த. சத்தியசீலன்
தேசிய அளவிலான செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார் ஜி. ஆகாஷ். ‘மைண்ட் கேம்' என்று அழைக்கப்படும் செஸ் போட்டியில் எதிராளியின் நகர்வைத் துல்லியமாகக் கணித்து, வீழ்த்தும் வல்லமை படைத்தவராக இருக்கிறார்.
இந்திய செஸ் சம்மேளனம், குஜராத் செஸ் கழகம் சார்பில், அகமதாபாத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த 33-வது தேசிய செஸ் போட்டியில், 11 சுற்றுகள் விளையாடி, 3 சுற்றுகளை டிரா செய்து, 9.5 புள்ளிகள் எடுத்து சாம்பியன் பட்டத்தைப் வென்றிருக்கிறார் ஆகாஷ்.
கோவை கணபதியில் உள்ள எஸ்.இ.எஸ். மெட்ரிக். பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வரும் இவர், தமிழ்நாடு மாநில செஸ் கழகம் நடத்திய போட்டியில் முதலிடம் பிடித்தார். 2018-ம் ஆண்டு நண்பர்கள் செஸ் குழு நடத்திய, வெள்ளிவிழா செஸ் போட்டியில், இளம் கிராண்ட் மாஸ்டர்களான பிரக்ஞானந்தா, வைஷாலி ஆகியோருடன் விளையாடி போட்டியைச் சமன் செய்தார். 2017-ம் ஆண்டு தமிழ்நாடு செஸ் கழகம் சார்பில், சேலத்தில் நடைபெற்ற மாநிலப் போட்டியில் 7 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
“என் அண்ணன் கிஷோர்குமார் மூலம்தான் செஸ் விளையாட்டு அறிமுகம் ஆனது. அவருடன் சேர்ந்து விளையாடியதால் எனக்கும் ஆர்வம் வந்துவிட்டது. எங்கள் வீட்டில் வசதி இல்லாவிட்டாலும் பட்டறைத் தொழிலாளியான என் அப்பா எங்கள் இருவரையும் விளையாட்டில் ஊக்குவித்தார். முறையாக செஸ்
கற்றுக்கொள்ள பயிற்சியாளர் டி. தனசேகரனிடம் அனுப்பினார். கடினமாகப் பயிற்சி எடுத்தேன். அதனால்தான் 9 வயதிலேயே தேசிய சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறேன்” என்கிறார் ஆகாஷ்.
சர்வதேச செஸ் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற வேண்டும், வெளிநாட்டு வீரர்களுடன் விளையாட வேண்டும் என்பதில் மிகவும் ஆர்வமாக இருக்கிறார். இளம் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வெல்ல வேண்டும் என்பது இவருடைய கனவு. ‘கிராண்ட் மாஸ்டர்' விஸ்வநாதன் ஆனந்தைப்போல் செஸ் விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்பது எதிர்கால லட்சியம் என்கிறார் ஆகாஷ்.
“செஸ் வீரர்களின் தரவரிசையில் 1613 புள்ளிகள் பெற்றுள்ள ஆகாஷ், எதிராளி எவ்வளவு அனுபவசாலியாக இருந்தாலும் தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டு வென்றுவிடுகிறார். எதிராளியின் ஒவ்வொரு நகர்வையும் துல்லியமாகக் கணித்து விளையாடுவது இவரது பலம். தேசிய செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஆசிய, உலக செஸ் போட்டிகளில் விளையாடத் தேர்வாகி இருக்கிறார். பொருளாதாரத்தில் மிகவும் சிரமப்படும் ஆகாஷுக்கு யாராவது உதவ முன்வந்தால் மேலும் பல சாதனைகளை இந்தியாவுக்குத் தேடித் தருவார்” என்கிறார்கள் செஸ் கழகத்தினர்.