மாயா பஜார்

அன்பு காட்டிய அன்னை!

கனி

அன்னை தெரசா என்று சொன்னவுடன் அவர், ஏழை எளியவர்களுக்கும், தொழுநோயாளிகளுக்கும் சேவை செய்ததுதான் உடனே ஞாபகத்துக்கு வரும் இல்லையா? தொழுநோயாளிகளைப் பார்க்கவே மக்கள் அஞ்சிய ஒரு காலத்தில், அன்னை தெரசா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தன் கையால் சேவை செய்தவர். அது மட்டுல்ல, தன் வாழ்க்கையை முழுமையாகப் பொதுமக்கள் சேவைக்காக அர்பணித்துக்கொண்டவர் அன்னை தெரசா.

அன்னை தெரசா பிறந்த ஊர் எது தெரியுமா? மாசிடோனியாவில் உள்ள ஸ்கோப்ஜெ. 105 ஆண்டுகளுக்கு முன்னால் இதே நாளில்தான் (26-08-1910) அன்னை தெரசா பிறந்தார். கொஞ்ச நாட்களில் தெரசாவோட குடும்பம் அல்பேனியா நாட்டுக்குக் குடிபோய்விட்டார்கள். இவரோட அம்மா, அப்பா இவருக்கு வைத்த பெயர் ஆக்னஸ் கோன்ஞா போஜாஜியூ. ஆக்னஸ் என்றால் அல்பேனிய மொழியில் ரோஜாவின் அரும்பு என்று அர்த்தமாம். அன்னை தெரசாவுக்கு 8 வயது இருக்கும்போதே அவரோட அப்பா இறந்துவிட்டார்.

தெரசாவோட அம்மா இவரை நல்லபடியாகப் படிக்க வைத்தார். பாடப் புத்தகத்தைப் படிப்பதைவிட கிறிஸ்தவ மதப் போதனைகளைச் சின்ன வயதிலேயே நிறைய படிக்க ஆரம்பித்தார் ஆக்னஸ். கிறிஸ்தவ மிஷினரி செய்யும் பணிகளையும் விரும்பிப் படிக்க ஆரம்பித்தார். தெரசாவுக்கு 12 வயதாகும்போதே அவர் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார். அது என்ன முடிவு தெரியுமா? மதம் சார்ந்த பணிகளுக்குத் தன்னை அர்ப்பணிக்க வேண்டும் என்பதுதான் அது.

அவருக்கு 18 வயது ஆனபோது அயர்லாந்தில் இருக்கும் லோரேட்டோ அருட் சகோதரிகளின் கிறிஸ்தவ மிஷினரியில் சேர்ந்தார். இதன்பிறகு அவருடைய அம்மா, சகோதரியை அவர் பார்க்கவேயில்லை. அந்தளவுக்குச் சமயப் பணியில் மூழ்கிவிட்டார். அயர்லாந்தில் இருக்கும்போது ஆங்கில மொழியைக் கற்றுக்கொண்டார்.

அதுவும் எதற்காகத் தெரியுமா? இந்தியாவில் உள்ள குழந்தைகளுக்குக் கல்வி கற்றுக் கொடுப்பதற்காகத்தான். ஆக்னஸ் முதன் முதலாக டார்ஜிலிங் நகருக்குதான் வந்தார். அப்போ அவருக்கு 19 வயதுதான். இதன்பிறகு அவர் கல்கத்தா சென்று ஏழைக் குழந்தைகளுக்குக் கல்வியையும், வறுமையாலும், நோயாலும் வாடிய மக்களுக்குச் செய்த சேவைகளும் கணக்கிலடங்காதவை.

ஆக்னஸ் கோன்ஞா போஜாஜியூ என்ற அவரது பெயர் அன்னை தெரசா என்று எப்படி மாறியது? அவர் துறவு வாழ்க்கையை லோரேட்டோ கன்னியர் சபையில் மேற்கொண்டார். அந்தச் சபையின் பாதுகாவலராக இருந்த பிரெஞ்சு தேசத்தைச் சேர்ந்த தெரசாவின் நினைவாகத் தன் பெயரை ‘தெரசா’ என்று மாற்றிக்கொண்டார். பிற்காலத்தில் தான் செய்த சேவைகள் மூலமாக அன்னை தெரசா என அழைக்கப்பட்டார்.

SCROLL FOR NEXT