ஜாதவ் பயேங் 
மாயா பஜார்

புதியதோர் உலகம் 03: காடுகள் சொல்லும் கதைகள்

செய்திப்பிரிவு

ஆதி

வணக்கம். புத்தகப் புழுவான நான், என்னுடைய நண்பனான மண்புழு சொன்ன ரெண்டு புத்தகங்களைப் பத்தி இந்த முறை உங்க கிட்ட சொல்லப் போறேன். நெடிதுயர்ந்த இமய மலையின் அடிவாரத்தில் உள்ளது அந்தக் காடு. அந்தக் காட்டில் உள்ள மரத்தை வெட்ட ஒரு நிறுவனம் வந்தது. அங்கு வளமாக வளர்ந்திருந்த சிர், பைன், தேவதாரு, சாம்பல் போன்ற மரங்களை வெட்ட அந்த நிறுவனம் திட்டமிட்டது. அந்த நிறுவனத்துக்கு மாநில அரசின் அனுமதியும் கிடைத்திருந்தது.

அந்த நிறுவனம் எதற்காக மரங்களை வெட்ட வந்தது தெரியுமா? கிரிக்கெட் மட்டைத் தயாரிப்பதற்காக. பொழுதுபோக்குக்கான ஒரு விளையாட்டு, பிரபலமடையும்போது எப்படிப்பட்ட பின்விளைவுகள் ஏற்படுகின்றன என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு. அந்தப் பகுதியில் போட்டியா பழங்குடிகளும் மலைவாழ் மக்களும் வாழ்ந்துவந்தார்கள்.

காட்டிலிருந்து கிடைக்கும் விறகு-சுள்ளிகள், வீடு கட்டுவதற்கு மரத்துண்டுகள், காடுபடு பொருட்கள் போன்றவற்றைக் கொண்டே அவர்களுடைய வாழ்க்கை நகர்ந்துவந்தது. தங்கள் வாழ்வாதாரத் தேவைக்கு மட்டும், காட்டை அவர்கள் பயன்படுத்திவந்தார்கள். மாறாக, லாப நோக்கத்துடன் காட்டை அழிக்கவில்லை.

கட்டி அணைத்துக் காப்பாற்று

நிறுவனங்கள் பெருமளவில் மரங்களை வெட்டியதால் சுற்றுச்சூழல் சமநிலை குலைந்து, மண்சரிவு ஏற்பட்டது. 1970-ல் அலக்நந்தா ஆற்றில் திடீர் பெருவெள்ளம் வந்தது. இதனால் வீடுகள், கால்நடைகளுடன் மனிதர்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்கள். அந்தப் பகுதிவாழ் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள்.

தனியார் நிறுவனங்கள் காட்டை அழிப்பதால்தான், இதுபோன்ற இயற்கை சீர்குலைவு ஏற்படுகிறது என்பது அவர்களுக்குப் புரிந்தது. இயற்கை சீர்குலைக்கப்படுவதையும், இயற்கையைச் சார்ந்த தங்கள் வாழ்வாதாரம் பறிபோவதையும் அவர்களால் ஏற்க முடியவில்லை.

நிறுவனங்கள் காட்டை அழிக்க இனிமேலும் அனுமதிக்கக் கூடாது என்று அவர்கள் நினைத்தார்கள். அதேநேரம், தங்கள் போராட்டத்தை வன்முறை இன்றி, காந்தி காட்டிய அகிம்சைவழியில் நடத்துவது என்று முடிவு செய்தார்கள். மரங்களைக் கட்டி அணைத்துக்கொண்டு வெட்டுவதைத் தடுப்பதே அவர்கள் கண்டெடுத்த வழிமுறை. மரங்களை இப்படிக் கட்டி அணைத்துக் காப்பாற்றும் முறைக்கு ‘சிப்கோ' என்று பெயர். அதுவே அந்த இயக்கத்தின் பெயராக மாறியது. சமோலி கிராமத்தைச் சேர்ந்த பழங்குடித் தலைவர் கௌரா தேவி, பெண்களை இணைத்துக் காடுகளைக் காப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டார்.

அந்தப் பகுதியில் உள்ளூர் தொழில்களை மேம்படுத்தும் சேவையில் சாந்தி பிரசாத் பட் ஈடுபட்டுவந்தார். மரங்களை அணைத்துப் பாதுகாக்கும் போராட்ட வழிமுறையை அந்தப் பெண்களுக்குப் பரிந்துரைத்தவர் அவர்தான். சிப்கோ அமைப்பின் தலைவராக இருந்தவர் மூத்த சூழலியல் செயற்பாட்டாளர் சுந்தர்லால் பகுகுணா.

சிப்கோ இயக்கம் நடத்திய போராட்டங்களுக்குப் பிறகு, அந்தப் பகுதிக் காடுகளைக் காப்பதற்கான சட்டத்தை மாநில அரசு நிறைவேற்றியது. இன்றைக்கு சிப்கோ இயக்கம் உலகளாவிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கமாக மதிக்கப்படுகிறது.

இது பழம் பெருமை வாய்ந்த காட்டை மக்கள் கூட்டாகச் சேர்ந்து காப்பாற்றிய உண்மைக் கதை. அதேநேரம் அசாம் பகுதியில் தனிநபர் ஒரு காட்டை உருவாக்கியதற்காக உலகப் புகழ்பெற்றார். அவர்தான் ஜாதவ் பயேங்.

ஒரு மனிதன், ஒரு காடு

பல ஆண்டுகளுக்கு முன்னால் பிரம்மபுத்திரா ஆற்றங்கரையில் ஜாதவ் நடந்து சென்றுகொண்டிருந்தார். பிரம்மபுத்திரா பிரம்மாண்டமான ஆறு. அதனால் ஆற்றுக்கு நடுவில் மணல்திட்டுகள், தீவுகள்போல் உருவாகியிருக்கும். அப்படிப்பட்ட ஒரு தீவு மிகவும் வறண்டுபோய், உயிரற்றுக் காணப்பட்டது. நிலம் வறண்டு கிடந்ததாலும், சூரியன் சுட்டெரித்துக்கொண்டிருந்ததாலும் உருவான கடும் வெப்பத்தில் பாம்புகள் வாடித் தவித்துக்கொண்டிருந்தன.

இதை எப்படியாவது தடுக்க வேண்டும், நிலைமையை மாற்ற வேண்டுமென ஜாதவ் நினைத்தார். தன் கிராமத்துக்குச் சென்று மூங்கில் கன்றுகளை எடுத்துவந்து அந்த மணல்தீவில் நட்டார். அந்தத் தீவில் நல்ல தண்ணீரும் கிடையாது, தாவரங்களும் கிடையாது. அதனால், மூங்கில் கன்றுகளை நட்டுவளர்ப்பது ஜாதவுக்குப் பெரும்பாடாக இருந்தது. ஆனாலும் ஜாதவ் தளர்ந்துவிடவில்லை. அந்தத் தீவில் தாவரங்களை வளர்ப்பதை தவம்போல் தொடர்ந்தார். மூங்கில் கன்றுகள் சிறிது சிறிதாக வளர்ந்தன.

அதன்பிறகு வேறு பல மரங்களின் விதைகளையும் மரக்கன்றுகளையும் ஜாதவ் கொண்டுவந்து நட்டார். மரக்கன்று நடுவது, விதை ஊன்றுவது போன்றவை அத்துடன் முடிந்துவிடுகிற வேலைகள் அல்ல.

ஒரு மரக்கன்று தானே பிழைத்துக்கொள்ளும்வரை, நீருற்றிப் பராமரிக்க வேண்டும். அதை ஜாதவ் செய்தார். ஒவ்வொரு கன்றுக்கும் செய்தார். அவருடைய மரக்கன்றுகள் மண்ணில் வேர்பிடித்து வளரத் தொடங்கின. சில பூச்சிகள் வந்தன. வறண்டு கிடந்த அந்த மண், மெதுவாக உயிர்பெறத் தொடங்கியது.

ஒரு காலத்தில் வெறும் மணல்தீவாக இருந்த அந்தப் பகுதியில், இப்போது எங்கெங்கும் பசுமை நிறைந்திருந்தது. பறவைகள் வந்தன; பாலூட்டிகள் வந்தன; ஊர்வனவும் வந்தன. அந்தப் பகுதி ஓர் இயற்கையான காடுபோல் மாறத் தொடங்கியது. ஒரு தாவர, உயிரினக் கூட்டம் சமநிலையை அடைந்து, சொந்தமாக இயங்குவதுதான் காடு. ஒரு தனி மனிதன் உருவாக்கிய காடு அது.

அசாம் மாநிலத்தின் மஸூலி பகுதியில் மூலாய் எனும் இடத்தில் இந்தக் காடு உள்ளது. ஜாதவ் கற்பனை மனிதரல்ல, நிஜத்தில் நம்மோடு வாழ்ந்துவருபவர். 1979-ல் 16 வயதுச் சிறுவனாக இருந்தபோது மூலாய் மணல்தீவில் காடு வளர்க்கும் பணியை அவர் தொடங்கினார். 550 ஹெக்டேர் பரப்பில் இன்றைக்கு அந்தக் காடு பரந்து விரிந்திருக்கிறது. ஜாதவுக்கு பத்ம விருது கிடைத்திருக்கிறது.

ஒரு காட்டை உருவாக்கியது போதும் என்று நினைத்து ஜாதவ் பேசாமல் இருந்துவிடவில்லை. இப்போதும் விதை, கன்றுகளுடன் தாவரங்கள் வளர்ப்பதை கடமையாகச் செய்துவருகிறார்.

சிப்கோவும் ஜாதவும் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் இரண்டு கண்கள்னு சொல்லலாமா!

காடு என்ன தரும்?
மண்ணைத் தரும்
தண்ணீரைத் தரும்
தூய காற்றைத் தரும்

இந்தக் காடு எங்கள் தாயின் வீடு
எப்பாடு பட்டாவது இதை நாங்கள் காப்போம்

மரங்களைக் கட்டித் தழுவுங்கள்
அவை வெட்டப்படுவதைத் தடுத்து
அவற்றைக் கட்டித் தழுவுங்கள்

இவை நம்முடைய மலையின் சொத்து
நம்மிடமிருந்து பறிக்கப்படுவதிலிருந்து
அவற்றைக் காப்பாற்றுங்கள்.

கட்டுரையாளர் தொடர்புக்கு: valliappan.k@hindutamil.co.in

வேரூன்றிவிட்டது சிப்கோ, ஜெயந்தி மனோகரன், தமிழில்: ஜெயராமன், பிரதம் புக்ஸ்
இலவச மின்னூல்: https://storyweaver.org.in/stories/12089-verunrivittadu-chipko

ஜாதவ்வின் காடு, விநாயக் வர்மா, தமிழில்: என். சொக்கன், பிரதம் புக்ஸ்

இலவச மின்னூல்: https://storyweaver.org.in/stories/5171-jadavin-kaadu

இந்த இரண்டு நூல்களையும் இலவசமாகவே வாசிக்கலாம்.

SCROLL FOR NEXT