ஓவியம்: கிரிஜா 
மாயா பஜார்

கதை: எந்தத் தேசத்து இளவரசி?

செய்திப்பிரிவு

பாவண்ணன்

கூடத்துக்கு வந்த அம்மா, மேசையின் மீது ஒரு பெரிய புத்தகத்தைப் பிரித்து வைத்துக்கொண்டு படம் பார்த்துக்கொண்டிருந்த மஞ்சுவைப் பார்த்தார்.

“சின்ன ராணி இன்னும் தூங்கலையா? மணி ஒன்பதாயிருச்சே” என்று புன்னகையுடன் மஞ்சுவின் அருகில் சென்றார்.

“இந்தப் புத்தகத்துல படங்கள் ரொம்ப ரொம்ப அழகா இருக்குதும்மா” என்றபடி முகத்தைத் திருப்பினாள் மஞ்சு.

“அதனாலதான் அப்பா இந்தப் புத்தகத்தை வாங்கிக் கொடுத்திருக்கார்.”

“இதே மாதிரி இன்னும் அஞ்சி, ஏழு, எட்டு, பத்துப் புத்தகம் வேணும்மா” என்று எண்ணுவது போல் விரல்களை ஒவ்வொன்றாக நீட்டிச் சொன்னாள் மஞ்சு.

“சரி. வா, தூங்கலாம்.”

“எனக்கு ஒரு கதை சொல்றீங்களா?”

“சரி.”

“பெரிய கதை. முடியவே கூடாது. விடிய விடிய சொல்லிட்டே இருக்கணும்.”

விளக்கை நிறுத்திவிட்டு மஞ்சுவைப் படுக்கையறைக்கு அழைத்துச் சென்றார் அம்மா. இருவரும் ஆளுக்கொரு தலையணையில் படுத்துக்கொண்டார்கள்.

மஞ்சுவின் காதோரமாகச் சுருண்டிருந்த முடிக்கற்றையை விரலால் ஒதுக்கிவிட்டபடி, “ஒரு ஊருல ஒரு பெரிய காடு இருந்ததாம்” என்று கதை சொல்லத் தொடங்கினார்.

“அம்மா, காடு கதை வேணாம். வேற கதை சொல்லுங்க.”

“சரி, ஒரு ஊருல ஒரு பள்ளிக்கூடம்...”

“ஐயோ, பள்ளிக்கூடம் வேணாம். வேற சொல்லுங்க…”

“அப்படியா, ஒரு ஊருல ஒரு தோப்பு இருந்ததாம். அங்க ஒரு பெரிய கிணறு…”

“அதுல பூதம் வருமா? வேணாம்மா. வேற சொல்லுங்க...”

“என்ன எதைச் சொன்னாலும் வேணாங்கற. புதுசா வேற நான் என்ன சொல்றது?” என்று யோசித்தார் அம்மா.

“அம்மா, நான் ஒரு கதை சொல்லட்டுமா?”

“நீயா?” என்று ஆச்சரியத்தோடு மஞ்சுவைப் பார்த்தார் அம்மா. “சரி சரி, சொல்லு” என்றபடி அவள் கன்னத்தை அழுத்தி முத்தமிட்டார்.

“நான் சொல்லச் சொல்ல ‘ம்’ கொட்டிட்டே இருக்கணும். அப்பதான் எனக்குக் கதை சொல்ல வரும். சரியா?”

“சரி, சொல்லு” என்ற அம்மாவின் கண்களைப் பார்த்தபடி, “ஒரு நாட்டுல ஒரு அழகான இளவரசி இருந்தா. கத்திச் சண்டை எல்லாம் போடுவா. இந்த உலகத்துல அவள யாருமே ஜெயிக்க முடியாது.”

“ம்”

“அரண்மனை நந்தவனத்துல ஒரு நாள் உக்காந்துட்டு பூக்கள வேடிக்கை பார்த்துகிட்டிருந்தா, இளவரசி. அந்த நேரத்துல குருவி வந்து ஒரு பூவுக்குப் பக்கத்துல உக்காந்து அவளையே பார்த்தது.”

“ம்”

“கொஞ்ச நேரம் கழிச்சி குருவி அந்தச் செடியிலிருந்து பக்கத்து செடியில போய் உக்காந்தது. இளவரசி குருவியையே பாத்துட்டிருந்தா. திடீர்னு குருவி மாறி மாறி நாலஞ்சு செடியில உக்காந்துட்டு சட்டுனு பறந்துபோய் ஒரு மரத்துல உக்காந்துருச்சு.”

“அடடா, அப்பறம்?”

“அதைப் பாத்துட்டு இளவரசிக்கும் பறக்கணும்ன்னு ஆசை வந்துருச்சு. உடனே அவளுக்கு றெக்கை மொளைச்சிருச்சு. இளவரசியும் பறந்து போய் மரத்துல உக்காந்துட்டா.”

“ம்”

“அப்ப வெள்ள ரிப்பன் காத்துல பறக்கற மாதிரி ஒரு கொக்கு கூட்டம் அந்தப் பக்கமா பறந்து வந்திச்சி. உடனே இளவரசிக்குக் கொக்கு மாதிரி பறக்கணும்னு ஆசை வந்துருச்சு. உடனே கொக்குக்குப் பின்னாலயே அவளும் பறக்க ஆரம்பிச்சிட்டா…..”

“ம்”

“எல்லா கொக்கும் பக்கத்து காட்டுல அருவி பக்கமா எறங்கிச்சி. இளவரசியும் அங்க எறங்கி அக்கம்பக்கம் வேடிக்கை பார்த்தா. ஒரு மரத்தடியில நாலஞ்சி மயில்கள் அழகா தோகை விரிச்சி ஆடிட்டிருந்தது”

“ம்”

“உடனே இளவரசியும் மயிலா மாறி தோகை விரிச்சி ஆடத் தொடங்கிட்டா. அப்ப திடீர்னு மழை வந்துருச்சு. நல்லா நனைஞ்ச இளவரசி ஆனந்தமா ஆடினா.”

“ம்.”

“அந்தப் பக்கமா ஒரு மான் ஓடி வந்துச்சு. உடனே இளவரசியும் மானா மாறி அது பின்னாலயே ஓடினா. ஓடி ஓடி களைச்சி போய் ஒரு குகைக்குப் பக்கத்துல நின்னா. அங்க ஒரு யானை மூங்கில் தோப்பு பக்கமா அசைஞ்சி அசைஞ்சி நடந்து போச்சு. உடனே இளவரசியும் யானையா மாறி அது பின்னாலயே நடந்து போனா.”

“ம்”

“ரொம்ப தூரம் நடந்து, யானை ஒரு மலை உச்சிக்குப் போய் நின்னுது. மலையின் உச்சிவரைக்கும் போன இளவரசி ஆகாயத்தையே சுத்திச் சுத்தி பார்த்தா. சிலுசிலுனு குளிர்காத்து. எல்லா பக்கமும் பனி மூட்டம். மேகங்கள் எல்லாம் வந்து தொட்டுட்டு தொட்டுட்டுப் போகுது.”

“ம்”

“ஒவ்வொரு மேகமும் பாக்கறதுக்கு குதிரை மாதிரி இருந்தது. உடனே இளவரசி ஒரு மேகத்து முதுகுல ஏறி உக்காந்துட்டா. மேகம் போற திசையில அவளும் போறா.”

“ம்”

“வழியில வட்டமா நிலா தெரிஞ்சது. பாக்கறதுக்கு யாரோ மெத்துமெத்துனு பஞ்சு மெத்தைய போட்டு வச்ச மாதிரி இருந்தது. காலையிலிருந்து அலைஞ்சிட்டே இருந்ததால இளவரசி ரொம்பக் களைச்சி போயிட்டா. அதனால நிலாவுல படுத்து தூங்க ஆரம்பிச்சிட்டா. அவ்ளோதான் கதை.”

“ரொம்ப நல்ல கதை, செல்லக்குட்டி. ஆமா, இளவரசின்னு சொன்னியே. அவ எந்தத் தேசத்து இளவரசி?”

“பாண்டிச்சேரி தேசத்துலயே பெரிய இளவரசி.”

“ஓ... அப்படியா? அப்ப அவ பேரு மஞ்சுவா?”

“ம்” என்றபடி அம்மாவைப் பார்த்துச் சிரித்தாள் மஞ்சு.

SCROLL FOR NEXT