மாயா பஜார்

கணிதப் புதிர்கள் 18: தொண்ணூறிலிருந்து எழுபத்தைந்து...

செய்திப்பிரிவு

என். சொக்கன்

‘90 கிலோவா!’

எடைகாட்டும் இயந்திரத்தை நம்ப முடியாமல் பார்த்தார் வளர்செல்வன். அவருடைய முகத்தில் அதிர்ச்சியும் கவலையும் சூழ்ந்தன.

சிறுவயதிலிருந்தே வளர்செல்வன் நன்றாகச் சாப்பிடுவார், போதுமான உடலுழைப்பு கிடையாது. உடற்பயிற்சி செய்யலாம் என்றால், அந்த நேரத்தைத் தொலைக்காட்சி எடுத்துவிடுகிறது.

இதனால், வளர்செல்வனுடைய உடல் பெருத்துக்கொண்டே சென்றது. நடக்கும்போது மூச்சுவாங்கியது. இதை எல்லாம் உறுதிப்படுத்துவதுபோல், ‘உங்களுடைய எடை 90 கிலோ’ என்றது இந்த இயந்திரம்.

வளர்செல்வன் யோசனையோடு பக்கத்திலிருந்த அட்டவணையில் தன்னுடைய உயரத்தைத் தேடினார். ‘இந்த உயரத்துக்கு நீங்கள் 75 கிலோ இருக்க வேண்டும்’ என்று இருந்தது.

ஆக, அவர் 15 கிலோ எடையைக் குறைத்தாக வேண்டும். அதற்கு என்ன வழி என்று யோசித்தபடி நடந்தார் வளர்செல்வன்.

முதலில், ஓர் உணவியல் வல்லுநரைச் சந்தித்து ஆலோசனை பெற வேண்டும். உணவுப் பழக்கத்தை மாற்றியமைக்க வேண்டும். உடற்பயிற்சியைத் தொடங்க வேண்டும், ஒழுங்காகத் தூங்கி எழ வேண்டும்… இப்படிப் பல யோசனைகள் தோன்றின.

அதேநேரம், தன்னுடைய வீட்டிலிருக்கும் மற்றவர்களைப் பற்றியும் யோசிக்கத் தொடங்கினார் வளர்செல்வன். அவர்கள் எல்லாம் சரியான எடையில் இருப்பதாகவே தோன்றியது. ஆனாலும் அதை உறுதிப்படுத்திக்கொள்வது நல்லது.
மருத்துவர், உணவு வல்லுனர் ஆகியோரிடம் தன்னுடைய பிரச்சினைகளைச் சொல்லி ஆலோசனை பெற்றுக்கொண்டார். எடைபார்க்கும் இயந்திரம் ஒன்றை வாங்கிவந்தார்.

”இனிமேல் உணவைக் கட்டுப்படுத்தப் போறேன், உடற்பயிற்சி செய்யப் போறேன், அதுக்கெல்லாம் பலன் இருக்கான்னு இந்தக் கருவி எனக்குச் சொல்லும்” என்றார் வளர்செல்வன்.

எடைபார்க்கும் இயந்திரத்தை ஓரமாக வைத்துவிட்டு, ஒரு நோட்டை எடுத்தார். அதில் அன்றைய தேதியைப் போட்டு ‘90 கிலோ’ என்று எழுதினார்.

அதற்குப் பக்கத்தில் ஒரு கோடு போட்ட வளர்செல்வன், அங்கு தன்னுடைய மனைவி பெயரை எழுதினார். அவருடைய எடையைக் குறித்துக்கொண்டார். இதேபோல், தன்னுடைய மகன், அப்பா, அம்மா என வீட்டிலுள்ள அனைவருடைய எடையையும் தனித்தனியாகக் குறித்தார்.

”இனிமேல் நீங்க எல்லோரும் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை அன்னிக்கு இந்த இயந்திரத்துல எடை பார்த்து, இந்த நோட்டில் எழுதி வைக்கணும், நான் மட்டும் ஒவ்வொரு நாளும் எடை பார்க்கணும்” என்றார் வளர்செல்வன்.

"ஏன்?”

”என்னோட எடை ரொம்ப அதிகமா இருக்கு. அடுத்த சில மாதங்களில் எடையைப் படிப்படியாக் குறைக்கப் போறேன், தினமும் எடை பார்த்தால் நமக்கே ஒரு விழிப்புணர்வு வரும், ஊக்கமும் கிடைக்கும்.”

அன்று இரவு, அந்த எடை நோட்டை மீண்டும் ஒருமுறை புரட்டிப் பார்த்தார். அதிலிருந்த எண்களைப் பலவிதமாகக் கூட்டிக்கழிக்கத் தொடங்கியது அவருடைய மனம்.

”நம்ம வீட்ல இருக்கிற 5 பேரோட சராசரி எடை 66 கிலோ. இன்னொரு வியப்பான விஷயம், உங்க நாலு பேரோட எடைக்கு நடுவுலயும் சரியா 8 கிலோ வேறுபாடு இருக்கு” என்றார் வளர்செல்வன்.

”புரியலையே?”

”இதோ பையனோட எடையைவிட அம்மாவோட எடை 8 கிலோ அதிகம், அவங்களைவிட உன்னோட எடை 8 கிலோ அதிகம், உன்னைவிட அப்பாவோட எடை 8 கிலோ அதிகம்” என்றார் வளர்செல்வன்.

”கணக்கெல்லாம் இருக்கட்டும். எடையைக் குறைக்கப் பாருங்க” என்றார் அவர் மனைவி.

மறுநாள் முதல் உணவுப் பழக்கத்தில், வாழ்க்கை முறையில் பல மாற்றங்களைக் கொண்டுவந்தார். அதன்மூலம் அவருடைய எடை மெதுவாகக் குறையத் தொடங்கியது. புத்துணர்ச்சியாக உணரத் தொடங்கினார், வேலைகளை இன்னும் சுறுசுறுப்பாகச் செய்தார், அதனால் கிடைத்த மகிழ்ச்சி அவருடைய உடல்நலனை மீட்டுத் தந்தது.

இப்போது வளர்செல்வனைப் பார்க்கிறவர்கள் எல்லாம் வியந்தார்கள்.

பல மாதங்களுக்குப் பிறகு வளர்செல்வன் தன்னுடைய இலக்காகிய 75 கிலோவை எட்டினார்.

இப்போது, உங்களுக்கு ஒரு கேள்வி. வளர்செல்வன் எடைக் குறைப்பு முயற்சியைத் தொடங்கிய நாளன்று, அவருடைய வீட்டிலிருந்த மற்ற நால்வருடைய எடை என்ன?


(அடுத்த வாரம், இன்னொரு புதிர்)

கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: nchokkan@gmail.com

SCROLL FOR NEXT