வயிறு 
மாயா பஜார்

தவளைக்குள் சென்று உயிருடன் வெளிவரும் வண்டு

த.வி.வெங்கடேஸ்வரன்

இரையாக விழுங்கப்பட்ட ஓர் உயிரினம், கழிவு வெளியேறும் வழியே உயிருடன் வரும் என்றால், உங்களால் நம்ப முடிகிறதா? ரேஜிம்பார்டியா அடினுயாடா (Regimbartia attenuata) எனும் நீர்வண்டு, தவளையின் வாய் வழியே உள்ளே சென்று, அதன் மலத்துவாரம் வழியே உயிரோடு வெளியே வந்துவிடும்!

ஜப்பானில் பூச்சியியல் ஆய்வாளராக உள்ள ஷின்ஜி சூகியூரா நடத்திய ஆய்வில் நூற்றுக்குத் தொண்ணூற்றி மூன்று வண்டுகள் இருபத்தி நான்கு மணிநேரத்துக்குள் மலத்துவாரம் வழியே வெளியே வந்துவிட்டன என்கிறார்.

தவளை பெரும்பாலும் உயிரோடுதான் பூச்சிகளைத் தன் நீண்ட நாக்கால் பிடித்து உண்ணும். தவளைக்குப் பற்கள் இல்லை, அதனால்கடித்து உணவைச் சிதைக்க முடியாது. வாய், உணவுக் குழாய், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் மலத்துவாரம் என்ற வரிசையில் தவளையின் செரிமான மண்டலம் அமைந்துள்ளது. எனவே விழுங்கிய பூச்சி தவளையின் செரிமான மண்டலத்தில் ஜீரணம் ஆகும்போதுதான் மடியும்.

தவளையின் வாய்க்குள் செல்லும் நீர்வண்டு, அதன் செரிமான மண்டலத்தில் நீந்தத் தொடங்கி, நான்கே மணிநேரத்தில் வெளியே வந்துவிடுகிறது. உயிரோடு வெளியே வரும் நீர்வண்டின் தலைதான் முதலில் வெளியே வரும். எனவே கால்களை அடித்து அடித்து நீந்தி, தவளையின் மலத்துவாரத்தைத் திறக்க செய்கிறது.வெளியே வந்த நீர்வண்டு எதுவும் நடக்காதது போல இயல்பு நிலைக்கு உடனே திரும்பிவிட்டது என்கிறார் ஷின்ஜி சூகியூரா.

தவளைகளுக்கு ஏனோசருஸ் ஜப்பானிகாஸ் எனும் வேறு வகை நீர்வண்டை உணவாகக் கொடுத்துப் பரிசோதனை செய்தபோது, எந்த ஒரு வண்டும் உயிர் தப்பவில்லை. ரேஜிம்பார்டியா அடினுயாடா வகை மட்டுமே பரிணாமப் படிநிலை வளர்ச்சியில் தற்செயலாகத் தவளையின் வயிற்றிலிருந்து தப்பும் குணத்தைப் பெற்றுள்ளது.

பறவையின் உடலில் ஜீரணம் ஆகாமல் சில விதைகள் வெளியே வருவது போல, நீர்வண்டு வெளிப்படுகிறதா என்பதையும் ஆராய்ந்தார். நீர்வண்டுகளின் கால்களில் மெழுகைப் பூசினார். மெழுகு பூச்சுள்ள வண்டால் கால்களை அடித்து நீந்த முடியாது. இந்த ஆராய்ச்சியில் எல்லா நீர்வண்டுகளும் தவளையின் வயிற்றில் மடிந்து, 48 மணிநேரத்துக்குப் பிறகு மலத்தில் சிதைவுகளாக வெளிவந்தன.

வண்டு தடிமனான புற உடற்கூடு (exoskeleton) கொண்டுள்ளது. எனவே குடலில் ஜீரண அமிலத்தைத் தாங்கிக்கொள்ள முடிகிறது. நீரில் வாழ்வதற்குத் தம்மை தகவமைத்துக் கொண்ட நீர்வண்டுகளால், தமது கால்களைத் துடுப்பு போல அடித்து நன்றாக நீந்த முடியும். எனவே சிறுகுடல், பெருங்குடல் பகுதிகளில் நீந்தி மலத்துவாரம் நோக்கிச் செல்ல முடிகிறது. நீரில் வாழும்போது சுவாசம் செய்ய, இறக்கைகளில் சிறு காற்றுக் குமிழிகளைப் பொதிந்து வைத்திருக்கும். இந்தக் காற்றுக்குமிழிகள் மூலம் சுவாசித்து, தவளையின் வயிற்றில் அதிகபட்சம் நான்கு மணிநேரம் உயிரோடு இருக்க முடிகிறது. அதற்கும் மேலே காலதாமதம் ஆனால், ஆக்சிஜன் பற்றாக்குறை, அமிலத் தன்மை காரணமாக அவை மடிந்து போகின்றன. அவற்றின் எச்சங்கள் மலத்தில் வெளியே வருகின்றன.

கட்டுரையாளர், விஞ்ஞானி

தொடர்புக்கு: tvv123@gmail.com

SCROLL FOR NEXT