மிது கார்த்தி
புனல் வழியாகத் தண்ணீரை ஊற்றி விளையாடி இருப்பீர்கள். அதிலும் அறிவியல் இருக்கிறது. ஒரு சோதனையைச் செய்வோமா?
என்னென்ன தேவை?
பிளாஸ்டிக் பாட்டில்
புனல்
தண்ணீர்
பிளாஸ்டிக் களிமண்
எப்படிச் செய்வது?
# பாட்டிலின் வாய்ப் பகுதியில் புனலை வையுங்கள்.
# பாட்டிலின் வாய்ப் பகுதியையும் புனலையும் களிமண்ணால் ஒட்டி வையுங்கள். காற்றுப் புகாதவாறு இறுக்கமாகக் களிமண் இருக்க வேண்டும்.
# புனல் வழியாகத் தண்ணீரை ஊற்றுங்கள். என்ன நடக்கிறது எனக் கவனியுங்கள்.
# புனல் வழியாகத் தண்ணீர் வேகமாகச் செல்லாமல், க்ளக்... க்ளக்... என்ற ஒலியுடன் தண்ணீர் விட்டுவிட்டுச் செல்வதைக் காண முடியும். என்ன காரணம்?
காரணம்
தண்ணீரை பாட்டிலில் ஊற்றுவதற்கு முன்பு, அதில் காற்று நிறைந்திருக்கும். பாட்டிலின் வாய்ப் பகுதியைக் களிமண்ணால் அடைத்த பிறகு, காற்று வெளியே வருவதற்கான ஒரே வழி புனலின் துளை மட்டுமே. தண்ணீரைப் புனல் வழியாக ஊற்றும்போது புனலின் துளையைத் தண்ணீர் அடைத்துக்கொள்கிறது. ஆனால், புவி ஈர்ப்பு விசையின் காரணமாகத் தண்ணீர், புனல் வழியே பாட்டிலுக்குள் விழச் செய்யும்.
அப்போது அங்குள்ள காற்று இடம்பெயர்ந்து, தண்ணீர் வரும் அதே துளை வழியே வெளியேற முயற்சிக்கும். இதனால், ஒரே நேரத்தில் தண்ணீர் பாட்டிலுக்குள் இறங்கும். இன்னொரு பக்கம் காற்று வெளியேறும். அதன் காரணமாகச் சத்தம் வருகிறது. காற்று ஓர் இடத்தை அடைத்துக்கொள்ளும் என்பதை இதன் மூலம் அறிந்துகொள்ளவும் முடியும்.