சென்னையைச் சேர்ந்த பிரசித்தி சிங், ஏராளமான பழ மரங்களையும் பழக்காடுகளையும் உருவாக்கியிருக்கிறார். பசுமையான பூமியை உருவாக்குவதே தம் லட்சியமாகக் கொண்டு செயல்படும் பிரசித்தி, மஹிந்தரா வேர்ல்ட் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். ‘பிரசித்தி வன அறக்கட்டளை’ ஒன்றையும் நடத்தி வரும் இவருக்கு, பிரதம மந்திரியின் ‘தேசிய பாலர் விருது’ கிடைத்திருக்கிறது! கல்வி, விளையாட்டு, கலை, சமூக சேவை, துணிச்சல் போன்றவற்றில் சாதனைகளைப் படைத்த 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இந்திய அளவில் 32 சிறார்கள் இந்த விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரசித்தி சிங்கும் ஒருவர்.
”பள்ளிகள், அலுவலகங்கள், பொது இடங்களில் இதுவரை 13,500 பழ மரங்களை நட்டிருக்கிறேன். 13 பழக்காடுகளை உருவாக்கி யிருக்கிறேன். மரங்கள் மனிதர்களுக்கு ஆக்ஸிஜன் கொடுப்பதோடு விலங்குகள் பறவைகளுக்கு உணவும் இருப்பிடமும் அளிக்கக் கூடியவை. ஒரு லட்சம் மரங்களை நடுவதுதான் என் நோக்கம். அதை நிறைவேற்றுவதற்கான உத்வேகத்தை இந்தத் தேசிய அளவிலான பாராட்டு தந்திருக்கிறது. இந்தியா முழுவதும் பல கோடி மாணவர்கள் மரம் நடும் பணியில் இறங்கினால், பசுமையான இந்தியாவை உருவாக்க முடியும்” என்கிறார் பிரசித்தி சிங்.
சமூக சேவைக்கு விருது பெற்றுள்ள பிரசித்தி சிங்குக்கு வாழ்த்துகள்!