மிது கார்த்தி
ஓர் உறிஞ்சு குழலை உருளைக் கிழங்குக்குள் கத்தியைப் போல நிற்க வைக்க முடியுமா?
ஒரு சோதனை செய்து பார்த்துவிடலாம்.
என்னென்ன தேவை?
உருளைக் கிழங்கு - 1
உறிஞ்சு குழல் (ஸ்டிரா) - 2
எப்படிச் செய்வது?
# உருளைக் கிழங்கைத் தரையில் வைத்து, அதன் மீது உறிஞ்சு குழலைக் குத்துங்கள்.
# உறிஞ்சு குழல் வளைகிறதா?
# இன்னோர் உறிஞ்சு குழலை எடுத்து, அதன் மேல் பாகத்தில் உள்ள துளையை விரலால் மூடிக்கொள்ளுங்கள்.
# இப்போது உறிஞ்சு குழலை உருளைக் கிழங்கின் மீது வேகமாகக் குத்துங்கள்.
# உறிஞ்சு குழல் வளையாமல் உருளைக் கிழங்குக்குள் இறங்கியிருப்பதைக் காணலாம்.
வலுவில்லாத உறிஞ்சு குழல், உருளைக் கிழங்கை துளைத்துக்கொண்டு இறங்கியது எப்படி?
காரணம்?
இதற்குக் காரணம் காற்று. முதலில் உருளைக் கிழங்கின் மீது சாதாரணமாக உறிஞ்சு குழலை வைத்து உள்ளே செலுத்த முயற்சி செய்தீர்கள். ஆனால், உறிஞ்சு குழலின் மீது அழுத்தம் கொடுத்தவுடன், உங்களுடைய அழுத்தத்தைத் தாங்க முடியாமல் அது வளைந்துபோனது. இரண்டாம் முறை என்ன செய்தீர்கள்? உறிஞ்சு குழலின் துளையை விரல்களால் மூடிக்கொண்டு அழுத்தம் கொடுத்தீர்கள். இந்த முயற்சியில் உறிஞ்சு குழலுக்குள் இருந்த காற்று மூலக்கூறுகளால் அதன் வலிமை அதிகமாகிவிடுகிறது. எனவே உறிஞ்சு குழலுக்கு ஒரு சிறிய குச்சிக்குக் கிடைக்கும் வலிமை கிடைத்துவிடுகிறது. எனவே உருளைக் கிழங்கை துளைத்துக்கொண்டு உறிஞ்சு குழல் உள்ளே சென்றது.
பயன்பாடு
காற்றின் பண்பை அறியும் சோதனைகளில் இதுவும் ஒன்று.