பென்சிலை இரண்டு துண்டுகளாக உடைக்காமல் அதை உடைந்ததுபோலக் காட்ட முடியுமா? இந்த எளிய சோதனையைச் செய்து பார்த்துவிடலாமா?
என்னென்ன தேவை?
பெரிய கண்ணாடி டம்ளர்
முழு பென்சில்
தண்ணீர்
எப்படிச் செய்வது?
# கண்ணாடி டம்ளரில் முக்கால் பாகத்துக்குத் தண்ணீரை ஊற்றிக்கொள்ளுங்கள்.
# இப்போது பென்சிலை தண்ணீருள்ள கண்ணாடி டம்ளரில் சாய்த்து வையுங்கள்.
# கண்ணாடி வழியாகப் பென்சிலைப் பாருங்கள்.
# பென்சில் தண்ணீருக்குள் நுழையும் இடத்தில் இரண்டாக உடைந்தது போலத் தெரிகிறதா?
காரணம்:
ஒளி என்பது வெற்றிடத்தில் கண்ணாடி, நீர், காற்று ஆகியவற்றில் ஊடுருவிச் செல்லக்கூடியது. அப்படி ஊடுருவிச் செல்லும் பொருள்களை ‘ஊடகம்’ என்று அழைப்பார்கள். இதன் அடிப்படையில் ஓர் ஊடகத்திலிருந்து இன்னோர் ஊடகத்துக்குப் பயணம் செய்யும்போது ஒளியானது தன்னுடைய வேகத்தையும் திசையையும் மாற்றிக்கொள்ளும். ஒளியின் இந்தச் செயல்பாட்டுக்கு ‘ஒளி விலகல்’ என்று பெயர்.
இந்தப் பரிசோதனையில், பென்சிலின் மேற்புறம் காற்றிலும் அடிப்புறம் தண்ணீருக்குள்ளும் இருக்கிறது. அதனால், ஒளியும் காற்றிலிருந்து தண்ணீருக்குள் பயணிக்கிறது. அப்போது ஒளிக் கற்றை விலகி, தண்ணீருக்குள் பென்சில் மூழ்கும் இடம் சற்றுப் பெரியதாகவும் உடைந்தது போலவும் நமக்கு காட்டுகிறது. நீரில் பென்சில் உடைந்ததுபோல் தெரிய ஒளி விலகலே காரணம்.
பயன்பாடு:
ஒளி விலகலாலும் ஒளிச்சிதறலாலும் கோடை காலத்தில் கானல்நீர் என்ற மாயத் தோற்றத்தை உருவாக்குகிறது.
- மிது கார்த்தி