மாயா பஜார்

உலகின் குட்டி ஷூ

மிது கார்த்தி

என்னதான் வீட்டில் உங்களுக்கென ஷூ இருந்தாலும், அப்பாவின் ஷூ-வுக்குள் காலைவிட்டு நடப்பது என்றால் ரொம்ப குஷியாக இருக்குமில்லையா? பெரிய ஷூ-வைப் போட்டுக்கொள்ள உங்களைப் போன்ற குழந்தைகளுக்கு எப்போதுமே ரொம்பத்தான் ஆசை.

நீங்கள் பயன்படுத்தும் ஷூவைவிட குட்டி ஷூவைப் பார்த்தால் என்ன செய்வீர்கள்? அதைக் காலில் போட்டு நடக்க முயற்சிப்பீர்களா? ஆனால், படத்தில் நீங்கள் பார்க்கும் இந்தக் குட்டி ஷூவை உங்களால் காலில் போட்டு நடக்க முடியாது. ஏனென்றால் இது விரல் நுனியை விடவும் சிறிய அளவு உள்ள குட்டியூண்டு ஷூ.

உலகில் சிலருக்கு தினமும் பயன்படுத்தும் பொருட்களை மிகவும் குட்டியாகச் செய்து பார்ப்பது என்றால் அலாதி பிரியம். சீனாவில் செஃப்பங் நகரில் உள்ள ரென் டாங்கிலி என்பவரும் அப்படித்தான். குட்டிகுட்டியாகப் பொருட்களைச் செய்வதுதான் இவரோட பொழுதுபோக்கு. இங்கே நீங்கள் படங்களில் பார்க்கும் இந்த ஷூ-வைச் செய்ததுகூட இவர்தான்.

இந்தக் குட்டி ஷூவைச் செய்ய இவர் சில்க் துணியின் நூலைப் பயன்படுத்தியிருக்கிறார். அரிசி அளவுக்கு மட்டுமே இந்த ஷூவைச் செய்திருக்கிறார் டாங்கிலி. இந்த ஷூ-தான் உலகின் குட்டி ஷூ என்ற பெயரையும் எடுத்திருக்கிறது. அரிசி அளவுக்கு மட்டுமல்ல, பாசிப் பயறு, சோயா பயறு அளவிலும் இவர் குட்டி ஷூக்களைச் செய்து அசத்தியிருக்கிறார்.

இந்த அழகான குட்டி ஷூவை டாங்கிலி செய்து 5 ஆண்டுகள் ஆகி விட்டன. இந்தச் சாதனையை இதுவரை யில் யாரும் முறியடிக்கவில்லை. இவரது சாதனையை முறியடிக்கும் வரை இதுதான் உலகின் குட்டி ஷூவாக இருக்கும்!

SCROLL FOR NEXT