மாயா பஜார்

பழரசமும் இரண்டு நண்பர்களும்

யூமா வாசுகி

ஒரு ஊரில் இரண்டு நண்பர்கள் இருந்தார்கள். ஒருவன் பெயர் பெரல். இன்னொருவன் ஷோலம். அவர்கள் இருவரும் மிகவும் ஏழை. வாழ்க்கையில் பணக்காரராக வேண்டும் என்று இருவருக்கும் லட்சியம்.

ஏதாவது தொழில் செய்து பணம் சம்பாதிக்க இருவரும் திட்டம் போட்டார்கள். அப்போது கோடைக் காலம். எனவே பழரசம் தயாரித்து விற்றால் நல்ல லாபம் கிடைக்கும் என்று எண்ணினார்கள். அதன்படியே ஒரு பீப்பாய் நிறைய பழரசம் தயாரித்து சந்தைக்கு எடுத்துச் சென்றார்கள்.

அங்கே ஒரு இடத்தில் விளம்பரமும் எழுதி வைத்தார்கள்.

“இங்கு மிகவும் அருமையான பழரசம் கிடைக்கும். ஒரு முறை குடித்துப் பார்த்தால் ஆயுள் முழுதும் மறக்க மாட்டீர்கள்!” என விளம்பரப்படுத்தினர். அந்த விளம்பரத்தையும், அவர்கள் இருவரையும் போவோர் வருவோரெல்லாம் பார்த்துச் சென்றனர். அப்போது ஷோலம் தன் நண்பனிடம் சொன்னான்.

“பெரல், நாம் மிகவும் திறமையாக வியாபாரம் செய்ய வேண்டும். அப்போதுதான் நம்மால் விரைவில் பணக்காரர் களாக முடியும்.”

“ஆமாம். திறமையாக வியாபாரம் செய்தால் நிறைய காசு சம்பாதிக்கலாம்” என்றான் பெரல்.

“ நாம் யாருக்கும் கடன் கொடுக்கக் கூடாது. கடன் கொடுத்தால் நஷ்டம் ஏற்படும். நாம் காசுக்கு மட்டும்தான் விற்க வேண்டும்” என்று ஷோலம் அடுத்த யோசனையை கூறினான்.

“ஆமாம், உனக்கு அனுபவம் அதிகம். நீ சொன்னால் சரியாகத் தான் இருக்கும். யாராக இருந்தாலும் நாம் பணம் வாங்கிக்கொண்டுதான் பழரசம் கொடுக்க வேண்டும். நம்மை ஏமாற்ற யாராலும் முடியாது!”

இருவரும் வாடிக்கையாளர்களுக்காகக் காத்திருந்தார்கள். மக்கள் அவர் களை வேடிக்கை பார்த்துச் சென்றார்களே தவிர, யாரும் பக்கத்தில்கூட வரவில்லை. நீண்ட நேரம் ஆகியும் யாரும் வராததால், பெரலுக்கு ஒரே சலிப்பு.

“ஷோலம், என்னிடம் ஐந்து ரூபாய் இருக்கிறது. எனக்கு ஒரு குவளை பழரசம் கொடு. பணம் வாங்கிக்கொண்டு கொடுத்தால் போதும்!” என்றான்.

“ஓ, அப்படியா? சரி உன் விருப்பம்” என்றான் ஷோலம்.

ஷோலமிடம் ஐந்து ரூபாய் கொடுத்து ஒரு குவளை பழரசம் வாங்கிக் குடித்தான் பெரல்.

சிறிது நேரம் கழிந்தது. அந்த ஐந்து ரூபாயை பெரலிடம் கொடுத்தான் ஷோலம்.

“இப்போது நீ எனக்கு ஒரு குவளை பழரசம் கொடு பெரல்! கடனுக்குத் தர வேண்டாம். இந்தா பணம்!”

இன்னும் சிறிது நேரம் கழித்து பெரல் அதே ஐந்து ரூபாயை ஷோலமிடம் கொடுத்தான்.

“நாம் கண்டிப்பாக இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் கடன் கிடையாது. இந்தா, ஐந்து ரூபாய் இருக்கிறது. ஒரு குவளை பழரசம் கொடு!” என்றான் பெரல்.

மீண்டும் மீண்டும் அவர்களே அந்த ஐந்து ரூபாயைக் கொடுத்து பழரசம் வாங்கிக் குடித்துக் கொண்டார்கள்.

மாலைக்குள் பீப்பாயில் இருந்த பழரசம் தீர்ந்துவிட்டது.

காலிப் பீப்பாயுடன் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தபோது, “பார் ஷோலம், நாம் பழரசம் முழுவதையும் விற்றுவிட்டோமே! சிறப்பான காரியம் செய்திருக்கிறோம் அல்லவா?” என்றான் பெரல்.

“ஆமாம், ஆமாம்! சரியாகச் சொன்னாய். அதுவும் நாம் கடனுக்கு விற்கவில்லை, ரொக்கப் பணத்திற்கு விற்றோம்! இதற்காக நாம் பெருமை கொள்ளலாம்!” என்றான் ஷோலம்.

(இஸ்ரேல் நாடோடிக் கதை)

SCROLL FOR NEXT