மாயா பஜார்

தொடரும் போராட்டம்

செய்திப்பிரிவு

ஆசாத்

அமெரிக்காவில் நடைபெற்ற ஐ.நா. பருவநிலை மாநாட்டில், ஸ்வீடனைச் சேர்ந்த 16 வயது கிரெட்டா துன்பர்க் நிகழ்த்திய உரை உலக அளவில் கவனத்தைப் பெற்றது. இவருடன் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இளம் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் பதினைந்து பேர் கலந்துகொண்டனர். அவர்களில் ஒருவர் ரிதிமா பாண்டே. இந்தியாவின் இளம் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்.

உத்தராகாண்டைச் சேர்ந்த 11 வயது ரிதிமா, “உலகத் தலைவர்கள் பருவநிலை மாற்றத்தைத் தடுக்க இப்போதே நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இல்லை என்றால் எங்கள் எதிர்காலம் பாதிக்கப்படும்” என்று தைரியமாக எடுத்துரைத்தார். 2013-ம் ஆண்டு உத்தராகாண்டில் ஏற்பட்ட கடும் மழையால் கங்கை ஆற்றில் வெள்ளப்பெருக்கு உண்டானது. பலப் பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளையும் உறவுகளையும் இழந்தனர். இதில் ரிதிமாவின் வீடும் அடித்தச் செல்லப்பட்டது. நேரடியாகப் பாதிக்கப்பட்ட ரிதிமா, போராட்டத்தைக் கையில் எடுத்தார்.

தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கரியமிலவாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த தவறிய அரசை எதிர்த்து, தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்தார். ஏற்கெனவே சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்பதால், இந்த வழக்கைத் தீர்ப்பாயம் ரத்து செய்துவிட்டது. “எங்களுக்கு நல்ல எதிர்காலம் வேண்டும். சுத்தமான காற்றும் நீரும் உணவும் வழங்க வேண்டியது அரசின் கடமை. மாற்றங்கள் நிகழும்வரை தொடர்ந்து போராடிக்கொண்டே இருப்பேன்” எனும் ரிதிமா பாண்டே, எதிர்காலத் தலைமுறையினரின் நம்பிக்கையாக இருக்கிறார்.

SCROLL FOR NEXT