மாயா பஜார்

பள்ளி உலா!

செய்திப்பிரிவு

அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி,
ஜோலார்பேட்டை, வேலூர்.

‘பள்ளி என்ற கலைக்கூடம் நம் வாழ்வைச் சிறப்பிக்கும் அன்றாடம்’ என்பதை நோக்கமாகக் கொண்டு 1931-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. துவக்கப் பள்ளியாகத் தொடங்கப்பட்டு, 1979-ல் மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது.
இங்கு பயிலும் மாணவர்கள் மிகவும் பின்தங்கிய குடும்பச் சூழலில் இருந்து வருபவர்கள் என்பதால் அவர்களின் முன்னேற்றம் ஒன்றையே நோக்கமாகக் கொண்டு தலைமை ஆசிரியரும் ஆசிரியர்களும் பணியாற்றி வருகின்றனர்.
புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.

மரங்கள் வளர்க்கப்பட்டுள்ளன. கற்றலுக்கான மிகச் சிறந்த இயற்கைசூழல் உருவாக்கப்பட்டுள்ளது. தரமான விளையாட்டு மைதானம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், சுகாதாரமான கழிப்பிட வசதி போன்றவை சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளன. நூலகம், கணினிக் கூடம் போன்றவையும் அமைக்கப்பட்டுள்ளன. நீட் தேர்வுக்கான பயிற்சி வழங்கப்படுகிறது. மிகச் சிறந்த வல்லுநர்களைக் கொண்டு மனவளப் பயிற்சி வழங்கப்படுகிறது. தியானம், யோகா போன்றவையும் கற்பிக்கப்படுகின்றன.

இலவச தங்கும் விடுதிகள் உள்ளன. கல்வியில் பின்தங்கிய மாணவர்களுக்குச் சிறப்புக் கவனம் செலுத்தப்படுகிறது. 2018-2019-ம் ஆண்டுக்கான மாநில அரசின் ’பசுமை மற்றும் தூய்மைப் பள்ளி’ விருதைப் பெற்றுள்ளது. இந்தக் கல்வியாண்டில் வேலூர் மாவட்ட ‘விளையாட்டுப் பள்ளி’ என்ற சிறப்பைப் பெற்றுள்ளது.

சென்னை நடுநிலைப் பள்ளி,
புல்லாபுரம், சென்னை.

1950-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, 69 ஆண்டுகளாக வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது. இந்தப் பள்ளிக்குத் தேவையான வசதிகள் அனைத்தும் மாநகராட்சி மூலம் செய்யப்பட்டிருக்கிறது.
இந்தப் பள்ளியில் தமிழ், ஆங்கிலம் மற்றும் தெலுங்கு மொழிகளில் கல்வி கற்பிக்கப்படுகிறது, ஸ்மார்ட் வகுப்பறைகள், கணினி வகுப்பறைகள், என்ஐஐடி கணினி வகுப்பறை போன்றவை சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன.

கல்வியோடு மாணவர்களின் தனித்திறமைகளை வளர்ப்பதிலும் இங்கே அதிக கவனம் செலுத்தப்படுகிறது. சதுரங்கம், யோகா, விளையாட்டு போன்றவற்றுக்குச் சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு பயிற்சியளிக்கப்படுகிறது.
மாதந்தோறும் பள்ளி மேலாண்மைக் கூட்டம் நடத்தப்படுகிறது. அதில் பெற்றோர் கலந்துகொண்டு, பள்ளியின் செயல்பாடுகளையும், மாணவர்களின் கல்வித் தரத்தையும் பற்றி அறிந்துகொள்கிறார்கள்.

ஒவ்வோர் ஆண்டும் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகிறது. இந்த ஆண்டு சுற்றுச்சூழல் பூங்காவுக்கும் ரயில் அருங்காட்சியகத்துக்கும் அழைத்துச் செல்லப்பட்டனர்.
மனிதவளத் துறை மூலம் அறிவிக்கப்படும் திட்டங்கள் அனைத்தும் இந்தப் பள்ளியில் செயல்படுத்தப்படுகின்றன.

SCROLL FOR NEXT