ஓவியம்: கிரிஜா 
மாயா பஜார்

கதை: இடும்பவனம்

உமையவன்

இடும்பவனம் காட்டுப் பகுதியை இடும்பன் ஆட்சி செய்து வந்தார். தூய்மையான காற்று, சுத்தமான தண்ணீர், ஆரோக்கியமான நிலம், சுவையும் சத்துகளும் நிறைந்த காய், கனிகள் என்று இடும்பவனம் இயற்கை வளங்களால் நிரம்பி வழிந்தது.

காட்டில் வசிக்கும் மக்கள் வெளியே செல்ல மாட்டார்கள். வெளியிலிருந்து யாரையும் காட்டுக்குள் அனுமதிக்கவும் மாட்டார்கள். காட்டைச் சுற்றிலும் வேலி அமைத்து, காவல் காத்து வந்தனர். மழைக்காலத்தில் மட்டும் குகைகளில் தங்கிக்கொள்வார்கள். கிழங்குகள், காய்கறிகள், பழங்கள், இறைச்சியே இவர்களின் முக்கிய உணவு. இவர்களுக்குப் பெரும்பாலும் நோய்கள் வருவதில்லை. அப்படியே வந்தாலும் மூலிகைகளைக் கொண்டு குணப்படுத்திவிடுவார்கள்.

இப்படிச் சொர்க்கம் போலிருந்த இடும்பவனம், சமீபக் காலமாகத் தலைகீழாக மாறிவிட்டது. அதற்குக் காரணம், இடும்பனின் மனமாற்றம்தான். ‘மக்கள் நம்மை மதிக்க வேண்டும் என்றால், அவர்களைப் பயத்தோடு வைத்திருக்க வேண்டும்’ என்று இடும்பனின் அயல் காட்டு நண்பர் ஒருவர் சொல்லிவிட்டுச் சென்றார்.

தினமும் கடோத் என்ற யானையின் மீது அமர்ந்து காட்டை வலம் வருவார் இடும்பன். அப்போது மக்கள் தங்களிடம் இருக்கும் கிழங்குகளையும் கனிகளையும் இடும்பனுக்குப் பாதி வழங்கிவிட வேண்டும். கிழங்குகளை வைத்து மாவையும் கனிகளை வைத்து பழச்சாற்றையும் உற்பத்தி செய்து, அவற்றை மக்களிடமே விற்பனை செய்தார்.

தாங்கள் உழைத்து உருவாக்கும் கிழங்குகளையும் கனிகளையும் இலவசமாக வாங்கி, அவற்றை வேறு ஒரு விதமாக மாற்றி, மீண்டும் தங்களுக்கே விற்பனை செய்யும் இடும்பனின் செயலைக் கண்டு மக்கள் வேதனை அடைந்தனர். யாராவது கிழங்குகளையும் கனிகளையும் கொடுக்க மறுத்தால், அவர்களுக்குத் தண்டனையும் உண்டு.

கடினமாக உழைத்து இடும்பனுக்குக் கொடுக்க வேண்டுமா என்ற எண்ணம் வந்ததும் மக்கள் உழைப்பதைக் குறைத்துக்கொண்டனர். இதனால் உணவுக்குப் பஞ்சம் ஏற்பட்டது. குறைவாக உற்பத்தி செய்பவர்களுக்குத் தண்டனையும் கொடுக்க ஆரம்பித்தார் இடும்பன். கொடுமை தாங்காமல் காட்டில் வசிக்கும் பலர், யாருக்கும் தெரியாமல் பக்கத்து காடுகளை நோக்கிச் சென்றுவிட்டார்கள்.

இடும்பன் தன் அமைச்சர்கள் பதினோரு பேரை அழைத்து, பதினோரு நாட்களில் உணவு உற்பத்தி குறைவதற்கான காரணத்தைக் கண்டறியச் சொன்னார். அவர்கள் ஆராய்ச்சி செய்து, யானைகள், பறவைகளின் எண்ணிக்கை அதிகரித்ததால் உணவுப் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. அதாவது மக்கள் விளைவிக்கும் உணவுப் பொருட்களை யானைகளும் பறவைகளும் உண்டு விடுவதால் இந்தப் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என்றார்கள்.

உடனே யானைகளையும் பறவைகளையும் காட்டிலிருந்து விரட்டிவிடுங்கள் அல்லது வேட்டையாடுங்கள் என்று உத்தரவிட்டார் இடும்பன். மக்கள் அதிர்ச்சியடைந்தனர். “விலங்குகளும் பறவைகளும் இல்லைனா இந்தக் காடே இல்லை” என்றார் ஒரு முதியவர்.

“இடும்பனை எதிர்த்துப் பேசும் துணிச்சல் எப்படி வந்தது? அவரைச் சிறையில் அடையுங்கள்” என்று உத்தரவிட்டார் இடும்பன்.

ஒரு மாதம் பக்கத்துக் காடுகளுக்குச் சுற்றுலா சென்றுவிட்டுத் திரும்பி வந்தார் இடும்பன். மக்கள் எலும்பும் தோலுமாகப் பரிதாபமாகக் காட்சியளித்தார்கள்.

“நான் தான் விலங்குகளையும் பறவைகளையும் விரட்டி விட்டேனே... உணவுப் பொருட்கள் அதிகம் கிடைத்திருக்குமே... அப்புறம் ஏன் இப்படிக் காட்சியளிக்கிறீர்கள்?” என்று கேட்டார் இடும்பன்.

“காடு வளமாக இருப்பதற்குக் காரணம் மரங்கள், செடிகொடிகள் போன்ற தாவரங்கள்தாம். இந்த மரங்களை நீங்களோ நாங்களோ உருவாக்கவில்லை. இவற்றை உருவாக்கியதில் பெரும்பங்கு பறவைகளுக்கும் விலங்குகளுக்கும்தான் இருக்கிறது. அவற்றை விரட்டிவிட்டால், காடு எப்படிக் காடாக இருக்கும்?” என்று கேட்டார் ஒரு முதியவர்.

“என்ன சொல்கிறீர்கள்?”

“காடை, கவுதாரி, காகம், குருவி, மயில், இருவாட்சி, மைனா, தேன்சிட்டு போன்ற பறவைகள் பழங்களைச் சாப்பிடுகின்றன. பழங்களில் இருக்கும் விதைகள் எச்சத்தில் வெளியேறுகின்றன. அவை மண்ணில் விழுந்து மீண்டும் முளைக்கின்றன. இது கூடத் தெரியாமல் நீ என்ன அரசன்?” என்று கோபத்துடன் கேட்டார் அந்தப் பெரியவர்.

“ஐயோ... என்னை மன்னித்துவிடுங்கள். பெரிய தவறு செய்துவிட்டேன். பக்கத்து காடுகளிலிருந்து பழங்களையும் கிழங்குகளையும் வரவழைக்கிறேன். பசியாறுங்கள். காடு முழுவதும் விரைவில் கனி தரும் மரங்களையும் செடிகளையும் நட ஆணையிடுகிறேன். அவற்றை நாடி பறவைகளும் விலங்குகளும் வரும்” என்றார் இடும்பன்.

இரண்டே மாதங்களில் காடு மீண்டும் வளமாக மாறியது. பறவைகளும் விலங்குகளும் ஆனந்தமாகச் சுற்றித் திரிந்தன. மக்கள் மகிழ்ச்சியோடு உழைத்தார்கள். இப்போது இந்தக் காட்டில் மனிதர்கள், விலங்குகள், பறவைகள் எல்லோருக்கும் சமமான உரிமை இருந்தது. இனி இந்த இடும்பவனத்துக்கு அழிவே இல்லை.

SCROLL FOR NEXT