இத்தாலியில் உள்ள பைசா கோபுரத்திற்குப் போட்டியாக இன்னொரு கோபுரம் உள்ளது. அது, அபுதாபியில் உள்ள ‘கேபிடல் கேட்’ எனப்படும் கோபுரம்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பைசா நகரக் கோபுரம் கி.பி. 1500-ல் இருந்து தானாகவே கொஞ்சம் கொஞ்சமாக சாய ஆரம்பித்தது. 5.5. டிகிரி கோணம் வரை சாய்ந்த கோபுரத்தை 2001-ல் பழுது பார்த்து 3.99 டிகிரி கோணத்திற்கு நிமிர்த்தினார்கள். ஆனால் கேபிடல் கேட் கோபுரம் தானாக சாயவில்லை. சாய்வாகவே கட்டப்பட்டிருக்கிறது. இதுதான் இந்தக் கோபுரத்தின் சிறப்பு.
பைசா கோபுரத்தைக் காட்டிலும் 4 மடங்கு சாய்வு. அதாவது 18 டிகிரி கோணத்திற்கு இந்தக் கோபுரம் சாய்ந்திருக்கிறது. 160 மீட்டர் உயரம் கொண்ட இந்தக் கோபுரத்தில் 35 தளங்கள் உள்ளன. முதல் தளங்கள் மட்டுமே செங்குத்தாக அமைக்கப்பட்டிருக்கின்றன. அதற்கு அடுத்தடுத்த தளங்கள் படிப்படியாகச் சாய்வாகக் கட்டப்பட்டுள்ளன.
பைசா கோபுரம் போல இது மேலும் சாயாமல் இருக்க, நடுப்பகுதியிலிருந்து மிகப்பெரிய தூண் எழுப்பப்பட்டுள்ளது. சாய்ந்துள்ளதற்கு எதிர்த் திசையில் கட்டடத்தை இழுத்தவாறு மிகப் பெரிய கம்பிகள் பொருத்தப்பட்டுள்ளன.
காற்று, வளிமண்டல அழுத்தத்தால் கோபுரம் பாதிக்கப்படாமல் இருக்க ‘டயா கிரிட்’ என்ற அதிநவீனத் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தியிருக்கிறார்கள். 2007-ம் ஆண்டில் தொடங்கி 2011-ம் ஆண்டு டிசம்பரில் கட்டி முடிக்கப்பட்ட இந்தக் கோபுரம், மனிதர்களால் உருவாக்கப்பட்ட முதல் சாய்ந்த கோபுரம்.
அப்புறமென்ன, கின்னஸில் இடம் பிடிக்க இது போதாதா? இந்தக் கோபுரத்தின் இறுதி கட்டுமானப் பணிகள் 2010ல் நடந்த போதே, இது கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இடம் பிடித்துவிட்டது.