மிது கார்த்தி
தண்ணீருள்ள ஒரு குவளையில் ஐஸ்கட்டிகளைப் போட்டால், அந்த ஐஸ்கட்டிகள் உருகி, தண்ணீர் வழியுமா, வழியாதா? இதை அறிந்துகொள்ள ஒரு சோதனையைச் செய்து பார்ப்போமா?
என்னென்ன தேவை?
கண்ணாடி டம்ளர்
வெதுவெதுப்பான தண்ணீர்
சிறு ஐஸ்கட்டிகள்
எப்படிச் செய்வது?
* முதலில் கண்ணாடி டம்ளரில் வெதுவெதுப்பான நீரைப் பாதி அளவு ஊற்றிக்கொள்ளுங்கள்.
* இரண்டு அல்லது மூன்று ஐஸ்கட்டிகளை அந்த டம்ளரில் போடுங்கள்.
* இப்போது மீண்டும் தண்ணீரை எடுத்து டம்ளரில் ஊற்றுங்கள்.
* தண்ணீர் வழியும் அளவுக்கு விளிம்பு வரை ஊற்ற வேண்டும். தண்ணீர் சிந்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
* இப்போது தண்ணீரில் உள்ள ஐஸ்கட்டிகள் கரையும்வரை கவனியுங்கள். ஐஸ்கட்டி கரைந்தாலும், டம்ளரிலிருந்து தண்ணீர் வழியாமல் அதே அளவில் இருப்பதைக் காணலாம்.
ஐஸ்கட்டி உருகியதால் உருவாகும் தண்ணீர், டம்ளரில் சேர்ந்தபோதும் தண்ணீர் அதே அளவில் இருக்க என்ன காரணம்?
காரணம்
நீரைப் ஐஸ்கட்டியாக உறைய வைக்கும்போது அது விரிவடைந்து தண்ணீரைவிட அதிக இடத்தை எடுத்துக்கொள்கிறது. ஆனால், அதே ஐஸ்கட்டி உருகும்போது, சுருங்கி பழைய நிலையை அடையும்போது குறைவான இடமே தேவைப்படுகிறது.
நாம் ஐஸ் கட்டியாகப் பார்க்கிற உருவம் பெரியதாக இருப்பதுபோல தோன்றினாலும், அது நீராக மாறும்போது சிறிய அளவிலேயே இருக்கும். அந்தச் சிறிய இடத்தை டம்ளரில் எடுத்துக்கொள்ள முடிவதால், தண்ணீர் டம்ளரை விட்டு வெளியேறுவது இல்லை. தண்ணீரின் அளவும் ஒரே அளவில் இருப்பது போலவே தோன்றுகிறது.