மிது கார்த்தி
இரண்டு பந்துகளை உங்கள் கை படாமல் தனித்தனியாகப் பிரிக்க முடியுமா? ஒரு சோதனையைச் செய்துபார்ப்போம்.
என்னென்ன தேவை?
# பிளாஸ்டிக் டம்ளர்கள் 2
# சிறிய பிளாஸ்டிக் பந்துகள் 2
# பசை
# பென்சில்
எப்படிச் செய்வது?
# ஒரு பிளாஸ்டிக் டம்ளரை எடுத்து, அதன் விளிம்பைச் சுற்றிப் பசையைத் தடவுங்கள்.
# இன்னொரு பிளாஸ்டிக் டம்ளரில் சிறிய பந்துகள் இரண்டையும் போடுங்கள்.
# இப்போது பசை தடவிய பிளாஸ்டிக் டம்ளரின் விளிம்பை, பந்துகள் போட்ட பிளாஸ்டிக் டம்ளரின் விளிம்போடு சேர்த்து வைத்து ஒட்டுங்கள்.
# ஒரு மணி நேரம் அப்படியே விட்டுவிடுங்கள்.
# பசை காய்ந்த பிறகு, இரண்டு டம்ளர்களும் நன்றாக ஒட்டியிருக்கின்றனவா என்று சோதித்துக்கொள்ளுங்கள்.
# இரண்டு பிளாஸ்டிக் டம்ளர்களையும் விரல் படாமல் தனித்தனியாகப் பிரிக்க முடியுமா?
# ஒட்டிய டம்ளர்களைத் தரையில் படுக்க வையுங்கள்.
# விளிம்பை நன்றாகச் சுழற்றுங்கள். நடப்பதைக் கவனியுங்கள். இரண்டு பந்துகளும் இரு டம்ளர்களிலிருந்து பிரிந்து செல்வதைக் காணலாம். இதேபோல் விளிம்புகளின் மீது பென்சிலை வைத்து, சுழற்றும்போது பந்துகள் இரண்டும் விலகி, டம்ளர்களின் அடிப் பாகத்துக்கு செல்வதைக் காணலாம்.
# சுழற்றுவதை நிறுத்திவிட்டுக் கவனியுங்கள். பந்துகள் இரண்டும் மீண்டும் மையப் பகுதியின் அருகே வந்து நிற்பதைக் காணலாம்.
காரணம்
சுழலும் பிளாஸ்டிக் டம்ளர்களைச் சுழற்றும்போது அதில் ஏற்படும் சுழற்சியானது, பந்துகளை மையத்திலிருந்து விலக்கி வெளிபக்கமாகத் தள்ளிவிடுகிறது. பந்தை இப்படி வெளியே தள்ளுவதற்குக் காரணம், மைய விலக்கு விசை. மைய விலக்கு விசை என்பது சுழற்சியினால் ஏற்படும் நிலைமத்தின் விளைவுகளைக் குறிக்கிறது.
பயன்பாடு
வேகமாகச் செல்லும் கார், வேன் போன்ற வாகனங்கள் இடப்புறம் திரும்பினால், அதில் உட்கார்ந்திருப்பவர்கள் வலப்புறமாகவும், வலப்புறமாகத் திரும்பும்போது இடப்புறமாகவும் சாய்வதுபோல உணருவதற்குக் காரணம் மைய விலக்கு விசையே.