மாயா பஜார்

தீபாவளி வாசிப்புக் கோலாகலம்

செய்திப்பிரிவு

நேயா

குழந்தைகளுக்கு தீபாவளி என்றால் பட்டாசு, பலகாரம் என்றாகிவிட்டது. நம்முடைய அப்பா-அம்மா, தாத்தா-பாட்டி குழந்தையாக இருந்த காலத்தில் நிறைய வாசித் தார்கள். அப்போது குழந்தைகளுக்கான இதழ்கள் அதிகம் வெளியாகிக்கொண்டிருந்தன. பண்டிகை காலத்தில் அந்த இதழ்கள் சிறப்பிதழ்களை வெளியிடும். அதை வாசிப்பதும் தீபாவளி விடுமுறையின் முக்கிய அம்சமாக இருந்தது.

நாடு விடுதலை பெறுவதற்குமுன் 1945-ல் பிரபல வார இதழான 'கல்கி' பாப்பா மலர் என்ற பெயரில் குழந்தைகளுக்கான சிறப்பு மலரை தீபாவளியை ஒட்டி வெளியிட்டிருக்கிறது. அதன்பிறகு குழந்தைகளுக்கென்றே பல்வேறு இதழ்கள் 2000-ம் ஆண்டுவரை அதிகமாக வெளியாகிவந்தன. புத்தாயிரம் ஆண்டுக்குப் பிறகு குழந்தைகளுக்கான சிறப்பிதழ்கள் வருவது கிட்டத்தட்ட நின்றுபோய்விட்டது.

அந்தக் குறையைப் போக்கும் வகையில் திருவாரூரைச் சேர்ந்த 'பொம்மி' சிறார் மாத இதழ், தீபாவளி மலரை வெளியிட்டுள்ளது. முதல் காமிக்ஸ் பற்றி ஓவியர் சந்தோஷ் நாராயணன், கதைகள் எங்கே போயின என்பது பற்றி மோ. கணேசன், குழந்தைகளுக்கான வரலாற்றுப் புத்தகங்கள் குறித்து எழுத்தாளர் கமலாலயனின் கட்டுரை, எழுத்தாளர்கள் உதயசங்கர், கொ.மா.கோ. இளங்கோ ஆகியோரின் கதைகள், புலேந்திரன், பாவண்ணன் ஆகியோரின் பாடல்கள் உள்ளிட்ட படைப்புகள் இந்த மலரில் குறிப்பிடத்தக்கவை.

அத்துடன் வாண்டுமாமா, அழ. வள்ளியப்பா, பெ. தூரன், கவிமணி தேசிக விநாயகம் போன்ற சிறார் இலக்கிய மேதைகளின் படைப்புகளும் மலரை அலங்கரித்துள்ளன. ஓவியர்கள் ராஜே, ராம்கியின் படக்கதைகளும் வாசிக்க வேண்டிய முக்கியப் புத்தகங்கள் குறித்த அறிமுகங்களும் குழந்தைகளைக் கவரும்.

பாடல்கள், புதிர்கள், விடுகதைகள், மேதைகளின் குழந்தைப் பருவம், அறிவியல் கேள்வி-பதில்கள் எனப் பாடவும் வாசிக்கவும் விளையாடவும் பல்வேறு அம்சங்களைத் தாங்கி வந்துள்ளது இந்த மலர். அதேநேரம், பட்டாசு வெடிப்பதை ஊக்குவிப்பது போன்ற கருத்துகளை மலரில் தவிர்த்திருக்கலாம். சிறார் இதழ்கள் பெரிதும் குறைந்துவிட்ட இந்தக் காலத்தில், குழந்தைகளுக்கான தீபாவளிச் சிறப்பு மலர் என்பது அரிய வரவுதான்.

பொம்மி தீபாவளி மலர் 2019, தொடர்புக்கு: 9750697943140

SCROLL FOR NEXT