இப்போது நீங்கள் கையில் வைத்துப் படித்துக்கொண்டிருக்கும் இந்தச் செய்தித்தாளுக்கான காகிதம் வந்த கதை தெரியுமா? 5,000 ஆண்டுகளுக்கு முன்னர் உலகின் முதல் தாள் பிறந்தது. அது பெரிதாகி, வளர்ந்த கதை ரொம்பவே சுவாரசியமானது.
பாபிரஸ்
பண்டைய எகிப்தில் 5,000 ஆண்டுகளுக்கு முன் பாபிரஸ் என்ற நாணலில் உருவாக்கப்பட்ட தாளில் எகிப்தியர்கள் எழுதி வந்தனர். புகழ்பெற்ற நைல் நதியின் பாசனப் பகுதியில் இந்த நாணல் அதிகம் வளர்ந்திருந்தது. இந்தக் காகிதம் எப்படி உருவாக்கப்பட்டதென்றால், நாணலின் தண்டுப் பகுதியில் இருந்த திசுக்கள் அடுத்தடுத்து வரிசையாக அடுக்கப்பட்டன, பிறகு அவற்றின் மீது பசை தடவப்பட்டுக் காகிதம் தயாரிக்கப்பட்டது. ரொட்டி - கோதுமையில் கிடைக்கும் துகள்களைச் சுடு தண்ணீரில் போட்டு, இதை ஒட்டுவதற்கான பசையைத் தயாரித்தார்கள். இப்படித் தயாரிக்கப்பட்ட தாளில் எகிப்தியர்கள் எழுதி வந்தனர்.
பார்ச்மென்ட்
எகிப்தியர்களின் பாபிரஸ் காகிதம், பின்னர் உலகெங்கும் பயணித்தது. ஆனால், ஏனோ அது கிழக்கு ஐரோப்பாவுக்கு மட்டும் போகவேயில்லை. அதன் காரணமாகக் கிழக்கு ஐரோப்பாவில் எழுதுவதற்கு விலங்குகளின் தோலை, காகிதத்தைப் போலப் பயன்படுத்தி வந்தார்கள். இதற்குப் பார்ச்மென்ட் என்று பெயர். இதன் விலை அதிகம். அதேநேரம் பாபிரஸைவிட இதில் வசதிகள் அதிகமிருந்தன.
பாபிரஸ் தாளை மடக்க முடியாது. மடக்கினால் உடைந்து தூளாகிவிடும். அதேநேரம் பார்ச்மென்ட்டை மடக்கலாம், ஏன் அரசு சார்பிலான ஓலைகள், அறிக்கைகளைப்போல சுருட்டவே செய்யலாம். அதை எளிதாகக் கையாள முடியும். அது மட்டுமில்லாமல், பார்ச்மென்ட்டில் இரண்டு பக்கமும் எழுதலாம். அதனால் நிறைய தகவல்களை எழுத முடிந்தது.
இன்றைய காகிதம்
இன்றைக்கு நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் காகிதம் கண்டுபிடிக்கப்பட்ட நாடு சீனா. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் காகிதம் கண்டுபிடிக்கப்பட்டது. சீன அரசு அதிகாரியான சாய் லூன் கி.பி. 105-ம் ஆண்டில் தாளைக் கண்டுபிடித்தார். மல்பெரி மரம், மூங்கில் இழைகள், மீன் வலை, கழிவு துணி எனக் கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் போட்டுக் காகிதத்தை உருவாக்கினார். அப்போதைய சீனப் பேரரசர் ஹோ தி இந்தக் கண்டுபிடிப்பைக் கண்டு அசந்துபோய், தனது அரசவையில் சாய் லூனுக்குப் பதவி கொடுத்துக் கௌரவித்தார். இதனால் தலைக்கனம் அடைந்த சாய் லூன், தவறான வேலைகளில் இறங்கினார்.
அவருடைய மோசடிகள் மக்களிடையே அம்பலமாக, நெருக்கடி தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டார். அதற்குப் பிறகு காகிதம் உருவாக்கும் தொழில் ரகசியத்தைச் சீனர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு யாருக்கும் சொல்லாமல் வைத்திருந்தார்கள்.
மர்மமாக இருந்த காகிதம் தயாரிக்கும் தொழில்நுணுக்கத்தை மூர் வம்சத்தினர் ஸ்பெயினுக்கும் மத்தியத் தரைக் கடல் பகுதியில் இருந்த சிசிலி தீவுகளுக்கும் கொண்டு சென்றனர். அங்கிருந்து ஐரோப்பாவுக்குத் தாள் பரவ ஆரம்பித்தது. 1200-ல் இத்தாலி, மற்ற இடங்களில் காகித உற்பத்தி ஆலைகள் பெருக ஆரம்பித்தன.
ஜோஹான்னஸ் கூட்டன்பர்க் 1455-ல் அச்சு இயந்திரத்தைக் கண்டுபிடித்த பிறகு காகிதம் உலகப் புகழ்பெற ஆரம்பித்தது. அடுத்த 50 ஆண்டுகளில் ஐரோப்பாவில் பல்வேறு புத்தகங்கள் அச்சடிக்கப்பட்ட நிலையில், காகிதத்துக்கான தேவையும் உலகில் அதிகரிக்க ஆரம்பித்தது. காகிதத்தைக் கண்டுபிடித்த சீனாதான் இன்றைக்கு உலக அளவில் அதிகக் காகிதத்தை உற்பத்தி செய்கிறது. அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி, கனடா ஆகியவை அதற்கு அடுத்த இடங்களில் உள்ளன.
தெரியுமா?
ஒரு மரத்தின் மூலம் 100 கிலோ காகிதத்தை உற்பத்தி செய்ய முடியும்.
உலகில் ஒருவர் வருடத்துக்குச் சராசரியாக 50 கிலோ காகிதத்தைப் பயன்படுத்துகிறார்.
ஒரு கிலோ காகிதத்தைத் தயாரிக்க 300 லிட்டர் தண்ணீர் செலவாகிறது.
காகிதப் பயன்பாட்டை இரண்டு பேர் முற்றிலும் குறைத்துக்கொண்டால் 2 மரங்களைப் பாதுகாக்க முடியும்.
பயன்படுத்தப்பட்ட நாளிதழ் காகிதம் 50 கிலோவை மறுசுழற்சி செய்தால், ஒரு மரத்தைக் காப்பாற்ற முடியும்.