மாயா பஜார்

மேஜிக்... மேஜிக்... விரல்களுக்குள் மாயமாகும் நாணயம்

க.ஸ்வேதா

நாணயங்களை வைத்து பல மேஜிக் வித்தைகளைச் செய்து பார்த்திருப்பீர்கள். இந்த வாரமும் நாணயத்தை வைத்து இன்னொரு சுலபமான மேஜிக் வித்தையைச் செய்து பார்ப்போமா?

தேவையான பொருட்கள்:

நாணயம் (கொஞ்சம் பெரியது).

மேஜிக் வித்தை:

1. படத்தில் காட்டியிருப்பதைப் போல இடது கையின் உள்ளங்கையை மூடி, அதில் நாணயத்தை வைத்துக்கொள்ளுங்கள்.

2. பிறகு வலது கையின் கட்டை விரலால் நாணயத்தை உள்ளே தள்ளி, இடது கையை மூடிக்கொள்ளுங்கள்.

3. மேஜிக் மந்திரத்தை சொல்லியபடி இடது கையைத் திறந்தால், நாணயம் மாயமாக மறைந்துபோயிருக்கும்.

மேஜிக் ரகசியம்:

1. உங்கள் இடது கையைப் படத்தில் காட்டியுள்ளதைப் போல குகை வாயில் போல மடித்து, அதில் நாணயத்தை வைத்துக்கொள்ளுங்கள்.

2. உங்கள் வலது கையின் கட்டை விரலால், அந்த நாணயத்தை இடது கைக்குள் தள்ளும்போது, அதைத் தந்திரமாக வலது கையில் விழ வைத்து பிடித்துக்கொள்ள வேண்டும். பேசிக்கொண்டே நண்பர்களைத் திசைத் திருப்பி இதைச் செய்ய வேண்டும்.

3. மந்திரம் சொல்லுவது போலச் சொல்லி இடது கையைத் திறந்தால், நாணயம் மாயமாகியிருக்கும்.

இதுவே விரல்களுக்குள் மறையும் நாணயத்தின் ரகசியம்.

இதை பலமுறை பயிற்சி செய்து பார்த்துவிட்டு உங்கள் நண்பர்கள் முன் செய்யுங்கள். கண்ணாடி முன் நின்று பயிற்சி செய்தால், இன்னும் சுலபமாகக் கற்றுக்கொள்ளலாம்.

SCROLL FOR NEXT