ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி,
மேட்டுக்குப்பம், காஞ்சிபுரம்.
கிராமப்புற மாணவர்களுக்குச் சிறந்த கல்வி அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், 1962-ம் ஆண்டு தொடக்கப் பள்ளியாக ஆரம்பிக்கப்பட்டது. 2011-ம் ஆண்டு நடுநிலைப் பள்ளியாகத் தரம் உயர்ந்தது. காற்றோட்டமான வகுப்பறைகள், நூலகம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், தூய்மையான கழிவறை வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன.
கல்வியோடு அறிவியல், விளையாட்டு, கலைகள், போட்டித் தேர்வுகள் போன்றவற்றிலும் இந்தப் பள்ளி மாணவர்கள் சிறந்து விளங்குகின்றனர். தேசியத் திறனாய்வுத் தேர்வில் ரா. பாத்திபன், ச. கார்த்திக் ஆகிய மாணவர்கள் வெற்றி பெற்று, ஊக்கத்தொகை பெற்று வருகிறார்கள். ச. கார்திக், த. சரவணன், ல. மோனிஷ்குமார், ப. தேவி, உ. ரஞ்சிதா ஆகிய மாணவர்கள் ’இளம் விஞ்ஞானி’ விருதைப் பெற்று, பள்ளிக்குப் பெருமை தேடித் தந்திருக்கிறார்கள்.
டெக்னோ க்ளப் மூலம் மாணவர்களுக்குக் கணினிப் பயிற்சி அளிக்கப்படுகிறது. டிஜிட்டல் ஆய்வகம் மூலம் புதுமையான கற்பித்தல் பணி நடைபெற்று வருகிறது. 300-க்கும் மேற்பட்ட அறிவியல் மாதிரிகளைப் பயன்படுத்தி, செய்முறையுடன் கற்று வருகிறார்கள். ஆண்டுதோறும் பிப்ரவரி 28 தேசிய அறிவியல் நாள் அன்று, அறிவியல் கண்காட்சி நடத்தப்படுகிறது.
கல்வித் துறை மூலம் நடத்தப்பட்ட கலைத் திருவிழாவில் பங்கேற்று, வட்டார அளவில் இரண்டாம் பரிசு பெற்றுள்ளனர் இந்தப் பள்ளி மாணவர்கள். செஸ் போட்டியில் 8-ம் வகுப்பு மாணவி பு. லோகதேவி, கல்வி மாவட்ட அளவில் வெற்றி பெற்றுள்ளார். சுற்றுச் சூழல், தமிழ் இலக்கியம், அறிவியல், கணிதம் போன்ற மன்றங்கள் சிறப்பாகச் செயல்படுகின்றன. சுகாதாரக்குழுக்களும் இளம் செஞ்சிலுவைச் சங்கமும் இயங்கிவருகின்றன. மாணவர்கள் களப் பயணத்துக்கு அழைத்துச் செல்லப்படு கிறார்கள்.
அரசு மேல்நிலைப் பள்ளி,
தொரப்பாடி, வேலுார்.
‘நாம் அனைவரும் ஒரே வகையான திறமை இல்லாமல் இருக்கலாம். ஆனால், அனைவருக்கும் திறமையை வளர்த்துக்கொள்ள பல வகை வாய்ப்புகள் உள்ளன’ என்று முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் கூற்றுக்கு ஏற்ப, திறமைகளை மேம்படுத்திக்கொள்ள வாய்ப்பை அளிக்கும் பள்ளியாக விளங்குகிறது.
800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். பள்ளி வளாகத்தைச் சுற்றிலும் நிழல் தரும் மரங்கள் உள்ளன. மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற பேச்சு, கட்டுரை, ஓவியம், குத்துச்சண்டை உள்ளிட்ட போட்டிகளில் பரிசுகளை வென்று, பள்ளிக்குப் பெருமை சேர்த்திருக்கிறார்கள் இந்தப் பள்ளி மாணவர்கள்.
2015-ம் ஆண்டு மாவட்ட மைய நுாலகம் சார்பில் பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற பேச்சுப் போட்டியில் 11-ம் வகுப்பை சேர்ந்த பூமிகா தேவி இரண்டாம் இடத்தைப் பெற்றார். 2017-ம் ஆண்டு வேலுாரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நுாற்றாண்டு ஓவியப் போட்டியில் 12-ம் வகுப்பு மாணவர் வேல்முருகன் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று, தமிழக முதல்வரிடம் பரிசைப் பெற்றார். 2018-ம் ஆண்டு தேசிய அளவில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் 8-ம் வகுப்பு மாணவர் நவீன், சப் ஜுனியர் பிரிவில் இரண்டாம் இடத்தைப் பெற்றார்.
2019-ம் ஆண்டு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற IMPART அறிவியல் ஆய்வில் மாவட்ட அளவில் முதலிடத்தைப் பெற்றது இந்தப் பள்ளி. ’நீரிழிவின் வகைகளும் தீர்வுகளும்’ எனும் தலைப்பில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் காவியா, மோனிகா, ரம்யா, பிரதாப், ராஜாமணி ஆகியோர் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். 2018, 2019-ம் ஆண்டு அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் சார்பில் நடந்த அறிவியல் போட்டிகளில் இரண்டு வருடங்களும் மாவட்ட அளவில் இரண்டாம் பரிசைப் பெற்றுள்ளது இந்தப் பள்ளி.