ஆதி
தமிழகம் என்றதும் வெளிமாநிலத்தினருக்கும் வெளிநாட்டவர்களுக்கும் நினைவுக்கு வரும் முதல் அம்சம் விருந்தோம்பலாகவே இருக்கும். இட்லி, வடை, தோசையைப் போன்று உணவு புதிதாக இருந்தாலும், நம்முடைய உபசரிப்பில் அவர்கள் திளைத்துப் போய்விடுவார்கள். விருந்தோம்பல் எனும் பண்பு தமிழ்ப் பண்பாட்டில் தலையாயது. அன்னதானம், தண்ணீர்ப் பந்தலைப் போன்று பசி நீக்குதல், தாகம் தீர்க்கும் உபசரிப்புகள் தமிழ்நாட்டில் பெரும்பேறாகக் கருதப்படுகின்றன.
தமிழகம் முழுவதும் ஹோட்டல்கள் எனப்படும் உணவு விடுதிகள் உள்ளன. இன்றைக்குத் தண்ணீரும்கூட லிட்டர் 15 ரூபாய் என அதிக விலைக்கு விற்கப்படும் விற்பனைப் பொருளாகிவிட்டது. ஆனால், நம் பண்பாட்டில் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்புவரைகூட சோறும் நீரும் விற்பனைப் பண்டமாக இருந்ததில்லை. வறியவர்களுக்குச் சோறிடுதல் அறம் என்கிற கோட்பாடு தமிழ் இலக்கியங்களில் திரும்பத் திரும்ப வலியுறுத்தப்பட்டுவந்துள்ளது.
கிராமப்புறங்களில் உள்ள சாவடிகளில் வெளியூர்காரர்கள் யாராவது இரவில் சாப்பிடாமல் படுத்திருந்தால், சம்பந்தப்பட்ட ஊர்க்காரர்கள் இரவுச்சோறு கொடுப்பார்கள். நாடு விடுதலை பெறுவதற்கு முன்புவரை இந்த வழக்கம் இருந்திருக்கிறது. தங்கள் ஊருக்கு வந்த ஒருவர் இரவில் பசியோடு உறங்குவது, தங்களுக்கும் ஊருக்கும் அவமானம் என்று அந்தக் கால மக்கள் நினைத்ததே இதற்கு அடிப்படைக் காரணம்.
முதல் கொடை
புகழ்பெற்ற இரட்டைக் காப்பியங்களில் ஒன்றான ‘மணிமேகலை’, உணவை உயிருக்கான மருந்து என்கிறது. மாற்றுத் திறனாளிகள், கைவிடப்பட்டவர்கள், நோயாளிகளுக்கு உணவு அளிக்க வேண்டுமென அந்தக் காப்பியம் வலியுறுத்தியுள்ளது. அந்தக் காப்பியத்தில் சுட்டப்படும் அமுதசுரபி அள்ள அள்ளக் குறையாமல் அனைவருக்கும் உணவை வழங்குவதற்காக அறியப்பட்டது.
இந்தக் காப்பியத்தின் மையக் கதாபாத்திரம் மணிமேகலை ஒரு சமணப் பெண் துறவி. தமிழகத்தில் பரவிய சமண சமயம் நான்கு வகைக் கொடைகளை வலியுறுத்தியது. அவற்றில் முதன்மையானது உணவு. அடுத்து மருந்து, கல்வி, அடைக்கலம் (இடம்). தமிழ்நாட்டில் அன்னதானம் கொடுக்கும் வழக்கம் சமணர்களால் அறிமுகப்படுத்தப்பட்டதே.
சோறு விற்பது பாவம்
ஒன்பதாம் நூற்றாண்டு (இடைக்காலச் சோழர் ஆட்சி) முதல் நெடுஞ்சாலைகளில் சத்திரங்கள் அமைக்கப்பட்டன. அங்கே தங்குமிடமும் உணவும் வழங்கப்பட்டன. பிற்காலச் சோழர் காலத்தில் கோயில்கள், மடங்களுக்கு வருபவர்களுக்கு ‘சட்டிச் சோறு’ வழங்கப்பட்டிருக்கிறது. ‘சட்டிச் சோறு’ என்பது தேசாந்திரிகள், பரதேசிகள், சிவனடியார் உள்ளிட்டோருக்குக் கொடையாக வழங்கப்பட்ட உணவு.
18-ம் நூற்றாண்டுவரை சோறும் நீரும் விற்கப்படுவது தவறு - பாவம் என்ற கருத்து தமிழ்நாட்டில் நிலவிவந்திருக்கிறது. அப்படியானால் சோறு, நீரைத் தவிர மற்ற உணவுப் பண்டங்கள் விற்கப்பட்டனவா? ஆமாம். ஒருவர் தாகத்துடனும் பசியுடனும் இருப்பதைப் போக்க அடிப்படைத் தேவையான சோறும் நீரும் மட்டும் விற்கப்படவில்லை. அவற்றைத் தவிர மற்ற உணவுப் பண்டங்கள்-பலகாரங்கள் சந்தைகள், சிறு கடைகளில் விற்கப்பட்டே வந்துள்ளன. மணிமேகலைக்கு முந்தைய காப்பியமான ‘சிலப்பதிகார’த்திலேயே இது பதிவாகியுள்ளது.
உணவு விற்பனை
இடையில் 15-ம் நூற்றாண்டில் நாயக்கர் ஆட்சிக் காலத்தில் ஊர்ச் சத்திரங்களில் சோறு விற்கப்படத் தொடங்கியது. நாயக்கர் ஆட்சிக்குப் பிந்தைய ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஹோட்டல் எனப்படும் உணவு விடுதிகள் உருவாகின. 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் நகரங்கள், சிறு நகரங்களில் காசுக்கு சோறு விற்கும் உணவுவிடுதிகள் உருவாகின.
தொடக்கத்தில் பிராமணர்கள், உயர்ந்த சாதியாகக் கருதிக்கொண்டவர்கள், முஸ்லிம்கள் ஆகியோர் தங்கள் தங்கள் சாதியினர் மட்டும் உண்ணும் உணவகங்களை நடத்திவந்தார்கள். நாடு விடுதலை பெற்ற பின்னரே உணவகங்கள் பரவலாகின. அப்போதும் குறிப்பிட்ட சாதியினரை மட்டுமே உண்ண அனுமதித்த உணவகங்களுக்கு எதிராகப் பெரியார் உள்ளிட்டோர் போராடியது வரலாறு.
இந்த வாரம்:
பத்தாம் வகுப்புத் தமிழ்ப் பாடத்தில், ‘கூட்டாஞ்சோறு’ என்ற இயலின்கீழ் ‘விருந்து போற்றுதும்!’ என்ற உரைநடை உலகம் பகுதி.
| பெருமை சேர்த்த பேராசிரியர் ‘தொ.ப.’ என்று அழைக்கப்படும் பேராசிரியர் தொ.பரமசிவன் தமிழ்நாட்டின் பண்பாட்டுப் பெருமைகளை உலகறியச் செய்தவர். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். பாளையங்கோட்டையைச் சேர்ந்த அவர் ‘பண்பாட்டு அசைவுகள்’,‘அழகர் கோயில்’ உள்ளிட்ட முக்கிய நூல்களை எழுதியுள்ளார். அவர் எழுதிய ‘அறியப்படாத தமிழகம்’ என்ற புகழ்பெற்ற நூலில் ‘சோறு விற்றல்’ என்று ஓர் அத்தியாயம் உள்ளது. அந்த அத்தியாயத்தின் முக்கிய அம்சங்கள் இந்தக் கட்டுரையில் எடுத்தாளப்பட்டுள்ளன. |
நன்றி: ‘அறியப்படாத தமிழகம்‘,
பேராசிரியர் தொ.பரமசிவன்
கட்டுரையாளர் தொடர்புக்கு:
valliappan.k@hindutamil.co.in