மாயா பஜார்

இந்தப் பாடம் இனிக்கும் 23: புதிய பாதை தரும் புத்தகங்கள்

செய்திப்பிரிவு

ஆதி

பதினோராம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலில் ‘அறிவை விரிவு செய்' பகுதியில் பல நூல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்க சில நூல்கள் குறித்த விவரம்:

நல்ல தமிழ் எழுத வேண்டுமா,

அ.கி. பரந்தாமனார், பாரி நிலையம்

தமிழ் உரைநடைக்குத் திட்டவட்டமான இலக்கணம் வகுக்கப்பட வில்லை. பண்டைத் தமிழுக்கான இலக்கணத்தையே பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். இந்த நிலையில் கடந்த நூற்றாண்டில் நவீன, எளிய நடைக்கு மாறிய தமிழ் மொழியை எப்படித் தவறின்றி எழுதுவது? இந்தக் கேள்வி நம்மில் பலருக்கும் இருக்கும். இதற்கு நடைமுறை எடுத்துக்காட்டுகளுடன், உரிய காரண-காரியங்களோடு நல்ல வகையில் தமிழை எழுதுவதற்கு இந்த நூல் சந்தேகமின்றிக் கைகொடுக்கும்.

இராஜராஜேச்சரம்,

குடவாயில் பாலசுப்ரமணியன்,

சுவாமி தயானந்தா கல்வி அறக்கட்டளை, மஞ்சக்குடி
தஞ்சை என்றவுடனும், மாமன்னன் ராஜராஜன் என்றவுடனும் நம் மனத்தில் தோன்றுவது கம்பீரமாக உயர்ந்து நிற்கும் தஞ்சை பெரிய கோயில். இந்தக் கோயிலுக்கு ராஜராஜன் சூட்டிய பெயர் இராஜராஜேச்சரம். இந்தக் கோயிலின் கலை அழகு, கட்டிட நுட்பங்கள், தனித்தன்மைகள் குறித்து விரிவாக ஆய்வுசெய்யப்பட்டு எழுதப்பட்ட நூல் இது.

பறவை உலகம்,

சாலிம் அலி, நேஷனல் புக் டிரஸ்ட்

இந்தியாவுக்கு மட்டுமல்லாமல், உலகத்துக்கே இந்தியத் துணைக் கண்டப் பறவைகள் குறித்து எடுத்துரைத்தவர் 'பறவை மனிதர்' என்றழைக்கப்படும் சாலிம் அலி. இந்தியாவில் பரவலாகக் காணக்கூடிய பறவைகள் குறித்த இயற்கை அறிவியல்ரீதியில் சுருக்கமாகவும் எளிமையாகவும் விளக்கி அவர் எழுதிய களக்கையேடு இது.

பனை மரமே பனை மரமே,

ஆ. சிவசுப்ரமணியன், காலச்சுவடு

குறிப்பிட்ட காலம்வரை யாரும் நட்டு வளர்க்காத, அதேநேரம் மனித குலத்துக்கு கணக்கற்ற பயன்களை வழங்கிவந்தது பனை மரம். இந்த மரத்தின் முக்கியத்துவம் உணரப்படாமல் பெருமளவு அழிக்கப்பட்டு விட்டது. பனை மரத்தின் சமூக, பண்பாட்டு முக்கியத்துவம், அவசியம் குறித்து இந்த நூலில் விரிவாக எழுதியுள்ளார் மூத்த தமிழ் ஆய்வாளர் ஆ. சிவசுப்ரமணியன்.

இயற்கை வேளாண்மை: அ முதல் ஃ வரை,

நம்மாழ்வார், விகடன்

தமிழகத்தில் இயற்கை வேளாண்மை பரவலாவதற்கும், அதன் நன்மைகள் உணரப்படுவதற்கும் முக்கியக் காரணமாக இருந்தவர் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார். இயற்கை வேளாண்மையின் மகத்துவம், அவசியம் குறித்து நம்மாழ்வார் பல புத்தகங்களை எழுதியுள்ளார். அந்த வகையில் இந்த நூலும் முக்கியமானது.

வாடிவாசல்,

சி.சு. செல்லப்பா, காலச்சுவடு

ஜல்லிக்கட்டு எனப்படும் ஏறுதழுவுதல் நம் பண்பாட்டி லிருந்து பிரிக்க முடியாத ஒரு மரபுத் தொடர்ச்சியின் அடையாளம். ஜல்லிக்கட்டு நடைபெறும்போது காளைகள் சீறி வெளியே வரும் பகுதிதான் வாடிவாசல். ஜல்லிக்கட்டு குறித்து நவீனத் தமிழில் எழுதப்பட்ட சிறந்த படைப்பு வாடிவாசல்.

சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்,

ஆர். பாலகிருஷ்ணன், பாரதி புத்தகாலயம்,

இந்தியாவின் பண்டைய நாகரிகம் சிந்து சமவெளி. சில ஆயிரம் ஆண்டுகளுக்குச் செழித்திருந்த சிந்துவெளி பிறகு வீழ்ச்சி கண்டது. இன்றைக்கு சிந்துவெளி மனிதர்களின் வழித்தோன்றல்கள் எங்கு வாழ்கிறார்கள் என்ற கேள்வி எழுவது இயல்பு. சிந்துவெளி மக்கள் தென்னிந்தியாவில், தமிழகத்தில் வாழ்கிறார்கள். சிந்துவெளி ஊர்களுக்கும் தமிழ் ஊர்களுக்கும் இடையிலான ஒப்புமை அடிப்படையிலான கருதுகோளை இந்த நூலில் விளக்கியிருக்கிறார் ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப்பணி அதிகாரி ஆர். பாலகிருஷ்ணன்.

நான் வித்யா,

லிவிங் ஸ்மைல் வித்யா, கிழக்கு

ஆண்கள், பெண்களைப் போலவே திருநங்கைகள், திருநம்பிகள் நம்மிடையே வாழ்ந்துவருகிறார்கள். அவர்களைப் பற்றிய மூடநம்பிக்கைகள், புரிதலின்மையே பரவலாக உள்ளது. அவர்களைப் புரிந்துகொள்வதற்கு வழிகாட்டும் தன்வரலாற்று நூல்களில் ஒன்று இது.

யானைகள் அழியும் பேருயிர்,

ச. முகமது அலி, இயற்கை வரலாற்று அறக்கட்டளை

‘யானைகள் அட்டகாசம்’, ‘யானைகள் ஊருக்குள் புகுந்து தொல்லைத் தருகின்றன‘ என்ற ஒருசார்பான செய்திகளை அவ்வப்போது கேள்விப்படுகிறோம். ஆனால், யானைகள் காட்டைவிட்டு வெளியே வரவில்லை. மனிதர்களான நாம்தான் யானைகள் வாழும் காடுகளை ஆக்கிரமித்திருக்கிறோம். யானைகள் குறித்த இயற்கை அறிவியல் தொடங்கி தமிழ் மரபில் யானைகள் பார்க்கப்பட்ட விதம்வரை விரிவாக எழுதப்பட்டுள்ள இந்த நூல், தமிழ் இயற்கையியல் நூல்களில் பெரும் சலனங்களை ஏற்படுத்தியது.

சிவானந்த நடனம்,

ஆனந்த குமாரசுவாமி (கி.அ. சச்சிதானந்தம்), சந்தியா பதிப்பகம்

இந்தியக் கலை, அதன் சிறப்பு, தனித்தன்மை போன்றவற்றை உலகப் புகழ்பெற்ற நடராஜர் சிலையின் அடிப்படையில் விளக்கி மூத்த கலை ஆய்வாளர் ஆனந்த குமாரசுவாமி எழுதிய நூலின் தமிழாக்கம்.

ஆசிரியரைக் கவர்ந்த நூல்

பதினோராம் வகுப்புத் தமிழ் பாடநூலில் தரப்பட்டிருக்கும் ‘அறிவை விரிவு செய்' நூல்களில், தனக்குப் பிடித்த நூல் குறித்து திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலைத் தமிழாசிரியர் கோ. சுந்தர் பகிர்ந்துகொள்கிறார்:

18-ம் நூற்றாண்டின் புதுவை வரலாற்றை அறிய உதவும் ‘ஆனந்தரங்கர் நாட்குறிப்பு’ உரைநடைப் பகுதியை, எழுத்தாளர் பிரபஞ்சனின் ‘வானம் வசப்படும்’ என்ற சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவலின் துணையுடன் வகுப்பில் நடத்தினேன். அப்போது எனக்குப் பிடித்த வரலாற்று நூல் பற்றி மாணவர் ஒருவர் கேட்டார்.

எஸ். ராமகிருஷ்ணனின் ‘மறைக்கப்பட்ட இந்தியா‘ (விகடன்) எனும் நூல் எனக்குப் பிடித்தது. இந்தியாவுக்கு வரலாறு இல்லை, சில சம்பவங்களே உள்ளன என்ற இகழ்ச்சிப் பார்வையைப் போக்கவந்த நூல் இது.

இந்த நூலில் ‘தாகூரின் கல்வி முறை’, ‘யானைப் போர்’, ‘பெண்கள் பள்ளி’ ஆகிய கட்டுரைகள் பாடநூலில் உள்ள பல பகுதிகளை நடத்தப் பேருதவியாக உள்ளன.

கட்டுரையாளர்
தொடர்புக்கு:
valliappan.k@hindutamil.co.in

SCROLL FOR NEXT