மாயா பஜார்

டிங்குவிடம் கேளுங்கள்: மழையில் தேன்கூடு கலைந்துவிடுமா?

செய்திப்பிரிவு

மழை பெய்யும் பொழுது தேன்கூடுகள் கலைந்துவிடுமா, டிங்கு?

- பி. பெர்னிஸ் கிரேஸ்லின், 4-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. பப்ளிக் பள்ளி, சமயபுரம்.

இயற்கை ஒவ்வோர் உயிரினத்துக்கும் அது பாதுகாப்புடன் வாழ்வதற்கான வழிமுறையை உருவாக்கி வைத்திருக்கிறது. தேன் கூடுகள் மழையில் சேதம் அடையாமல் இருப்பதற்கு ஏற்றார்போல் வடிவமைக்கப்படுகின்றன. மேலிருந்து விழும் மழைநீர் தேன் கூட்டுக்குள் சென்று சேமித்துள்ள தேனையும் புழுக்களையும் சேதப்படுத்தாமல் வழிந்து ஓடிவிடுகிறது. மழை மட்டுமல்ல, கடினமான காற்று, விலங்குகள்கூட அவ்வளவு எளிதாகத் தேன் கூட்டைச் சேதப்படுத்திவிட முடியாது, பெர்னிஸ் கிரேஸ்லின்.

பாம்பு, பேய் இவற்றில் உனக்கு எதைக் கண்டால் பயம், டிங்கு?

- எம். ராஜராஜன், 8-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, தஞ்சாவூர்.

இல்லாத ஒன்றை நினைத்து பயப்படத் தேவை இல்லை என்பதால் பேய் பற்றிய பயம் இல்லை. பாம்பை நினைத்தாலே எனக்குப் பயம் வந்துவிடும், ராஜராஜன்.

தெர்மாமீட்டர் உடலில் பட்ட சிறிது நேரத்தில் உடல் வெப்பநிலையைக் காட்டுகிறது. ஆனால், தெர்மல் ஸ்கேனர் எப்படித் தொடாமலே உடல் வெப்பநிலையைக் காட்டுகிறது, டிங்கு?

- அ.ரா. அன்புமதி, 7-ம் வகுப்பு, மைக்கேல் ஜாப் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, சூலூர், கோவை.

கோவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் அருகில் சென்று தெர்மாமீட்டரைப் பயன்படுத்த இயலாது. குறிப்பிட்ட இடைவெளி அவசியம் தேவை. அதனால் உடல் வெப்பநிலையை அறிய தெர்மல் ஸ்கேனரைப் பயன்படுத்தி வருகிறார்கள். கண்களுக்குப் புலப்படாத நம் உடலில் இருந்து வெளியேறும் அகச்சிவப்புக் கதிர்களின்(Infrared)மூலம் உடலின் வெப்பநிலையைத் தெரிவிக்கிறது தெர்மல் ஸ்கேனர். இதன் மூலம் காய்ச்சலையோ வேறு எந்த நோயையோ கண்டுபிடிக்க முடியாது. வெப்பநிலையை மட்டும் அறிந்துகொள்ள முடியும், அன்புமதி.

அக்டோபர் 15 அப்துல் கலாம் பிறந்த நாள். அவரைப் பற்றி உனக்குப் பிடித்த விஷயங்களைச் சொல்ல முடியுமா, டிங்கு?

- அ. நிதர்சனா, 4-ம் வகுப்பு, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர், தேனி.

நல்ல நேரம் கெட்ட நேரம் என்பதில் நம்பிக்கை இல்லாதவர். உழைக்கக்கூடிய எந்த நேரமும் நல்ல நேரம் என்பதில் உறுதியாக இருந்தவர். விஞ்ஞானியாகவும் குடியரசுத் தலைவராகவும் இருந்தாலும் இளைய தலைமுறை மீது மிகுந்த நம்பிக்கை வைத்து, மாணவர்களைச் சந்தித்துக்கொண்டே இருந்தார். மக்கள் விரும்பக்கூடிய தலைவராகத் திகழ்ந்தார். இவை எல்லாம் அப்துல் கலாமிடம் எனக்குப் பிடித்த சில விஷயங்கள், நிதர்சனா.

SCROLL FOR NEXT