கம்ப்யூட்டரையும் செல்போனையும் விரும்பாத குழந்தைகளே இல்லை. அவர்களின் ஆர்வத்தைச் சரியான முறையில் திசைதிருப்பினால், எதிர்காலத்தில் சிறந்த விளையாட்டு வீரராக வரமுடியும் என்பதற்கு நைனிகாவே சாட்சி.
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துவருகிறார் நைனிகா. சமீபத்தில் திருச்செங்கோட்டில் நடைபெற்ற தேசிய சப்-ஜூனியர்களுக்கான செஸ் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், தேசிய அளவில் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளார். ஒன்பது வயதிலிருந்து முறைப்படி பயிற்சி எடுத்துவரும், நைனிகாவுக்கு செஸ் அறிமுகமான தருணம் சுவாரசியமானது.
குழந்தைகளுக்கு செல்போனில் பாடல்களைப் போட்டு காண்பிப்பதுபோல் நைனிகாவின் பெற்றோர், செஸ் விளையாட்டை அவருக்கு அறிமுகப்படுத்தினர். இரண்டு வயதிலேயே கறுப்பு-வெள்ளைக் காய்கள் அவரைக் கவர்ந்து இழுத்துவிட்டன. பிறகு கம்ப்யூட்டரில் தினமும் செஸ் விளையாட ஆரம்பித்தார். ஒருகட்டத்தில் செஸ் அவருடைய அன்றாடப் பழக்கமாகிவிட்டது. பின்னர் பயிற்சியாளர் ரவிக்குமாரிடம் முறைப்படி செஸ் கற்றுக்கொண்டார்.
ஆறு ஆண்டுகளாக மாவட்ட, மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு, பல்வேறு பரிசுகளைப் பெற்று வருகிறார் நைனிகா. தற்போது சர்வதேச செஸ் தரவரிசைப் பட்டியலில் 1,645 புள்ளிகளுடன் இந்திய அளவில் முன்னணி வீராங்கனையாக இருக்கிறார். முன்னணி வீரர்கள் கலந்துகொள்ளும் ‘சோலார் செஸ்’ போட்டியில் கடந்த மூன்று ஆண்டுகளாக முதலிடம் பெற்றுவருகிறார். கடந்த ஆண்டு குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய செஸ் போட்டியில், ‘சிறந்த மகளிர் வீராங்கனை’ என்ற பட்டத்தை இவர் பெற்றுள்ளார்.
“எனக்கு விவரம் தெரிவதற்கு முன்பே செஸ் அறிமுகமாகிவிட்டது. அதனால் செஸ் மீது ஆர்வம் வளர்ந்துகொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் படிப்பை விட்டுவிட்டு, செஸ் விளையாட்டில் முழுக் கவனம் செலுத்த ஆசைப்பட்டேன். ஆனால், விளையாட்டைப் போலவே படிப்பும் அவசியம் என்று சொல்லிவிட்டார் அம்மா. விளையாட வேண்டும் என்பதற்காகவே நன்றாகப் படிக்கத் தொடங்கினேன். மூளைக்கு வேலை கொடுக்கும் விளையாட்டு செஸ் என்பதால், என்னால் விரைவாகப் பாடங்களைப் படித்துவிட முடியும். எந்த விஷயத்தையும் எளிதாகப் புரிந்துகொள்ள முடியும்.
கடந்த சில ஆண்டுகளாக குகேஷ், பிரக்ஞானந்தா என்று தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் சாதனை படைத்துவருகிறார்கள். இதனால் செஸ் கற்றுக்கொள்வதற்கு ஏராளமானவர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். இப்போது போட்டி நிறைந்த விளையாட்டாக, செஸ் மாறிவிட்டது. அதனால் கடினமாக உழைக்க வேண்டியிருக்கிறது. குழந்தைகளுக்கு விருப்பமான துறைகளில் பிரகாசிக்கப் பெற்றோர் ஊக்குவித்தால், என்னைப்போல் பலரும் விளையாட்டு வீரர்களாக வருவார்கள்” என்று சிரிக்கிறார் நைனிகா.
கடந்த ஏப்ரல் மாதம் இலங்கையில் நடைபெற்ற ஆசிய செஸ் போட்டியில் முதல் பத்து இடத்துக்குள் வந்தர். அடுத்த ஆண்டு ரஷ்யா, அபுதாபி ஆகிய நாடுகளில் நடைபெற உள்ள சர்வதேசப் போட்டிகளில் கலந்துகொள்ள இருக்கிறார் நைனிகா. இந்தியாவுக்கு இன்னொரு கிராண்ட் மாஸ்டர் உருவாகும் காலம் வெகுதூரத்தில் இல்லை.
- எல். ரேணுகாதேவி