள் என்கிற உணர்வு, தமிழ்-திராவிட மொழிகளின் வேர்கள் எங்கிருந்து தொடங்குகின்றன, வேற்று இனத்தைச் சேர்ந்தவர்கள் இந்தியாவுக்கு வந்தபோது நம்மிடம் அவர்கள் எப்படி நடந்துகொண்டார்கள் எனப் பல்வேறு அம்சங்களைக் கதை வழியாக நம்மால் தெரிந்துகொள்ள முடிகிறது. ஒரு வரலாற்று சாகச நாவல்போல் கதை பரபரப்பாக நகர்கிறது. சசி மாரிஸின் ஓவியங்களுடன் இந்த நூலை அழகுற வெளியிட்டுள்ளது வானம் பதிப்பகம்.
குறை போக்கும் படைப்பு
நம் வரலாற்றின் முக்கியத்துவத்தை, பண்பாட்டின் பெருமையை, மொழியின் வேரை நம் குழந்தைகளிடம்-இளையோரிடம் சிறு வயதிலேயே கடத்துவதற்கு ‘ஆதனின் பொம்மை’ நிஜ பொம்மையைப் போல் கூடவே இருந்து கைகொடுக்கும்.
தமிழ் சிறார் இலக்கியத்தில் பதின்ம வயதுக் குழந்தைகளுக்கான படைப்புகள் மிகக் குறைவு. அதுவும் தற்காலத்தில் கவனப்படுத்தப்படும் அம்சங்கள், அந்த வகைமையில் அதிகம் பேசப்படவில்லை என்கிற குறையைப் போக்கும் வகையில் ‘ஆதனின் பொம்மை’ வெளியாகியுள்ளது.
பண்டைத் தமிழக வரலாறு குறித்து நமக்கு இருக்கும் பல்வேறு கேள்விகளுக்கு ‘ஆதனின் பொம்மை’ விடை தரும். சுவாரசியத்துக்காக வரலாற்றுப் பின்னணியைப் பயன்படுத்துவதற்கு மாறாக, வரலாற்று உண்மைகளைக் கதைகளின் வழியாகப் பேசியுள்ள இந்தக் கதையைப் போல் இன்னும் பல ஆதனின் பொம்மைகள் நமக்குத் தேவை.