மாயா பஜார்

குழந்தைகளுக்குப் பரீட்சை வேண்டாமே!

ஆதி

ஜான் ஹோல்ட் நினைவு நாள்: செப். 14

ஜான் ஹோல்ட் என்ற அமெரிக்க ஆசிரியர் உலகப் புகழ்பெற்றவர். அவர் புகழ்பெற்றதற்குக் காரணம், குழந்தைகள் ஏன் ஃபெயில் ஆகிறார்கள் என்பதைப் பற்றிய புத்தகத்தை எழுதியதுதான். நவீன பள்ளிக் கல்வி முறையில் உள்ள பிரச்சினைகள் பற்றி எச்சரிக்கை மணி அடித்து, கல்வியில் மறுமலர்ச்சி தேவை என்பதை வலியுறுத்திய இயக்கம் பிறக்க ஜான் ஹோல்ட் அடிப்படைக் காரணமாக இருந்தார்.

குழந்தைகளையும் அவர்களுடைய கல்வியையும் ஜான் ஹோல்ட் சிறப்பாக புரிந்துகொண்டதற்குக் காரணம், அவர்களை மிகவும் உன்னிப்பாகக் கவனித்துவந்ததுதான். அவர் ஆசிரியராக இருந்த காலத்தில் வகுப்பறையில் நடைபெறும் சின்னச்சின்ன சம்பவங்களையும் தன் டைரியில் குறிப்பெடுத்து வைத்துக்கொள்வாராம். இந்த டைரி குறிப்புகளின் அடிப்படையிலேயே ‘குழந்தைகள் ஏன் தோற்றுப் போகிறார்கள்' (How Children Fail) என்ற புத்தகத்தை எழுதினார். அது அவருடைய முதல் புத்தகம்.

ஏன் பிடிக்கவில்லை?

பள்ளியில் பெரும்பாலான குழந்தைகள் ஃபெயிலாவதற்கான காரணமாக அவர் சொல்வது: 1. அவர்கள் பயந்துபோயிருக்கிறார்கள். 2. அவர்களுக்குச் சலித்துப் போய்விட்டது 3. அவர்கள் குழப்பமாக இருக்கிறார்கள்.

குழந்தைகள் பயப்படுவதற்கு முதல் காரணம், தோற்றுப்போவது பற்றிதான். ஃபெயிலாவதால் பெற்றோர்களும் பெரியவர்களும் தங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கை, கனவுகள் சிதைந்துவிடுமோ, அதனால் அவர்கள் ஏமாற்றமும் அதிருப்தியும் அடைவார்களோ என்ற அச்சம்தான்.

குழந்தைகள் சலித்துப் போயிருப்பதற்குக் காரணம் என்னவென்றால், பள்ளியில் செய்யச் சொல்லப்படும் விஷயங்கள் முக்கியத்துவம் இல்லாமல், மந்தகதியில் இருப்பதுதான். அது மட்டுமல்லாமல் குழந்தைகளுக்கு இருக்கும் பரந்த அறிவையும், திறமையையும், செயலாற்றலையும் பயன்படுத்த முடியாத வகையில், பள்ளியின் எதிர்பார்ப்புகள் மிகவும் சாதாரணமாக இருப்பதும் சலித்துப்போக வைக்கிறது.

குழந்தைகள் குழப்பமாக இருப்பதற்குக் காரணம், பள்ளியில் அவர்களுடைய தலைக்குள் கொட்டப்படும் சொற்கள் அற்பமானவையாக இருப்பதுதான். குழந்தைகளுக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கும் மற்ற விஷயங்களுடன் பள்ளிப் பாடங்கள் முரண் படுகின்றன, நிஜ வாழ்க்கை பற்றி அவர்களுக்குத் தெரிந்திருக்கும் விஷயங்களுடன், அவை எந்தத் தொடர்பையும் கொண்டிருப்பதில்லை.

உலகைக் கவர்ந்தது

மரியா மாண்டிசோரியைப் போலக் குழந்தைகளின் இயற்கையான கற்கும் திறனை அடையாளம் காண வேண்டும் என்று ஜான் ஹோல்ட் வலியுறுத்தினார். ஒவ்வொரு மாணவரும் ஒவ்வொரு மாதிரி, அவர்களுடைய மனநிலையைச் சரியாக உள்வாங்கிக்கொண்டு ஆசிரியர் பயிற்றுவிக்க வேண்டும் என்கிறார்.

‘குழந்தைகள் ஏன் தோற்றுப்போகிறார்கள்' புத்தகத்தில் கொள்கை கோட்பாடுகளுடன் போட்டுக் குழப்பிக்கொள்ளாமல் மிக எளிமையான முறையில் தன் பார்வையை ஜான் ஹோல்ட் முன்வைத்தது வாசகர் களைக் கவர்ந்தது. 1964-ல் வெளியான குழந்தைகள் ஏன் தோற்றுப்போகிறார்கள் புத்தகம், உலகப் புகழ்பெற்றது. கல்வி உலகில் புதிய மாற்றங்கள் உருவாகக் காரணமாக அமைந்தது.

ஆசிரியர் அவதாரம்

அதேநேரம் ஜான் ஹோல்ட் ஆசிரியராக மாறியது, தற்செயலாக நடந்த விபத்துதான். 1943-ல் பட்டப் படிப்பு முடித்த கொஞ்சக் காலத்திலேயே பார்பெரோ என்ற ராணுவ நீர்மூழ்கி கப்பலில், அவர் வேலைக்கு போனார். அங்கே நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டார். அந்த நீர்மூழ்கிக் கப்பல் இரண்டாம் உலகப் போரின்போது பேர்ல் ஹார்பரை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, ஹிரோஷிமாவில் அமெரிக்கா அணுகுண்டு வீசிய செய்தி வந்தது. அது ஜான் ஹோல்ட்டை கடுமையாகப் பாதித்தது.

ராணுவப் பணியிலிருந்து விடுபட்டவுடன் விவசாயம் செய்யப் புறப்பட்டார். ஆனால், அவருடைய சகோதரியின் ஆலோசனையின் பேரில் கொலராடோ ராக்கி மலைப் பள்ளியைப் பார்க்கச் சென்றார். அந்தப் பள்ளிக்குத் தேவையான பயிர்கள், பள்ளி வளாகத்திலேயே விளைவிக்கப்பட்டுவந்ததும் அதற்குக் காரணம்.

உத்வேக வழிகாட்டி

அங்கே சேர்ந்த ஹோல்ட், மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்கவும் செய்தார். ஆனால், ஓராண்டிலேயே நிர்வாகத்துக்கும் அவருக்கும் சின்னச் சின்ன சண்டைகள் வந்தன. பரீட்சை வைப்பது, குழந்தைகளின் கற்கும் திறனைப் பாதிக்கும் என்று அவர் சொல்லிவந்தார். இந்தக் காரணத்தால் பள்ளியிலிருந்து அவரை நீக்கிவிட்டார்கள். அடுத்தடுத்த ஆசிரியப் பணிகளும் அப்படியே முடிந்தன என்றாலும், 14 ஆண்டுகள் ஆசிரியராக இருந்திருக்கிறார் ஹோல்ட்.

பில் ஹல் என்ற ஆசிரியரோடு இணைந்து புதிய கற்பித்தல் முறைகளை அவர் உருவாக்கினார். குழந்தைகளின் கற்கும் முறை தொடர்பாக ஆழமான புரிதலுடன் எழுதினார், கூட்டங்களில் பேசினார். கல்வி தொடர்பாக 12 புத்தகங்களை எழுதியுள்ளார்.

பள்ளியில் கற்பித்த காலத்தில் குழந்தைகளைச் சிறப்பாகப் புரிந்துகொண்ட ஜான் ஹோல்ட், திருமணமே செய்துகொள்ளவில்லை. 1985-ல் புற்றுநோயால் இறந்தார். அவருடைய புத்தகங்கள் உலகெங்கும் உள்ள லட்சக்கணக்கான ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கு இன்றைக்கும் மிகப் பெரிய வழிகாட்டிகளாக உத்வேகம் தந்துவருகின்றன.

SCROLL FOR NEXT