மாயா பஜார்

நகைச்சுவை: வனக் குரல்

செய்திப்பிரிவு

8 ஜூலை 2020 ஆசிரியர் : சிங்காநல்லூர் சிங்கராஜன்

அன்னாசி வெடிகளை அழித்த பன்றிப்படை

பன்றிப்பாறை : அன்னாசி தோட்டத்தில் மனிதர்கள் வைத்திருந்த பத்துக்கும் மேற்பட்ட வெடிகளைக் கண்டுபிடித்து வனத்துறையில் உள்ள பன்றிப்படைகள் முற்றிலும் செயல் இழக்கச் செய்தன. துப்பாக்கிக் குழல் போன்ற பெரிய மூக்குகளின் வாயிலாக அன்னாசி வெடிகளைக் கண்டுபிடித்து அழித்த பன்றிப்படைகளுக்கு, வனத்துறை ரேஞ்சர் கஜராஜன் பரிசுகள் வழங்கிக் கவுரவித்தார். அன்னாசியை மோப்பம் பிடிக்கும்போது மயக்கமடைந்த இரண்டு பன்றிகளும் கரடிக்குகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

வீட்டில் முகக்கவசம் தேவை இல்லை

ஆமை ஊர்ந்தபுரம்: வீட்டில் இருக்கும்போது யாரும் முகக்கவசம் அணியத் தேவை இல்லை என்று வன நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆமை ஊர்ந்தபுரத்தில் முகக்கவசம் அணியாமல் தலையை நீட்டி வெளியே பார்த்த இரு ஆமைகள் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியது காவல்துறை. வீட்டில் இருக்கும் போது தலையை நீட்டிப் பார்த்தது குற்றமா, வீட்டில் முகக்கவசம் அவசியமா என்று ஆமைகள் வாதிட்டன. தர்மசங்கடத்தில் ஆழ்ந்த நீதிபதி ஒட்டகச்சிவிங்கியன், வீட்டில் இருக்கும்போது முகக்கவசம் தேவை இல்லை என்று உத்தரவு பிறப்பித்தார்.

பாட்டுப் போட்டி இல்லை

இசைக்குருவிபுரம்: ஆண்டு தோறும் இசைக்குருவிபுரம் கானகத்தில் நடக்கும் பாட்டுப் போட்டி, கரோனா காரணமாக நிறுத்தப்பட்டுள்ளதாக இசையருவி மன்றத் தலைவி குயிலம்மா நிருபர்களிடம் தெரிவித்தார். சமூக இடைவெளியுடன் இப்போது அலுவலகங்கள் செயல்பட்டாலும், இசையைப் பொறுத்தவரை தனிப்பாடல்கள் பாடுபவர்களைவிடக் குழுப் பாடல்கள் பாடுபவர்கள்தான் அதிகம். எனவே சமூக இடைவெளிவிட்டு, முகக்கவசம் அணிந்து குழுப்பாடல்களைப் பாடுவது சாத்தியம் இல்லை. எனவே இந்த ஆண்டு பாட்டுப் போட்டி நடைபெறாது என்று தெரிவித்தார்.

வெளியே வர முடியாத குடும்பம்

எலியூர்: கரோனா காலத்தில் வனராஜா பிறப்பித்த வளையடங்கு, பொந்தடங்கு, குகையடங்கு உத்தரவை அடுத்து வளை, பொந்து, குகைகளை விட்டு விலங்குகள் எதுவும் வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டது. எலியூரில் எட்டுக் குழந்தைகள் கொண்ட எலியப்பனின் குடும்பத்தினர் சாப்பிட்டுத் தூங்குவது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு இருந்ததால், கரோனா அடங்கு முடிந்த பின்னரும் வளையை விட்டு வெளியே வர முடியவில்லை. சுகாதாரத்துறை அதிகாரிகள், எலிகளை மூன்று நாட்கள் பட்டினி இருந்து மெலியுமாறு கூறியதை அடுத்து, வளையில் தந்தை எலியப்பன் உட்பட ஒன்பது எலிகளும் சாப்பிடாமல் இருக்கின்றன. உடல் மெலிந்து வளையிலிருந்து எலிகள் வெளியே வரும் நாளை எலியூர் விலங்குகள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றன!

இரவில் வகுப்பு வேண்டாம்

ஆந்தைப்பட்டி: இரவில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தக் கூடாது என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இசை, நாட்டிய வகுப்புகள் தற்போது இரவில் நடந்து வருகின்றன. இசை ஆசிரியர் சங்கீத பூஷணம் ஆந்தை ராஜா, இரவில் வகுப்புகள் நடத்துவதால் இரவில் தூங்கும் வழக்கம் உள்ள மாணவர்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். இதனிடையே இரவில் சங்கீதப் பயிற்சி செய்த கழுதையைச் சிலர் விரட்டிய சம்பவமும் நடந்துள்ளது. வேறு இசை ஆசிரியரை நியமித்து பகலில் வகுப்புகள் நடத்த வனராஜா முன்வர வேண்டும் என்று மாணவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

திரையரங்கத்தைத் திறக்க வேண்டும்

மூட்டைப்பூச்சிக்கோடு: கரோனா காலத்தில் மூடப்பட்ட திரையரங்குகளை விரைவில் திறக்க வேண்டும் என்று அகில இந்திய மூட்டைப்பூச்சி சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. திரையரங்குகள் கடந்த நான்கு மாதங்களாகப் பூட்டிக் கிடப்பதால் பட்டினியில் இருக்கும் மூட்டைப்பூச்சிகளின் நலனைக் கருத்தில்கொண்டு, திரையரங்குகளை உடனே திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டிருக்கிறது.

- எல். மீனாம்பிகா, தலைமை ஆசிரியர், வெள்ளாங்கோடு, கன்னியாகுமரி.

SCROLL FOR NEXT