ஆதி
வரலாற்றில் பெண்கள் பல்வேறு பெரும் சாதனைகளை நிகழ்த்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் கல்வி பெறுவதற்கு வரலாறு நெடுகிலும் போராட வேண்டி இருந்துள்ளது. இந்திய, தமிழக வரலாற்றில் அதுபோலப் போராடிக் கல்வி பெற்ற, கல்வி பெறுவதற்குக் காரணமாக அமைந்த சாதனைப் பெண்கள் சிலரைப் பற்றித் தெரிந்துகொள்வோமா?
சாவித்திரி பாய் பூலே: இந்தியாவில் பெண் குழந்தைகளுக்கான முதல் பள்ளியைத் தன்னுடைய கணவர் ஜோதிபா பூலேவுடன் இணைந்து அமைத்தவர். மகாராஷ்டிர மாநிலம் பூனாவுக்கு அருகே பிதேவாடாவில் 1848-ல் அமைந்த அந்தப் பள்ளியில் கற்பித்ததன் மூலம், இவரே நாட்டின் முதல் ஆசிரியை ஆனார். இந்த முயற்சியில் அவர்களுக்கு உதவியாக ஃபாத்திமா பேகம் என்பவர் இருந்தார். பின்னர், தாழ்த்தப்பட்ட குழந்தைகளுக்கான பள்ளியையும் அவர்கள் ஆரம்பித்தார்கள்.
கைகுஸ்ரா ஜஹான்: நாட்டிலேயே முதன்முறையாக இலவசக் கட்டாயக் கல்வியைத் தன் ஆட்சிக்கு உட்பட்ட அன்றைய போபால் மாகாணத்தில் 1918-ல் வழங்கியவர். அந்த வகையில் கல்விக்கு முக்கியத்துவம் அளித்த முதல் ஆட்சியாளர் என்ற பெருமையைப் பெற்ற இவர், 'போபாலின் பேகம்' என்று அழைக்கப்படுகிறார்.
டோரதி தி லா ஹே: தமிழகத்தின் முதல்; தென்னிந்தியாவின் இரண்டாவது; தேசிய அளவில் மூன்றாவது மகளிர் கல்லூரி என்ற பெருமைகளைக் கொண்டது சென்னை ராணி மேரி கல்லூரி. 1914-ல் இந்தக் கல்லூரி நிறுவப்பட காரணமாக இருந்த டோரதி, 1936 வரை அந்தக் கல்லூரியின் முதல்வராகவும் செயல்பட்டார். தொடக்க காலத்தில் குழந்தைத் திருமணம் செய்துகொண்ட பெண்கள், சிறு வயதிலேயே கணவரை இழந்த பெண்கள் இங்கே அதிகம் படித்துப் பட்டம் பெற்றிருக்கிறார்கள்.
மேரி ஆன் டகாம்ப் ஷார்லீப்: பிரிட்டனிலும் அதன் காலனி நாடுகளிலும் முதன்முறையாக 1875-ல் அன்றைய 'மதராஸ் மருத்துவக் கல்லூரி'யில் பிரிட்டனைச் சேர்ந்த மேரி ஆன் டகாம்ப் ஷார்லீப் சேர்த்துக் கொள்ளப்பட்டார். இளநிலை படிப்பை முடித்த பிறகு இங்கிலாந்தில் உள்ள ‘ராயல் லண்டன் மருத்துவப் பள்ளி'யில் மேற்படிப்பு படித்து, பிரிட்டனின் முதல் பெண் மருத்துவர் என்ற பெருமையை அவர் பெற்றார். சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ‘கஸ்தூர்பா காந்தி அரசு மகளிர், குழந்தைகள் மருத்துவமனை'யை நிறுவியவர் இவர்.
முத்துலெட்சுமி: சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த முதல் இந்தியப் பெண் (1912), மதராஸ் மாகாண சட்டப்பேரவையின் முதல் பெண் உறுப்பினர் (1926), முதல் பெண் துணை சபாநாயகர், சென்னை மாநகராட்சிக்குத்
தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கவுன்சிலர், இந்தியப் பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர் என பல்வேறு ‘முதல்' சாதனைகளைப் புரிந்தவர்.
ஜானகி அம்மாள்: முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்தியப் பெண். கேரளத்தைச் சேர்ந்த இவர் சென்னை ‘ராணி மேரிக் கல்லூரி', ‘மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி'களில் இளநிலை, முதுநிலைத் தாவரவியல் படித்தார். அமெரிக்காவின் ‘மிச்சிகன் பல்கலைக்கழக'த்தில் 1931-ல் முனைவர் பட்டம் பெற்றார். பிரிட்டனில் பார்த்த வேலையைத் துறந்துவிட்டு நாடு திரும்பி, ‘இந்தியத் தாவரவியல் ஆய்வு நிறுவன’த்துக்கு 1951-ல் தலைமைப் பொறுப்பேற்று அதைச் சீரமைத்தார்.
கமலா சத்தியநாதன்: ‘சென்னைப் பல்கலைக் கழக'த்தில் முதன்முதலில் இளங்கலை, முதுகலைப் பட்டங்களைப் பெற்றவர். ‘மதராஸ் கிறிஸ்தவக் கல்லூரி'யில் முதுகலைப் பட்டம் பெற்ற முதல் பெண். இந்தியாவில் பெண்களுக்கான முதல் ஆங்கில மகளிர் இதழான ‘The Indian Ladies Magazine'-யை 1901-ல் இவர் தொடங்கினார்.
ஆனந்தா பாய்: பழைய மதராஸ் மாகாணத்தில் சட்டத் துறையில் முதன்முதலில் பட்டம் பெற்றவர். கர்நாடகத்தின் தெற்கு கனரா பகுதியைச் சேர்ந்த இவர், சென்னை பல்கலைக்கழகத்தில் 1928-ல் பட்டம் பெற்றார். சென்னை உயர் நீதிமன்றத்தில்
1929-ல் வழக்கறிஞராகப் பதிவுசெய்ததன் மூலம், சென்னையில் பயிற்சி பெற்ற முதல் பெண் வழக்கறிஞர் என்ற பெருமையைப் பெற்றவர்.
கடம்பி மீனாட்சி: தமிழகத்திலும் சென்னை பல்கலைக் கழகத்திலும் முதன்முதலில் (1936) முனைவர் பட்டம் பெற்ற பெண். பல்லவ மன்னர்களின் நிர்வாக, சமூக வாழ்க்கை தொடர்பாக ஆராய்ந்தார். ‘பெங்களூர் மகாராணி கல்லூரி'யில் உதவிப் பேராசிரியையாகப் பணியாற்றிய அவர், 1940-ல் சிறு வயதிலேயே காலமானார்.
மே ஜார்ஜ்: கிண்டி பொறியியல் கல்லூரியில் படித்து சென்னை மாகாணத்தின் முதல் பெண் பொறியாளராக 1945-ல் ஆனார். மாநில வீட்டு வசதி வாரியத்தின் முதல் தொழில்நுட்ப அலுவலராகச் செயல்பட்ட அவர், பின்னர் தலைமைப் பொறியாளராகவும் உயர்ந்தார். தமிழகத்தில் பெண்களுக்கான முதல் பாலிடெக்னிக்கின் முதல் முதல்வராகவும் செயல்பட்டுள்ளார்.
இந்த வாரம்:
ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடத்தில், ‘கல்வி’ என்ற இயலின்கீழ் ‘கல்வியில் சிறந்த பெண்கள்’ என்ற உரைநடை உலகம் பகுதி.
கட்டுரையாளர்
தொடர்புக்கு:
valliappan.k@hindutamil.co.in