கிரேயான்களை எடுத்துச் சுவரில், நோட்டுப் புத்தங்களில் வரைந்தும் கிறுக்கியும் பார்த்திருப்பீர்கள் இல்லையா? மெழுகு போலவே இருக்கும் இந்த கிரேயான்களை எப்படிச் செய்கிறார்கள். இதை யார் கண்டுபிடித்தது?
இன்று கிரேயான்கள் விதவிதமான நிறங்களில் கிடைக்கிறதல்லவா? ஆனால், முதன்முதலில் அவை கறுப்பு நிறத்தில் மட்டுமே கிடைத்தன என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? கிரேயான்கள் உண்மையிலேயே கரித்துண்டுகள் (சார்கோல்) மற்றும் எண்ணெயால் ஆன கலவைதான். அதில் மெழுகையும் கலந்த பிறகுதான் கிரேயான்கள் வலுவாகவும் பிடிப்பதற்கு வசதியாகவும் மாறின. ஆனால், இந்தக் கலவை நச்சுத் தன்மையுள்ளதாக இருந்தது.
அதற்குத் தீர்வு கண்டவர்கள் யார் தெரியுமா? அமெரிக்காவைச் சேர்ந்த இரண்டு சகோதரர்கள்தான் தீர்வு கண்டார்கள். அவர்கள் பெயர் எட்வின் பின்னி, ஹெரால்டு ஸ்மித். இவர்கள் சாயப் பொருட்கள் தயாரிக்கும் வணிக நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார்கள். இந்த நிறுவனத்திலிருந்து இரண்டு நிறங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டுக் கிரேயான்கள் வெளி வந்தன. சிவப்பு கிரேயான் பெயின்ட் பூசுவதற்கும், கறுப்பு கிரேயான் டயர்களுக்கு வண்ணம் சேர்ப்பதற்காகவும் பயன்படுத்தினார்கள்.
1900-ம் ஆண்டில் இவர்கள் பென்சில்கள் செய்து விற்கத் தொடங்கினர். ஒரு நாள் அவர்கள் பென்சில்களை விற்பதற்காக ஒரு பள்ளிக்குப் போனார்கள். அங்குச் சிறுவர்கள் கிரேயான்களக் கொண்டு படம் வரைந்து வண்ணம் பூசிக்கொண்டிருந்தனர். அது அவர்களுக்குக் கடினமாகவும், அந்த வண்ணம் விஷத்தன்மையுள்ளதாகவும் இருப்பதைக் கண்டார்கள். இதன்பிறகு அவர்கள் குழந்தைகளுக்கு நச்சுத்தன்மையற்ற வண்ணங்களைத் தயாரிக்கும் முயற்சியில் இறங்கினார்கள். 1903-ல் இப்போதுள்ள கிரேயான்களாக அவை வெளிவந்தன.
பின்னியின் மனைவி ஆலிஸ்தான் இந்த வித்தியாசமான கலர் பென்சிலுக்குக் கிரேயான் என்று பெயர் சூட்டியவர். சாக்பீஸ் போன்று இதன் வடிவம் இருப்பதால் இதற்கு அந்தப் பெயர் சூட்டப்பட்டது. கிரேயான் என்பது பிரெஞ்சு சொல். சாக்பீசிற்கு பிரெஞ்சு மொழியில் கிரை என்று பெயர். ஓலா என்றால் எண்ணெய். இந்த இரண்டு வார்த்தைகளையும் சேர்த்துதான் கிரேயானோ அல்லது கிரேயான் என்ற பெயரை ஆலிஸ் உருவாக்கினார்.
1957-ம் ஆண்டில் ஒரு பெட்டியில் 8 கிரேயான்கள்தான் வைக்கப்பட்டன. கறுப்பு, ஊதா, சிவப்பு, ஆரஞ்சு, பிரவுன், மஞ்சள், பச்சை வண்ணங்களில் வந்து அவை வரவேற்பைப் பெற்றன. அப்போது மொத்தம் 40 வண்ணங்களில் கிரேயான்கள் தயாரிக்கப்பட்டன. இப்போது 120 வண்ணங்களில் கிரேயான்கள் தயாரிக்கப்படுகின்றன. இன்று வாசனையுடனும், வெவ்வேறு வடிவங்களிலும் கிரேயான்கள் கிடைக்கின்றன.
கிரேயான்களை வைத்து வண்ணம் தீட்டும்போது எட்வின் பின்னிக்கும் ஹெரால்டு ஸ்மித்துக்கும் நன்றி கூற வேண்டுமில்லையா?
- மு. சத்யா, 7-ம் வகுப்பு,
நாடார் கமிட்டி உயர்நிலைப் பள்ளி, ராமநாதபுரம்,
திருநெல்வேலி.