என்ன எல்லோரும் பரீட்சைக்குப் படிக்க ஆரம்பிச்சிட்டீங்களா? என்னைய மாதிரி புத்தகப் புழுவா இருந்திருந்தா, புத்தகத்த படிச்சா மட்டும்போதும், பரீட்சை எல்லாம் எழுத வேண்டாம்.
இந்தப் பரீட்சைகள்லயும் சிலருக்கு வரலாற்றுப் பரீட்சை பிடிக்கிறதில்லை. ஏன்னா, வரலாறு எப்பவுமே அதிகம் பேசப்படாததா இருக்கு. ஆனா, வரலாறு முக்கியம்னு புரிய நமக்கு நிறைய படிப்பினைகளும் பிரச்சினைகளும் தேவைப்படுகின்றன.
வரலாறு என்றால் வெறும் ஆண்டுகளும் அரசர்களுடைய பெயரும் மட்டுமல்ல. வரலாறு என்பது நமது நேற்றைய கதை. அது சுவையானது. அதைச் சுவாரசியமாகச் சொல்ல முடியும் என்பதைப் பலர் நிரூபித்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் சுபத்ரா சென் குப்தா, புகழ்பெற்ற வரலாற்று எழுத்தாளர்.
இந்திய வரலாற்றின் மிகப் பெரிய திருப்புமுனைகள் என்று அசோகர், ராஜசிம்ம பல்லவன், அக்பர் ஆகியோருடைய ஆட்சிக் காலங்கள், காந்தி நடத்தின தண்டி யாத்திரை ஆகியவற்றைக் கூறலாம். இந்த வரலாற்றுச் சம்பவங்கள், மன்னர்கள் காலத்தை குழந்தைகளுக்குப் புரிவதுபோல் எளிய கதைகளாக சுபத்ரா கூறியிருக்கிறார். இந்த நூல்களுக்கு ஓவியம் வரைந்தவர் தபஸ் குஹா. அவருடைய எளிமையான ஓவியங்கள், வரலாற்றுக் காலத்தைப் பிரதிபலிப்பதுபோல் உள்ளன. இந்த வரலாற்று வரிசை நூல்களை பிரதம் புக்ஸ் வெளியிட்டுள்ளது.
உப்புக்கு ஒரு போராட்டம்
உணவில் அத்தியாவசியத் தேவையான உப்புக்கும் ஆங்கிலேயக் காலனி அரசு வரி விதித்திருந்தது. இதனால் இந்திய மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தார்கள். இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும்விதமாகக் கடல் தண்ணீரைக் காய்ச்சி உப்பு எடுத்து எதிர்ப்பு தெரிவிக்க மகாத்மா காந்தி விரும்பினார்.
ஆங்கிலேய அரசின் உப்பு வரிச் சட்டத்துக்கு எதிராக 1930 மார்ச் 12-ம் தேதி தண்டி நடைப்பயணத்தை அவர் தொடங்கினார். இன்றுடன் தண்டி யாத்திரை தொடங்கி 90 ஆண்டுகள் நிறைவடைகின்றன. சபர்மதி ஆசிரமத்தில் தொடங்கிய இந்த நடைப்பயணம் 385 கி.மீ. தொலைவுக்கு அப்பால் இருந்த தண்டி கடற்கரை நகரை நோக்கிச் சென்றது. 24 நாட்கள் நீடித்த இந்தப் பயணத்தில் 81 தொண்டர்கள் பங்கேற்றனர்.
இந்த நடைப்பயணத்தில் பங்கேற்றவர்களில் மிகவும் இளையவர் யார் தெரியுமா? சபர்மதி ஆசிரமப் பள்ளியில் படித்த விட்டல் லீலாதர் தக்கர். அப்போது அவருடைய வயது 16. பங்கேற்றவர்களில் முதுமையானவர் காந்திதான். அப்போது அவருடைய வயது 61. உப்புச் சத்தியாகிரகத்தின் தொடர்ச்சியாக இந்திய விடுதலைப் போராட்டம் வலுப்பெற்றது. பெண்களும் ஏராளமான சாதாரண மக்களும் ஆங்கிலேயர்களுக்கு எதிராகத் திரண்டு போராடத் தொடங்கினார்கள்.
போர் இன்றி புகழ்பெற்றவர்
மௌரிய வம்சத்தில் வந்த அசோகர், தன் பெயரை கல்வெட்டுகளில் ‘தேவனாம் பியாதசி’ என்றே பொறித்துக் கொண்டார். இதற்கு, ‘கடவுளால் விரும்பப்பட்ட கனிவு கொண்டவன்’ என்று அர்த்தம். இன்றைய பாட்னாவே, அன்றைய பாடலிபுத்திரம். இதுவே அசோகரின் தலைநகரம். அசோகரின் மெய்க்காவலர் படையில் பெரும்பாலோர் பெண்களாக இருந்தார்கள்.
பொதுவாக எல்லா அரசர்களையும் ஓவியங்கள் அழகாகச் சித்தரித்திருக்கும். ஆனால், பேரரசர் அசோகரோ பெரிய அழகுடன் இல்லை. இருந்தபோதும் தன்னுடைய ஆட்சித்திறத்தால் அவர் புகழ்பெற்றார்.
கலிங்கத்தில் (இன்றைய ஒடிசா) நடைபெற்ற போரில் பேரழிவைக் கண்ட பிறகு, நாடு பிடிப்பதற்காக நடத்தப்படும் போர்களை அசோகர் நிறுத்தினார். மற்ற அரசர்கள் அனைவரும் போரிடும் திறத்தாலேயே புகழ்பெற்றிருந்த நிலையில், அசோகர் மட்டுமே போரை நிறுத்தியதால் புகழ்பெற்றவர் ஆனார்.
புத்தரின் கொள்கைகளைப் பின்பற்றி பௌத்தராக அசோகர் மாறினார். பௌத்த மதத்தைச் சிறப்பிக்கும் வகையில் பல்வேறு தூண்களை அவர் எழுப்பினார். உத்தரப்பிரதேசத்தின் சாரநாத்தில் உள்ள அசோகர் தூணின் உச்சியில் இருந்த நான்கு சிங்கங்கள் இந்திய அரசின் சின்னமாகவும் தர்மச்சக்கரம் தேசியக்கொடியிலும் இடம்பெற்றுள்ளன.
மாமல்லனின் துறைமுகம்
உலகப் புகழ்பெற்ற மாமல்லபுரம் என்ற பெயரைக் கேட்டவுடன் மனதில் தோன்றுவது பல்லவர்களே. முன்பு மகாபலிபுரம் என்றழைக்கப்பட்ட ஊர் இன்றைக்கு மாமல்லபுரம் என்றே அழைக்கப்படுகிறது. மாமல்லன் என்பது முதலாம் நரசிம்மவர்ம பல்லவனின் பட்டப் பெயர். மல்யுத்தத்தில் அவர் சிறந்து விளங்கியதால், மாமல்லன் எனப் புகழ்பெற்றிருந்தார். அவருடைய பெயரே மாமல்லபுரத்துக்கு சூட்டப்பட்டது.
பல்லவர்கள் 7, 8-ம் நூற்றாண்டு களில் தமிழகத்தையும் சுற்றுவட்டாரப் பகுதிகளையும் ஆட்சிபுரிந்தார்கள். பல்லவர்களின் காலத்தில் மாமல்லபுரம் துறைமுகமாகத் திகழ்ந்தது. இந்தோனேசியா, மியான்மர், கம்போடியா (காம்போஜா) போன்ற நாடுகளுக்கு மாமல்லபுரத்திலிருந்து பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.
கலிங்கத்தில் உள்ள தாம்ரலிபிதி (இன்றைய மேற்கு வங்க தாம்லுக்) துறைமுகத்துக்கும் பொருட்கள் ஏற்றுமதி ஆகியுள்ளன. அரிசி, நெய், வாசனை திரவியங்கள், சந்தனம், தேவதாரு மரக்கட்டைகள் போன்றவை அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்கள். ராஜசிம்மன் எனப்பட்ட இரண்டாம் நரசிம்மவர்ம பல்லவனின் காலத்தில்தான் புகழ்பெற்ற மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் கட்டப்பட்டது.
அரியணை ஏறிய சிறுவன்
இந்தியாவில் முகலாய ஆட்சியை பாபர் நிறுவியிருந்தாலும், அவருக்குப் பிறகு அவருடைய மகன் ஹுமாயுனால் தன் ஆட்சிப் பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியவில்லை. பாபரின் பேரன் அக்பர்தான் முகலாய ஆட்சியை இந்தியாவில் நிலைப்படுத்தினார். முகலாய அரசர்களில் மகத்தானவர் பேரரசர் அக்பர். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு ஆட்சி புரிந்தார்.
புதிய ஆடைகள் அணிவதற்கு, பட்டம் விடுவதற்கு, மாம்பழம் சாப்பிடுவதற்கு அவருக்குப் பிடிக்கும். சிறுவர்களுக்கான இதுபோன்ற ஆசைகளுடன் இருந்த தன் 14 வயதிலேயே அக்பர் அரியணை ஏறினார். அப்போது தொடங்கி தன் வாழ்நாளில் எந்தப் போரிலும் தோற்காமல் இருந்தார்.
ஃபதேபூர்சிக்ரி என்ற புதிய நகரத்தையும் அக்பர் நிர்மாணித்தார். உத்தரப்பிரதேசத்தின் ஆக்ரா மாவட்டத்தில் இந்த நகரம் அமைந்துள்ளது. அதற்கு ‘வெற்றியின் நகரம்’ என்று அர்த்தம். குஜராத்தைக் கைப்பற்றிய வெற்றிக்குப் பிறகு இந்த நகரம் நிர்மாணிக்கப்பட்டது. முகலாய மன்னர்களின் அடையாள மாக ஷாஜஹான் காலத்தில் ஆக்ராவில் கட்டப்பட்ட தாஜ்மகாலும் மயில் சிம்மாசனமும் உலகப் புகழ்பெற்றன.
- ஆதி, தொடர்புக்கு: valliappan.k@hindutamil.co.in
இந்த நூல்களை இலவசமாக வாசிக்கலாம். இலவச மின்னூல் இணைப்புகள்:
ராஜ ஊர்வலம் - https://bit.ly/2TFLyze
வீடு திரும்பிய கப்பல் - https://bit.ly/2wyBq3c
ரசா ராஜாவைச் சந்திக்கிறான் - https://bit.ly/2TH7kCH
தண்டி பயணம் - https://bit.ly/2Ire6qJ