ஆதி
நிலத்துக்கு முன்பே தோன்றியது கடல் நீர் என்பதைக் குறிக்க ‘முந்நீர்’ என்றும், ஆற்று நீரை ‘நன்னீர்’ என்றும், குடிநீரை ‘இன்னீர்’ என்றும் தமிழ் இலக்கியங்கள் சுட்டிக்காட்டுகின்றன. ஏரி, குளங்கள், கண்மாய், நீர்நிலைகள் மாசுபடாமல் இருப்பதற்காக, ‘முந்நீர் விழவு’ என்ற விழா மூலம் நீர்நிலைகளின் பாதுகாப்பு பண்டைக் காலத்தில் முன்னெடுக்கப்பட்டது.
கடல் அலைகளின் சீற்றம் அதிகமாக இருப்பதும் பின்வாங்குவதும் கடல்நீர் ஏற்றம் (High tide), வற்றம் (Low tide) எனப்படுகிறது. பண்டைக் காலத்தில் இது ‘ஓதம் அறிதல்’ எனப்பட்டது. கட்டுமரம், நாவாய், தோணி, வத்தை, வள்ளம், மிதவை, ஓடம், தெப்பம், டிங்கி, பட்டுவா, வங்கம், அம்பி, திமில் உள்ளிட்டவை பண்டைய இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள நீர்செலுத்துக் கலங்கள்.
கட்டு மரம்
ஆதி மனிதர்கள் உருவாக்கிய தெப்பங்களின் மேம்பட்ட வடிவமே கட்டுமரம். வலுவான மரங்கள் இறுக்கிக் கட்டப்பட்டு கடலில் செலுத்தப்பட்டதால், இந்தப் பெயர் வந்தது. கட்டுமரமே பிற்காலத்தில் பல்வேறு கடல்செலுத்துப் படகுகளுக்கு அடிப்படையாக இருந்தது. பிற்காலத்தில் காற்றின் துணையுடன் பாய்மரக் கலங்களை நெடுந்தொலைவுக்குச் செலுத்துவதிலும் தமிழர்கள் திறன் பெற்றவர்களாக இருந்தார்கள்.
வில்லியம் டேம்பியர் என்னும் ஆங்கிலேய சாகசப் பயணி ‘கெட்டுமரம்’ என்னும் சொல்லைக் கட்டமரன் (Catamaran) என்று பதினேழாம் நூற்றாண்டில் ஆங்கிலமயப்படுத்தினார். கட்டுமரத்தின் எளிமையும் நிலைப்புத்தன்மையும் வேகமும் அமெரிக்கக் கட்டுமானப் பொறியாளர் நத்தானியேல் ஹெர்ஷாபை கவர்ந்தன. அதன் விளைவாக, நீர்ச்சறுக்கு விளையாட்டுக்கெனத் தனித்துவமாகப் பாய்மரம் கொண்ட கட்டுமரம் வடிவமைக்கப்பட்டது.
பாண்டிய முத்து
பண்டைக் காலப் பாண்டிய அரசு கடல் வளத்தைச் சார்ந்தே இயங்கியது. அதிலும் பாண்டிய நாட்டின் செல்வ அடையாளமாக விளங்கியவை முத்துகள். இந்த முத்துகளில் பெரும்பாலானவை கொற்கை துறைமுகத்தில் முத்துக்குளித்தல், சங்குக்குளித்தல் மூலம் கிடைத்தவை. அத்துடன் மீனே பாண்டிய மன்னர்களின் சின்னமாகவும் கொடியாகவும் இருந்தது. பாண்டிய முத்து கிரேக்கம், ரோமுக்கு ஏற்றுமதி ஆகியிருக்கிறது. மதுரையில் ரோம நாணயங்கள் கிடைத்தது இதற்கு ஆதாரமாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.
யவனக் கப்பல்கள்
யவனர்கள் எனப்பட்ட கிரேக்க, ரோமானியர்கள் கப்பல் கட்டுவதில் தேர்ந்தவர்கள். பொருட்களை வாங்கிச் செல்வதற்காக சோழர்களின் பண்டைய புகார் (காவிரிப்பூம்பட்டினம் - பூம்புகார்) துறைமுகத்துக்கு யவனர்கள் வந்து சென்றார்கள். சோழர்களின் நீண்ட தொலைவுப் பயணங்களுக்குத் தேவைப்பட்ட பெரிய கப்பல்களை அவர்கள் கட்டிக்கொடுத்தார்கள்.
இந்தக் கப்பல்களுடைய முனைகள் யானை, எருமை, கிளி, மயில் ஆகியவற்றின் தலையைப் போல் வடிவமைக்கப்பட்டிருந்தன. இந்தக் கப்பல்கள் 200-க்கும் மேற்பட்டவர்கள் பயணிக்கக்கூடியவையாக இருந்தன. இந்தக் கப்பல்களில் 500 வண்டி அளவுள்ள சரக்குகளையும் ஏற்றிச் செல்ல முடிந்தது.
சோழ மன்னர்கள் கடல் கண்காணிப்பாளர்களை வைத்திருந்தார்கள். நடுக்கடலில் சிக்கித் தத்தளிக்கும் கப்பல்களைக் காப்பாற்றுவதற்குத் தேவையான ஏற்பாடுகளைக் கடல் கண்காணிப்பாளர்கள் குழுவே செய்தது.
முசிறித் துறைமுகம்
சேர நாட்டின் முசிறித் துறைமுகம் பொ.ஆ.மு. 100 தொடங்கி உலகப் புகழ்பெற்றதாக இருந்தது. இந்த ஊரின் தற்போதைய பேரு கொடுங்கல்லூர் (கொடுங்கோளூர்).
'முசிறி - அலெக்சாண்ட்ரியா வணிக உடன்படிக்கை' முசிறித் துறைமுகம் வழியாக யவனர்கள் வணிகம் செய்ததை உறுதிப்படுத்துகிறது. பொ.ஆ. 200-ல் இந்த உடன்படிக்கை ஏற்பட்டிருக்கிறது. இந்த சரக்குப் பரிமாற்றத்தின் மதிப்பு 68,000 ரோமானிய, எகிப்து தங்கக் காசுகளுக்குச் சமம்.
பிற்காலத்தில்…
இடைக்காலச் சோழர்கள் ஆட்சியில் இலங்கை, கடாரம் உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குப் படையெடுத்துச் சென்று போரிட்டு, அந்தப் பகுதிகளை ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் ஆகியோர் ஆட்சி புரிந்திருக்கிறார்கள்.
விஜயநகர அரசர்கள் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட கடல் வணிகத்தை விளக்கும் காட்சி திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடி கோயிலில் காணப்படுகிறது. இதில் ஒரு கப்பலையும் ஒரு சிறிய படகையும் காட்டியுள்ளனர். இந்தக் கப்பல்களில் உள்ளவர்கள் நீண்ட துடுப்பைக் கொண்டுள்ளனர். குதிரைகள் கரையில் நிற்கின்றன. மற்றொரு காட்சி, அரசனிடம் குதிரைக்கு வணிகர்கள் விலைபேசுவதுபோல் அமைந்துள்ளது.
விடுதலைப் போராட்டத்தின் ஒரு பகுதியாக ஆங்கிலேயக் கப்பல் சேவைக்கு எதிரான போராட்ட வடிவமாக, வ.உ. சிதம்பரனார் 1906-ல் ‘சுதேசி நாவாய்ச் சங்கம்’ என்ற பெயரில் தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கப்பலைச் செலுத்தினார்.
ஆனால், பிரிட்டிஷ் இந்திய நிறுவனத்தாலும் காலனி அரசின் நெருக்கடிகளாலும் அந்த அமைப்பு நலிவடைந்தது. இன்றைய தூத்துக்குடி துறைமுகம் வ.உ.சி. பெயரிலேயே அழைக்கப்படுகிறது. இப்படி வரலாறு முழுவதும் கடலில் முத்துக்குளிப்பதில் இருந்து, மீன்பிடித்தல், மரக்கலம் கட்டுதல், மரக்கலத்தைச் செலுத்துதல் என அனைத்து கடல் சார்ந்த துறைகளிலும் தமிழர்கள் முன்னேறி இருந்தார்கள்.
பண்டைத் தமிழகத்தின் முக்கியத் துறைமுகங்கள்:
பல்லவர் - மாமல்லை
சோழர் - புகார்
பாண்டியர் - கொற்கை
சேரர் - முசிறி
அரிக்கமேடு, அழகன்குளம், நாகப்பட்டினம் ஆகியவையும் பண்டைய துறைமுகங்களே.
இன்றைய தமிழகத் துறைமுகங்கள்: சென்னை, தூத்துக்குடி, எண்ணூர்
கட்டுரையாளர்
தொடர்புக்கு: valliappan.k@hindutamil.co.in