முதலாம் வகுப்போ இரண்டாம் வகுப்போ படிக்கும் சிறுமி அவள். தன் அம்மாவிடம் சமூக அறிவியல் பாடப்புத்தகத்தைக் காட்டி உரையாடுகிறாள்.
“அம்மா, ஏன் இந்தப் புத்தகத்தில் ஆண்கள் உருவாக்கியது என்று எழுதியிருக்கிறார்கள்? பெண்கள் எதையும் கட்டவோ உருவாக்கவோ அனுமதிக்கப்படவில்லையா? பெண்களும் உழைத்திருப்பார்கள் தானே?” என்று முதலில் கேட்கிறாள்.
தொடர்ந்து, “அப்படியானால் மனிதர்கள் செய்தது, மனித இனம் உருவாக்கியது என்று தானே எழுதியிருக்க வேண்டும். ஏன் அப்படி எழுதப்படவில்லை. ஆண்களும் பெண்களும் சமமானவர்கள், இல்லையா? உலகில் உள்ள அனைவரும் சமமானவர்கள் என்று ஏன் அவர்கள் கூறுவதில்லை? புத்தகத்தில் இப்படி எழுதப்பட்டிருப்பது சரியில்லை தானே?” என்று அந்தச் சிறுமி கேட்கிறாள்.
சிறுமியின் அர்த்தம் மிகுந்த இந்தக் கேள்விகள் அடங்கிய சிறு வீடியோ சமூக வலைத்தளங்களில் கடந்த வாரம் அதிகம் பகிர்ந்துகொள்ளப்பட்டது. அந்தச் சிறுமி எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பது தெரியாது. ஆனால், அவள் கேட்ட கேள்விகள் நியாயமானவை, அனைவரும் கருத்தில்கொண்டு செயல்பட வேண்டியவை. இந்த வயதிலேயே அந்தச் சிறுமி இவ்வளவு புரிதலைப் பெற்றிருப்பதைப் பலரும் பாராட்டியிருக்கிறார்கள்.
தமிழில் எழுதும்போது மனிதன் என்று எழுதினால், அது ஆண்களை மட்டுமே குறிக்கிறது. மனிதர்கள், மனித இனம் என்று எழுதினால் அது இரு பாலையும் குறிக்கிறது. நாமும் மனிதர்களையும் புத்தகங்களையும் தொடர்ந்து வாசிப்பதன் மூலம் நிறைய புரிந்துகொள்ளலாம், அந்தச் சிறுமியைப் போலவே அர்த்தமுள்ள கேள்விகளைக் கேட்டு மாற்றத்தை விரைவுபடுத்தலாம்.
- நேயா
அந்த வீடியோவைக் காண: https://bit.ly/3cPAeeS