மாயா பஜார்

இப்போது என்ன செய்கிறேன்? - பறவைகளிடமிருந்து கதைகளை உருவாக்குகிறேன்!

செய்திப்பிரிவு

உதயசங்கர், எழுத்தாளர்

காலையில் வேப்ப மரத்துப் பறவைகளின் பாடல்கள் எழுப்பிவிடும். மொட்டை மாடியில் நடைப் பயிற்சி செய்யும்போது, காகங்களின் பள்ளிக்கூடத்தைப் பார்க்க முடியும். ஒளிந்து குரல் கொடுக்கும் குயில்களின் சங்கீதத்தைக் கேட்க முடியும். தவிட்டுக்குருவிகளின் சாகசத்தை ரசிக்க முடியும். தேன்சிட்டுகள் விர்ரென்று பறக்கும்.

சிவப்புக் கொண்டைக்குருவி வேப்ப மரக் கிளைகளில் தவ்வி தவ்விக் குதிக்கும். அணில்கள் உற்சாகமாக எட்டிப் பார்த்துவிட்டுப் போகும். வீட்டின் பின்னால் இருக்கும் எலுமிச்சை மரத்தின் கீழ் செம்போத்து பறவை ஈரமண்ணைக் கிளறி புழுக்களைக் கொத்திக்கொண்டிருக்கும். இப்படிக் காலை நேரம் பறவைகளுடன் கழிகிறது.

நண்பர்கள், எழுத்தாளர்களுடன் பேசுவேன். வீட்டு வேலைகளைச் செய்வேன். பிறகு மாடியிலிருக்கும் படிப்பறைக்குச் சென்றுவிடுவேன். தினம் ஒரு புத்தகம் என்று வாசிப்பைத் தொடர்கிறேன். சிறார்களுக்கான புத்தகங்களை எல்லாம் தேடி வாசித்துவிடுகிறேன். சிறார்களுக்காகத் தினம் ஒரு கதை எழுதி என்னுடைய வலைப்பூவில் பிரசுரித்துக்கொண்டிருக்கிறேன். மாலையில் மீண்டும் மொட்டைமாடி. பறவைகள் தங்களுடைய கூடுகளுக்குத் திரும்பும். வேப்பமரத்தில் எல்லாப் பறவைகளின் கூக்குரல்களும் கலவையாகக் கேட்டுக்கொண்டிருக்கும். அவற்றிடம் இருந்துதான் கதைகளை நான் உருவாக்குகிறேன்.

இரவில் குட்டி இளவரசனை எழுதிய அந்துவான் எக்சுபரி, அற்புத உலகில் ஆலிஸ் எழுதிய லூயி கரோல், டாம் சாயரின் சாகசங்களை எழுதிய மார்க் ட்வைன், அழ. வள்ளியப்பா, வாண்டு மாமா, பூவண்ணன், ரேவதி, கிருஷ்ணன் நம்பி, பெ. தூரன், தம்பி சீனிவாசன் ஆகியோர் காத்துக்கொண்டிருப்பார்கள். அவர்களுடைய நூல்களில் ஒன்றை வாசித்துவிட்டுத்தான் தூங்கச் செல்கிறேன்.

SCROLL FOR NEXT