குழந்தைகளே, இந்த வாரம் நாணயம் மாயமாகும் வித்தையைச் செய்து அசத்துகிறீர்களா? மறந்துவிடாதீர்கள், எந்த மாய வித்தையாக இருந்தாலும் அதைப் பலமுறை செய்து பார்த்த பிறகே மற்றவர்களுக்குச் செய்து காட்டுங்கள். அப்போதுதான் எந்தத் தடங்கலும் இல்லாமல் சூப்பராகச் செய்ய முடியும்.
என்ன தேவை?
ஏதாவது ஒரு நாணயம்
மேஜிக் எப்படி?
1. உங்கள் நண்பர்களிடம் ஒரு நாணயத்தைக் கேளுங்கள். பின்னர் உங்கள் நண்பர்களில் ஒருவரை அழைத்து, உங்கள் முன் நிற்க வைத்துக்கொள்ளுங்கள்.
2. அந்த நாணயத்தை ஒரு கையில் பிடித்து அனைவருக்கும் காட்டுங்கள். பின்பு அதை இன்னொரு கைக்கு மாற்றிக் கையை மூடிக்கொள்ளுங்கள். சில நிமிடங்கள் மாயாஜால மந்திரம் செய்வதுபோலப் பாவனை செய்து, கையைத் திறந்து காட்டுங்கள். கையிலிருந்த நாணயம் காணாமல் மறைந்து போயிருக்கும்.
3. பிறகு, உங்கள் நண்பரின் காதருகே கையைக் கொண்டு செல்லுங்கள். அவருடைய காதிலிருந்து, நாணயத்தை எடுத்து எல்லோருக்கும் காட்டுங்கள். இதைப் பார்த்து உங்கள் நண்பர்கள் அசந்துபோவார்கள்.
மேஜிக் ரகசியம்:
4. ரகசியம் இதுதான், நீங்கள் நாணயத்தை வலது கையில் பிடித்து அனைவருக்கும் காட்டி இடது கைக்கு மாற்றினீர்கள் அல்லவா? அப்போது, நீங்கள் நாணயத்தைக் கைக்கு மாற்றுவது போலப் பாவனை மட்டுமே செய்ய வேண்டும்.
5. நீங்கள் இடது கையை உடனே மடித்துக்கொள்வதால், அந்தக் கையில் நாணயம் இருப்பது யாருக்கும் தெரியாது. பிறகு இடது கையைத் திறந்து காட்டும்போது, அதில் நாணயம் இருக்காது.
6. கடைசியாக, உங்கள் வலது கையை உங்கள் நண்பரின் காதருகே கொண்டு செல்லும்போது, காதிலிருந்து நாணயத்தை எடுப்பதுபோலப் பாவனை செய்ய வேண்டும். ஆனால், உண்மையில் உங்கள் வலது கையில் குவித்து வைத்துள்ள விரல்களில் இருந்தே நாணயத்தை வெளியே எடுத்துக் காட்டுவீர்கள்.
இதுதான் நாணயம் மறையும் மேஜிக். மேஜிக் செய்யும்போது இடைவிடாமல் உங்கள் நண்பர்களிடம் பேசிக்கொண்டே வித்தையைச் செய்யுங்கள். இதனால் அவர்களுடைய கவனத்தைத் திசைதிருப்பி வித்தைகளைச் சுலபமாகச் செய்யலாம்.