மழைக்காலம் தொடங்கிவிட்டது. எங்கு பார்த்தாலும் மழை நீர் தேங்கியிருப்பதைப் பார்க்கலாம். இதனால், கொசுத் தொல்லையும் அதிகரிக்கும் இல்லையா? மழைக்காலத்தில் பல்வேறு வகையான நோய்களும் பரவும். கொசுக்களை ஒழிப்பதற்கு, தேங்கியிருக்கும் நீரில் கொசு மருந்து தெளிப்பதைப் பார்த்திருப்பீர்கள். மருந்து தெளித்ததும் கொசுக்கள் எப்படி அழிகின்றன? அதைத் தெரிந்துகொள்ள ஒரு சோதனை இருக்கிறது. செய்து பார்ப்போமா?
தேவையான பொருட்கள்
கண்ணாடி டம்ளர், சோப்புக் கரைசல், சல்ஃபர் தூள்
சோதனை
1. ஒரு கண்ணாடி டம்ளரில் தண்ணீரை ஊற்றுங்கள்.
2. அந்தத் தண்ணீரில் சல்ஃபர் தூளைத் தூவுங்கள். அது நீரில் மிதக்கும்.
3. இப்போது பாத்திரம் கழுவப் பயன்படும் சோப்புக் கரைசலை நீரில் கரைத்துக்கொள்ளுங்கள்.
4. நீர் கலந்த சோப்புக் கரைசலை டம்ளரில் மெதுவாக ஊற்றுங்கள். இப்போது என்ன நடக்கிறது என்று பாருங்களேன்.
சோப்புக் கரைசலை ஊற்றிய வுடன், நீர்ப்பரப்பில் மிதந்த சல்ஃபர் தூள் தண்ணீரில் மூழ்குவதைப் பார்க்கலாம். மிதந்து கொண்டிருந்த சல்ஃபர் தூள் மூழ்க என்ன காரணம்?
நடப்பது என்ன?
எல்லாத் திரவங்களுக்கும் ஒரு மேற்பரப்பு உண்டு. திரவ மேற்பரப்பில் உள்ள மூலக்கூறுகள் ஒன்றையொன்று ஈர்க்கும். அப்படி ஈர்ப்பதற்கு திரவங்களின் மேற்பரப்பில் ஒரு விசை செயல்படுகிறது. அந்த விசைதான் திரவங்களின் பரப்பு இழுவிசை. ஓரலகு நீளத்தில் திரவ மேற்பரப்பில் வரையப்படும் நேர்க்கோட்டுக்குச் செங்குத்து திசையில் செயல்படும் விசையே பரப்பு இழுவிசை. இந்த விசையின் காரணமாகத்தான் கொசுக்கள், சிறிய பூச்சிகளால் நீர்ப்பரப்பில் மூழ்காமல் மிதக்க முடிகிறது.
சல்ஃபர் தூளை நீரில் போடும்போது நீரின் பரப்பு இழுவிசை காரணமாக அவை மிதக்கவே செய்கின்றன. சல்ஃபர் தூளின் எடையைவிட நீரின் பரப்பு இழுவிசை அதிகம். எனவே, அந்தத் தூளை மூழ்க விடாமல் நீர்ப்பரப்பு தடுக்கிறது. சோப்புக் கரைசலின் பரப்பு இழுவிசை நீரைவிடக் குறைவு. சோப்புக்கரைசலை நீர்ப்பரப்பில் மெதுவாக ஊற்றும்போது, அந்தப் பகுதியில் நீரின் பரப்பு இழுவிசை குறைந்துவிடுகிறது. இதனால், சல்ஃபர் தூளின் எடை நீரின் பரப்பு இழுவிசையைவிட அதிகமாகி விடுகிறது. இதன் காரணமாக சல்ஃபர் தூள் நீரில் மூழ்குகிறது.
பயன்பாடு
மழைக்காலத்தில் குளம் குட்டை, பள்ளங்களில் தேங்கியிருக்கும் நீர்ப்பரப்பில் கொசுக்கள் முட்டையிடும். பின்னர் குஞ்சு பொரித்து நோய்களைப் பரப்பிவிடும். கொசுக்களை அழிப்பதற் காகக் கொசு மருந்து தெளிப்பதைப் பார்த்திருப்பீர்கள் அல்லவா?
இப்போது சல்ஃபர் தூளைக் கொசுவாகவும், டம்பளரில் உள்ள நீரை மழைநீராகவும், சோப்புக் கரைசலைக் கொசு மருந்தாகவும் கற்பனை செய்து கொள்கிறீர்களா? டம்ளரில் உள்ள நீரில் சோப்புக் கரைசலை விட்டவுடன் நீரின் பரப்பு இழுவிசை குறைந்து, சல்ஃபர் தூள் நீரில் மூழ்கியது அல்லவா? அதைப் போலவே குளம், குட்டைகளில் தேங்கியிருக்கும் தண்ணீர் மீது கொசு மருந்தைத் தெளிக்கும்போது, அந்து மருந்து நீரின் பரப்பு இழுவிசையைக் குறையச் செய்கிறது. இதனால் கொசுமுட்டைகளும், இளம் புழுக்களும் நீரில் மூழ்கி இறந்துவிடுகின்றன.
தேங்கியிருக்கும் நீரில் கொசு மருந்து அடிப்பதால் கொசுக்கள் எப்படி அழிகின்றன என்பதற்கான காரணம், இப்போது உங்களுக்குப் புரிந்துவிட்டதா?
- கட்டுரையாளர், பேராசிரியர், அறிவியல் எழுத்தாளர்
தொடர்புக்கு: aspandian59@gmail.com
படங்கள்: அ. சுப்பையா பாண்டியன்