குழந்தைகளே,
இதுவரை சொல்லிக் கொடுத்த மேஜிக்குகளைச் செய்து பார்த்தீர்களா? இந்த வாரம், திரும்பவும் நாணயத்தை வைத்து ஒரு சுவாரஸ்யமான மாய வித்தையைச் செய்து பார்ப்போமா?
என்னென்ன தேவை?
பிளாஸ்டிக் பாட்டில், நாணயம்.
மேஜிக் செய்வது எப்படி?
l மேஜையின் முன்பு எதிர்ப்புறம் அமர்ந்துகொள்ளுங்கள். பிளாஸ்டிக் பாட்டிலை எடுத்துக்கொள்ளுங்கள்.
l இப்போது நாணயத்தைப் பாட்டிலுக்குள் கொண்டு வர வைக்கவா, என்று சொல்லிக்கொண்டே நாணயத்தைப் பாட்டிலில் குத்திக் குத்திக் காட்டுங்கள். ஆனால் நாணயம் போகாது.
l பாட்டிலின் பக்கவாட்டில் நாணயத்தை வேகமாகச் செலுத்துங்கள். அந்த நாணயம் பாட்டிலுக்குள் சென்று விடும். பாட்டிலின் வாய் குறுகலாக இருப்பதால் நாணயம் வெளியேயும் வராது. நாணயத்தை எப்படிப் பாட்டிலுக்குள் கொண்டு வந்தேன் பார்த்தீர்களா? என்று சொல்லி உங்கள் நண்பர்களை வியக்க வையுங்கள்.
l இப்போது நாணயத்தை வெளியே எடுக்கவா என்று சொல்லியபடி பாட்டிலை மேலும் கீழும் ஆட்டிக் காட்டுங்கள். நாணயம் வெளியே வராது. பக்கவாட்டில் கையை வைத்துக்கொண்டு பாட்டிலை ஆட்டி லாவகமாக நாணயத்தை எடுத்துவிடலாம். இது பார்ப்பவர்களைப் பிரமிக்க வைக்கும்.
மேஜிக் எப்படிச் சாத்தியம்?
l பாட்டிலின் பக்கவாட்டில் கத்தியால் நேராகக் கிழித்து, வெட்டிகொள்ள வேண்டும். பக்கவாட்டில் அந்த வெட்டு இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். ஆனால், எதிரே இருப்பவர்களுக்கு இது தெரியக் கூடாது.
l பாட்டில் வெட்டப்பட்ட இடத்தில் நாணயத்தை வேகமாகக் குத்தும்போது, அது உள்ளே சென்று விடுகிறது. இதே போன்று, வெட்டுப்பகுதி வழியாக லாவகமாக நாணயத்தை வெளியே எடுக்கவும் முடிகிறது.
தொடர்ந்து பயிற்சி செய்து இந்த மேஜிக்கை செய்து காட்டி உங்கள் நண்பர்களை அசர வைக்கலாம்.