ஊட்டி சென்றதிலிருந்து ரஞ்சனிக்கும், கவினுக்கும் மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. ஊட்டி குளிர் புதிய அனுபவமாக இருந்தது. புதிய இடங்களைப் பார்க்கப் பார்க்க இருவரும் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தார்கள்.
ஊட்டி ஏரியில் படகுச் சவாரி செல்லப் போகிறோம் எனத் தெரிந்ததும் உற்சாகத்தில் கத்தினார்கள். ஏரியின் படகுத் துறைக்கு அனைவரும் சென்றனர். அங்கு விதவிதமான படகுகள் நிறுத்தப்பட்டிருந்தன. தங்களுக்கான ஒரு படகைத் தேர்வு செய்து நிலா டீச்சர் குடும்பத்தினர் புறப்பட்டார்கள்.
நிலா டீச்சரும் கவினும் படகில் இருந்த பெடல்களை மிதித்தனர். படகு நகரத் தொடங்கியது. ரஞ்சனியும், அப்பாவும் படகின் இரண்டு பக்கங்களில் நின்றுகொண்டு உற்சாகமாகக் குரல் எழுப்பினர்.
அப்போது, “படகில் நிற்கக் கூடாது. உட்காருங்கள்” எனக் கரையிலிருந்து படகுத் துறை ஊழியர் ஒருவர் குரல் கொடுத்தார்.
“நம்ம படகில் நாம் நின்றால் அவருக்கு என்ன வந்தது?” என கவின் கோபத்துடன் கேட்டான்.
“அவருக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. நமக்குத்தான் பிரச்சினை” என்றார் நிலா டீச்சர்.
“படகில் நின்றால் அப்படி என்ன பிரச்சினை வந்துவிடும்?” என்று கேட்டாள் ரஞ்சனி.
“ஆமா. முதலில் நீங்கள் ரெண்டு பேரும் உட்காருங்கள். ஏன் படகில் நிற்கக் கூடாது என்பதற்கான காரணத்தை நான் சொல்கிறேன்” என்றார் நிலா டீச்சர்.
“அப்பா! இங்கே வந்து நீங்கள் பெடலை மிதியுங்கள்” என்று சொல்லிவிட்டு இடம் மாறி உட்கார்ந்து கொண்டான் கவின். அப்பா பெடலை மிதிக்கவும், படகு வேகமாகப் போனது.
படகின் இன்னொரு இருக்கையில் உட்கார்ந்திருந்த ரஞ்சனி, “சீக்கிரம் சொல்லுங்கம்மா” என்று நச்சரித்தாள்.
“பூமியில் உள்ள எல்லாப் பொருள்களிலும் புவியீர்ப்பு மையம் (Centre of gravity) உள்ளது. அதுபோல, மனித உடலிலும் புவியீர்ப்பு மையம் செயல்படுகிறது. நமது செயல்பாடுகளுக்கு ஏற்ப புவியீர்ப்பு மையம் இடம் மாறிக் கொண்டேயிருக்கும். அதாவது நின்று கொண்டிருக்கும்போது புவியீர்ப்பு மையம் உயரமான இடத்துக்கும், உட்காரும்போது தாழ்வான இடத்துக்கும் மாறும்.
நாம் நிற்கும்போதும், நடக்கும்போதும், ஓடும்போதும் நம் உடலில் புவியீர்ப்பு மையம் செயல்படும் இடத்திலிருந்து தரைக்கு ஒரு செங்குத்துக் கோட்டை வரைவதாகக் கற்பனை செய்துகொள்வோம். அப்படியானால், அந்தக் கோடு தரையைத் தொடும் இடம் என்பது நம் இரு கால்களின் பாதங்களுக்கும் இடையே அமைய வேண்டுமில்லையா? அப்போதுதான் நாம் நிலைதடுமாறாமல் இருக்கவும் முடியும். ஒரு வேளை அந்தக் கோடு, இரு பாதங்களுக்கு இடைப்பட்ட பகுதியைத் தாண்டி வெளியே சென்றால் நம்மால் உறுதியாக நிற்க முடியாது, கீழே விழுந்து விடுவோம்.”
“அட! இதில் இவ்வளவு இருக்கா?” என்று ஆச்சரியத்துடன் கேட்டான் கவின்.
“இன்னும் சொல்கிறேன்” என்று தொடர்ந்தார் நிலா டீச்சர். “தண்ணீரில் ஓயாது எழும் அலைகள் காரணமாக நாம் செல்லும் இந்தப் படகு அங்கும் இங்கும் ஆடிக்கொண்டே செல்வதைப் பாருங்களேன். படகு மட்டுமல்ல, படகு ஆடுவதற்கு ஏற்ப நம் உடலும் அசைந்தாடுகிறது அல்லவா?
இந்த நேரத்தில் நாம் நின்றுகொண்டிருந்தால், நம் உடலின் புவியீர்ப்பு மையத்திலிருந்து தரைப் பகுதியைத் தொடும் செங்குத்துக் கோடு, நமது இரு கால்களுக்கும் இடைப்பட்ட பகுதியைத் தாண்டி, திடீரென வெளியே சென்றுவிடலாம். அதனால், எதிர்பார்க்காத நேரத்தில் நாம் கீழே விழுந்து விடுவோம். அதனால்தான் படகில் நிற்காதீர்கள் எனப் படகுத் துறை ஊழியர் எச்சரிக் கிறார்” என விளக்கினார் நிலா டீச்சர்.
“உட்கார்ந்துவிட்டால் கீழே விழ மாட்டோமா?” என்று அந்தப் பதிலுக்கும் எதிர் கேள்வி கேட்டாள் ரஞ்சனி.
“நாம் உட்கார்ந்துவிட்டால் நம் உடலில் புவியீர்ப்பு மையம் செயல்படும் இடமும் தாழ்ந்துவிடும். நாம் நிற்கும்போது செங்குத்துக் கோடு தரையைத் தொடும் இடத்திலிருந்து புவியீர்ப்பு மையம் செயல்படும் இடம் வரை இருந்த உயரம், உட்காரும்போது குறைந்துவிடுகிறது. இதன் காரணமாகச் செங்குத்துக் கோடு தரையைத் தொடும் இடம், நம் உடல் பரப்பைத் தாண்டி வெளியே செல்லும் வாய்ப்பு குறைந்து போய்விடும். அதனால், நாம் கீழே விழும் வாய்ப்பும் குறைந்துவிடும்” என்றார் நிலா டீச்சர்.
“அடடே... படகு சவாரி சந்தோஷமாக இருப்பதைப் போலவே, புவியீர்ப்பு மையம் பற்றிய தகவல்களும் ஆச்சரியமாகத்தான் உள்ளன” என்றார் கவினின் அப்பா.
“புவியீர்ப்பு மையப் புள்ளியை வைத்தே ஏராளமான கதைகளைச் சொல்ல முடியும். அதைப் பற்றி இன்னொரு முறை சொல்கிறேன்” என்றார் நிலா டீச்சர்.
அதற்குள் அவர்களுடைய படகு ஆடிஆடி அடுத்த கரையை அடைந்தது.