புதிய ஏழு உலக அதிசயங்களில் ஒன்று மச்சு பிச்சு. பெரு நாட்டில் கஸ்கோ நகரிலிருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இது. உருபாம்பா பள்ளத்தாக்கின் மேலே உள்ள மலைத்தொடரில் மச்சு பிச்சு அமைந்துள்ளது.
இன்கா பேரரசு காலத்தில் கட்டப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க பழைய நகரம் இது. கி.பி.1450-ல் இது கட்டப்பட்டது. அந்தக் காலத்தில் உலர் கற்களைக் கொண்டே சுவர்களை எழுப்பியிருக்கிறார்கள். இன்கா பேரரசை ஸ்பானியர்கள் கைப்பற்றிய பிறகு, பல நூறு ஆண்டுகளுக்கு இந்த நகரம் உலகின் பார்வையைப் பெரிதாக ஈர்க்கவில்லை.
1911-ம் ஆண்டில் வரலாற்று ஆய்வாளர் ஹிராம் பிங்கம் என்பவர் இதைக் கண்டறிந்த பிறகு, மச்சு பிச்சுவைப் பார்த்து உலகமே வாயைப் பிளந்தது. தற்போது உலகளவில் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக இது திகழ்கிறது. 1983-ம் ஆண்டில் உலகப் பாரம்பரியச் சின்னமாக இந்த இடத்தை யுனெஸ்கோ அறிவித்தது. 2007-ம் ஆண்டில் ஏழு புதிய உலக அதிசயங்கள் தேர்வு செய்யப்பட்டன. இதில் மச்சு பிச்சுவும் ஒன்றாகத் தேர்வானது.
தகவல் திரட்டியவர்: டி. சுரேஷ், 8-ம் வகுப்பு,
சென்னை மாநகராட்சிப் பள்ளி, கோயம்பேடு.