சு. கோமதிவிநாயகம்
தேசிய சப் ஜூனியர் பளு தூக்கும் போட்டி, பள்ளிகளுக்கான தேசிய விளையாட்டுப் போட்டி, கேலோ இந்தியா ஆகிய போட்டிகளில் தங்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார் ருத்ரமாயன்! பளு தூக்குதலில் ஸ்னாட்ச், க்ளீன் & ஜெர்க் பிரிவுகளில் மொத்தம் 313 கிலோ எடை வரை தூக்கியிருக்கிறார்.
கோவில்பட்டியில் வ.உ.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்பு படிக்கும் ருத்ரமாயன், “எங்கள் வீட்டருகே ஏராளமானோர் காலை, மாலை வேளைகளில் உடற்பயிற்சி செய்வார்கள். இவர்களுக்கு அப்பாவும் மாமாவும் பயிற்சி வழங்குவார்கள். அதைப் பார்த்துதான் எனக்கும் ஆர்வம் வந்தது.
5-ம் வகுப்பு படிக்கும்போது பளு தூக்கும் பயிற்சி எடுக்க விரும்புவதாக அப்பாவிடம் சொன்னேன். அவர் சம்மதிக்கவில்லை. என்னுடைய பிடிவாதத்தால் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார். தினமும் காலையிலும் மாலையிலும் பயிற்சி எடுப்பேன். பிரஸ், ஸ்குவாட் பயிற்சிகளின்போது உடலில் வலி அதிகமாக இருக்கும். ’வலியே வெற்றிக்கு வழி’ என்று ஊக்கம் தருவார் அப்பா.
“முதலில் 30 கிலோ எடையைத் தூக்கினேன். இப்போது ஸ்னாட்ச், கிளீன் ஜெர்க் என 313 கிலோ வரை பளு தூக்கி, அனைத்திலும் தங்கப் பதக்கம் பெற்றுள்ளேன். என் பள்ளி ஆசிரியர்களும் மிகுந்த ஒத்துழைப்புக் கொடுத்து வருகிறார்கள். என் அப்பா காமன்வெல்த் போட்டியில் பளு தூக்குதலில் வெள்ளிப் பதக்கம் வென்றவர். இந்தியாவுக்குப் பதக்கம் வெல்வதே எனது லட்சியம்” என்கிறார்.