மாயா பஜார்

சாண்டா க்ளாஸ்

செய்திப்பிரிவு

புனித நிக்கோலஸ் என்று அழைக்கப்படும் சாண்டா க்ளாஸ் புராணக்கதைகளிலும் நாட்டுப்புறப் பாடல்களிலும் இடம்பெறும் ஒரு கதாபாத்திரம். கிறிஸ்துமஸுக்கு முதல் நாள் இரவு, குழந்தைகளுக்குப் பரிசுப் பொருட்களைக் கொடுப்பவராகச் சித்தரிக்கப்படுகிறார்.

டச்சு மொழியின் ‘சிண்டர்கிளாஸ்’ என்பதிலிருந்து மருவி உருவானதுதான் சாண்டா க்ளாஸ். நவீன சாண்டா க்ளாஸ் கி.பி. 4-ம் நூற்றாண்டில் கிரேக்கத்தில் (தற்போது துருக்கியில்) வாழ்ந்த கிறித்துவப் பேராயர் புனித நிக்கோலஸைக் குறிக்கிறது. இவர் கருணையும் அன்பும் கொண்டவர். ஏழை எளியவர்களுக்குப் பரிசுப் பொருட்களை ரகசியமாகக் கொடுத்து மகிழ்விப்பவர். அதனால் மக்களிடம் பிரபலமாக இருந்தவர்.

இவரிடமிருந்து கிறிஸ்துமஸுக்கு முதல் நாள் இரவு சாண்டா க்ளாஸ் வேடமணிந்தவர்கள் குழந்தைகளுக்குப் பரிசுப் பொருட்களைக் கொடுக்கும் வழக்கம் உருவாகி, பரவியது. 1823-ம் ஆண்டு தாமஸ் நாஸ்ட் என்ற ஓவியரால் சான்டா க்ளாஸின் உருவம் தீட்டப்பட்டது. இது புத்தகங்கள், திரைப்படங்கள், விளம்பரங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் உலகம் எங்கும் பிரபலமானது. சாண்டா க்ளாஸ் வடதுருவத்தைச் சேர்ந்தவராகவும் 8 பனிமான்கள் இழுக்கும் பனிச்சறுக்கு வண்டியில் ஏறிப் பரிசுப் பொருட்களோடு வருபவராகவும் நம்பப்படுகிறார்.

வெள்ளைத் தாடி, சிவப்பு அங்கி, வெண் ரோமத்தினால் ஆன கழுத்துப்பட்டி, கண்ணாடி, சிவப்புத் தொப்பி, காலணிகள் அணிந்து, கையில் மணியுடன் முதுகில் ஏராளமான பரிசுகளைச் சுமந்துகொண்டு சாண்டா க்ளாஸ் வேடம் அணிந்த கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் குழந்தைகளை நோக்கி வருகிறார்கள்.

- வி. சாமுவேல்

SCROLL FOR NEXT