கடந்த முப்பது ஆண்டுகளில் பிறந்தவர்களின் குழந்தைப் பருவத்தை மகிழ்வித்தவர், தமிழ் காமிக்ஸ் கதாபாத்திரங்களுக்கு உயிர்கொடுத்தவர் செல்லம். அக்குழந்தைகளுடைய கனவுலகின் கதவுகளைத் திறந்து, கற்பனைக் குதிரைகளுக்கு வடிவம் கொடுத்தவர் என்று இவரைத் தாராளமாகச் சொல்லலாம். பலே பாலு, சமத்து சாரு, அதிமேதாவி அப்பு, அண்ணாசாமி என்று புகழ்பெற்ற கதாபாத்திரங்களை வரைந்தவர் இவரே.
நாகர்கோவில் இக்கியானம் கிராமத்தில் 1940-ம் ஆண்டு பிறந்தவர் செல்லப்பன். சிறுவயது முதலே ஓவியம் வரைவதில் ஆர்வம் கொண்டிருந்தார். அவருடைய திறமைகளைக் கண்ட அவருடைய பெற்றோர், நாகர்கோவிலில் பிரபலமாக இருந்த சித்ரா ஓவியக் கல்லூரியில் சேர்த்துவிட்டனர். அங்குப் பட்டச் சான்றிதழ் பெற்ற பிறகு, பி.எஸ். மணி ஆசிரியராக இருந்த ‘கன்னியாகுமரி’ இதழில் ஓவியம் வரைய ஆரம்பித்தார் செல்லப்பன்.
சென்னை வாசம்
சில ஆண்டுகளுக்குப் பிறகு, சென்னைக்கு வந்து முரசொலி ஆசிரியராக இருந்த மு.கருணாநிதியைச் சந்தித்தார். அவருடைய ஆர்வத்தையும் ஓவியங்களையும் கண்ட கருணாநிதி, உடனடியாக முரசொலியில் ஓவியராக நியமித்தார். அன்றிலிருந்து அடுத்த 40 ஆண்டுகளுக்கு முரசொலியின் ஆஸ்தானக் கார்ட்டூனிஸ்ட்டாக இருந்தார் செல்லம் என்ற செல்லப்பன். இவருடைய அரசியல் கார்ட்டூன் கதாபாத்திரங்களான ஆண்டி – போண்டி, அந்துமணி போன்றவை மறக்க முடியாதவை. 1976-ம் ஆண்டு நெருக்கடி நிலை காலத்தில் இவர் வரைந்த கேலிச்சித்திரத்தை, உலகப் புகழ்பெற்ற நியூஸ்வீக் இதழ் மறுபிரசுரம் செய்து, உலகமெங்கும் இவருடைய பெயரை மரியாதையுடன் உச்சரிக்க வைத்தது.
உண்மைக்கு மிக நெருக்கமான பாணியில் வரையக்கூடிய செல்லம், ஒருகட்டத்தில் முரசொலி நிர்வாகத்தின் அனுமதி பெற்று, மற்ற இதழ்களுக்கும் வரைய ஆரம்பித்தார். அப்போதுதான் அவருடைய புகழ் வெகுஜன இதழ்களில் கொடிகட்டிப் பறக்கத் தொடங்கியது.
சிறுவர் இலக்கியம்
கோகுலம், சிறுவர் மலர், ரத்னபாலா, பூந்தளிர், கண்மணி, தங்க மலர், முத்து காமிக்ஸ் வார மலர், முத்து காமிக்ஸ், சுட்டி விகடன் போன்ற குழந்தைகள் இதழ்கள், தினமணி கதிர், குமுதம், கல்கி, விகடன், தேவியின் கண்மணி போன்ற பிரபல வார இதழ்கள் என்று இவருடைய கைவண்ணம் பட்ட இதழ்களின் பட்டியல் மிக நீளமானது.
சிறுவர் இலக்கியத்தில் இரண்டு மேதைகளுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு, ஓவியர் செல்லத்துக்குக் கிடைத்தது. வாண்டுமாமா, முல்லை தங்கராசன் ஆகியோரின் கதைகளுக்கு ஓவிய வடிவில் உயிர் கொடுத்தவர் இவர்தான்.
ஓய்வுக் காலம்
ஓவியச் சக்ரவர்த்தி என்று அழைக்கப்பட்ட செல்லம் வரைந்த காலகட்டம், தமிழ் சித்திரக்கதை உலகின் தலைசிறந்த காலமாகக் கருதப்படுகிறது. 1997-ம் ஆண்டு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட இவர், அதற்குப் பின்னர் வரைவதைக் குறைத்துக்கொண்டு ஓய்வெடுத்துவந்தார். சென்னை ராயப்பேட்டையில் வசித்துவந்த செல்லம், சில தினங்களுக்கு முன்பு ஆகஸ்ட் 28-ம் தேதி காலமானார்.
ஒரு மாபெரும் ஓவியர் இன்றைக்கு நம்முடன் இல்லை என்ற உண்மை தரும் வருத்தத்தைவிட, அவருடைய இடத்தை நிரப்ப இதுவரை யாருமே உருவாகவில்லை என்பதுதான் அவருடைய இழப்பை மிகப் பெரிதாக்குகிறது இல்லையா?