மாயா பஜார்

அணுகுண்டு வீச்சின் 75ஆவது ஆண்டு: அமைதியைப் பரப்பும் சிறுமி சடாகோவின் செய்தி

ஆதி

உலகின் முதல் அணுகுண்டு வீசப்பட்டு இன்றோடு 75 ஆண்டுகள் நிறைவடைகின்றன. அணுகுண்டு வீசப்பட்ட இடம் ஜப்பானின் முக்கிய நகரங்களில் ஒன்றான ஹிரோஷிமா. அணுகுண்டை வீசிய நாடு அமெரிக்கா. இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் அடிபணியவில்லை என்ற காரணத்தைக் கூறி அமெரிக்கா அணுகுண்டை வீசியது.

அதற்குப் பல காரணங்கள். முதல் காரணம் பேர்ல் ஹார்பர் துறைமுகத்தில் ஜப்பான் நிகழ்த்திய தாக்குதலில் அமெரிக்க வீழ்த்தப்பட்டது. அதேநேரம், சிறிது காலத்திலேயே தன் தோல்வியை ஒப்புக்கொண்டு ஜப்பான் சரணடைந்துவிட்டது. ஆனாலும் அமெரிக்கா அதுவரை உலகத்தில் பிரயோகித்துப் பார்க்கப்படாத அணுகுண்டை ஜப்பானில் ஏன் வீசியது? அந்த ஆயுதத்தால் ஏற்படும் பாதிப்பின் அளவைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதுதான். ஹிரோஷிமாவில் மடிந்தவர்கள் லட்சக்கணக்கானோர். அத்துடன் அமெரிக்கா நிறுத்திவிடவில்லை. இரண்டு நாள்களுக்குப் பிறகு நாகசாகியில் மற்றொரு அணுகுண்டையும் வீசிப் பார்த்தது.

சடாகோ சசாகி

இந்த மனிதப் பேரழிவுக்கு பல சாட்சியங்கள் இருக்கிறார்கள். அவர்களில் முதன்மை சாட்சியங்கள் குழந்தைகள். பச்சிளங் குழந்தைகள் முதல் முதியவர்கள்வரை ஹிரோஷிமாவின் பலியானார்கள். அவர்களில் அணு ஆயுதத்துக்கு எதிரான, போருக்கு எதிரான, அமைதியை வலியுறுத்தும் அடையாளமாக மாறினார் சிறுமி சடாகோ சசாகி.

1945 ஆகஸ்ட் 6 அன்று ஹிரோஷிமாவில் அமெரிக்கா அணுகுண்டை வீசியபோது, சடாகோ ரெண்டு வயதுக் குட்டிப் பெண்ணாக இருந்தாள். இந்த அணுகுண்டுத் தாக்குதலில் அவளுடைய குடும்பத்தினர் உடனடியாக பாதிக்கப்படவில்லை, உயிர் பிழைத்தார்கள்.

ஆனால், சடாகோவுக்கு 11 வயது ஆனபோது, ஒரு நாள் திடீரென மயங்கி விழுந்துவிட்டாள். அவளுக்கு லுகேமியா என்ற ரத்தப் புற்றுநோய் தாக்கியிருந்தது கண்டறியப்பட்டது. அணுகுண்டிலிருந்து வெளியான கதிர்வீச்சுதான் அந்த நோய்க்குக் காரணம். ஹிரோஷிமா செஞ்சிலுவைச் சங்க மருத்துவமனையில் சடாகோ சேர்க்கப்பட்டாள். தான் சீக்கிரமா

இறந்து போகக் கூடாது, எல்லா மனிதர்களைப் போல் வாழ வேண்டும் என சடாகோ ஆசைப்பட்டாள்.

சடாகோவின் தோழி சிசுகோ, சடாகோவைப் பார்க்க ஒரு நாள் மருத்துவமனைக்கு வந்திருந்தாள். ஆரிகாமி என்று அழைக்கப்படும் ஜப்பானிய காகித மடிப்புக் கலை மூலம் காகிதத்தில் ஒரு கொக்கைச் செய்து, சடாகோவின் கையில் அப்போது அவள் கொடுத்துச்சென்றாள்.

கொக்கு, ஜப்பானில் வணங்கப்படும் பறவை. அந்தக் காகிதக் கொக்கைப் போல் ஆயிரம் கொக்குகளைச் செய்தால் நோய் குணமாகும் என்பது அந்நாட்டு நம்பிக்கை. "நீயும் ஆயிரம் கொக்குகள் செய், உன் நோய் குணமாகும்" என்று சடாகோவிடம் சிசுகோ கூறியிருந்தாள்.

நிறைவுசெய்த தோழிகள்

கடைசி எட்டு மாதம் நோயால் அவதிப்பட்டபோது, நாள்தோறும் சடாகோ காகிதக் கொக்குகளைச் செய்துவந்தாள். முதலில் ஒரு நாளைக்கு 20 கொக்குகளுக்கு மேல் அவளால் செய்ய முடிந்தது. போகப் போக அவளால் எதுவுமே செய்ய முடியவில்லை. உடல்நிலை மோசமாகிக்கொண்டே போனது. ஆனாலும், காகிதக் கொக்கு செய்வதில் சடாகோ முழு கவனம் செலுத்தினாள்.

ஆனால், 1955 அக்டோபர் 25ஆம் தேதி 12 வயதில் சடகோ இறந்துவிட்டாள். அதுவரை சடாகோவால் 644 கொக்குகளையே செய்ய முடிந்திருந்தது. சடாகோவின் தோழிகள் எஞ்சிய 356 கொக்குகளைச் செய்து, அவளுடைய விருப்பதைப் பூர்த்திசெய்தார்கள்.

அதற்குப் பின் அவளுடைய தோழிகள், மற்ற ஜப்பான் குழந்தைகள் நிதி திரட்டி, ஹிரோஷிமா நகரத்தின் மையத்தில் சடாகோவுக்கு நினைவகத்தை கட்டினார்கள். அங்கே அவளுக்குச் சிலையும் வைக்கப்பட்டது. அந்த நினைவகத்துக்கு ‘குழந்தைகள் அமைதி நினைவாலயம்' என்று பெயர். இன்றைக்கும் நாள்தோறும் நூற்றுக்கணக்கான குழந்தைங்கள் இந்த நினைவகத்துக்குச் சென்று , காகிதக் கொக்கு செய்து சடாகோவுக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள். கடைசிவரை நம்பிக்கையுடன் வாழ்ந்த சிறுமி சடாகோ சசாகி, ‘உலக அமைதி தூதுவராக'க் கருதப்படுகிறாள்.

நீங்களும் அனுப்பலாம்

ஆகஸ்ட் 6 - ஹிரோஷிமா, ஆகஸ்ட் 9 - நாகசாகி நினைவு நாள்களின்போது ஆயிரக்கணக்கான குழந்தைகள் சடாகோவின் நினைவகத்துக்கு வருவது வழக்கம். அன்றைக்கு ஆயிரக்கணக்கான காகிதக் கொக்குகளை அங்கே அவர்கள் சமர்ப்பிப்பார்கள். அமைதியை வலியுறுத்தும் கோஷங்களை எழுப்புவார்கள்.

சடாகோவின் நினைவகத்தில் ஆண்டுதோறும் ஒரு கோடி காகிதக் கொக்குகள் சமர்ப்பிக்கப்படுகின்றன. அந்த நினைவகத்துக்குச் சென்றுதான் காகிதக் கொக்குகளை சமர்ப்பிக்க வேண்டுமென்பதில்லை. உலக அமைதியை விரும்பும் யார் வேண்டுமானாலும் கீழ்க்கண்ட முகவரிக்குக் காகிதக் கொக்குகளை செய்து அனுப்பலாம். நீங்கள் விரும்பினால்,

காகிதக் கொக்கைச் செய்து அனுப்ப வேண்டிய முகவரி:

Peace Promotion Division, The City of Hiroshima, 1-5 Nakajima-cho Naka-ku, Hiroshima 730-0811, Japan

SCROLL FOR NEXT