விலங்குகளுக்கு நினைவாற்றல் உண்டா? எந்த விலங்குக்கு அதிக நினைவாற்றல் உண்டு, டிங்கு?
- அ.ரா. அன்புமதி, 7-ம் வகுப்பு, மைக்கேல்ஜாப் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, சூலூர், கோவை.
விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் நினைவாற்றல் உண்டு. குறுகிய கால நினைவாற்றல், தனித்துவமான நினைவாற்றல் என்ற இரு வகை நினைவாற்றல்கள் அவற்றுக்கு உண்டு. பார்க்கும் அனைத்தையும் குறுகிய காலம் மட்டுமே நினைவில் வைத்துக்கொண்டு, பிறகு மறந்துவிடுகின்றன. சக விலங்குகள், உணவு நிறைந்த இடங்கள், நச்சுணவு, எதிரி போன்ற விஷயங்களைத் தனித்துவமான நினைவாற்றலில் சேமித்துக்கொள்கின்றன. விலங்குகளுக்குத் தங்கும் இடம், பறவைகளுக்குக் கூடுகள் போன்றவை எல்லாம் இந்தத் தனித்துவமான, நீண்ட கால நினைவாற்றல் மூலமே நினைவில் வைத்துக்கொள்கின்றன. டால்பின், யானை, நாய், குரங்கு, கிளி போன்றவற்றுக்கு நினைவாற்றல் அதிகம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள், அன்புமதி.
எனக்கு `சரி’ என்று படும் ஒரு விஷயம், மற்றவருக்குத் தவறாகப் படுவது ஏன், டிங்கு?
- எஸ். கெளதம், 9-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, அரியலூர்.
ஒருவர் வளரும் சூழல், அனுபவம் போன்றவை காரணமாகவே ஒருவருக்குச் சரி என்று படுவது, இன்னொருவருக்குத் தவறாகப் படுகிறது. நீங்கள் ஒரு நாயைச் செல்லமாக வளர்க்கிறீர்கள். அதன் மீது பாசத்தைக் கொட்டுகிறீர்கள். அதுவும் உங்கள் மீது அன்பு வைக்கிறது. நீங்கள் சொல்வதை எல்லாம் செய்கிறது. உங்கள் இருவருக்கும் புரிதல் ஏற்பட்டிருப்பதால், நாயை உயர்வாகவும் அன்பாகவும் மதிப்பீர்கள். உங்கள் நண்பரை ஒரு நாய் துரத்தியிருக்கலாம், கடித்திருக்கலாம். அவர் எந்த நாயைப் பார்த்தாலும் பயப்படவே செய்வார். உங்களைப் பொருத்தவரை நாய் என்றால் அன்பு, உங்கள் நண்பரைப் பொருத்தவரை நாய் என்றால் பயம். ஒரே நாய்தான். ஆனால், இருவிதமான கருத்துகள் உருவாகியிருக்கின்றன. இது அனுபவத்தின் மூலமாகக் கிடைத்த சிந்தனை, கெளதம்.
எந்தெந்த நாடுகள் மருந்துகளை அதிகம் உற்பத்தி செய்கின்றன, டிங்கு?
- ஜி. மஞ்சரி, 10-ம் வகுப்பு, ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, கிருஷ்ணகிரி.
2012-ம் ஆண்டு மருந்துகளை ஏற்றுமதி செய்த நாடுகளின் அடிப்படையில், ஜெர்மனி முதல் இடத்திலும் அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் சுவிட்சர்லாந்து மூன்றாவது இடத்திலும் இருக்கின்றன. இந்தியா பத்தாவது இடத்தில் இருக்கிறது மஞ்சரி.