குழந்தைகளே...
மாய சீப்பு பற்றி கேள்விபட்டிருக்கிறீர்களா? உங்கள் நண்பர்களிடம் மாய சீப்பு வைத்திருப்பதாகக் கூறுங்கள். அது என்ன மாய சீப்பு என்று அவர்கள் நிச்சயம் திருப்பி கேட்பார்கள். அப்போது இந்த சுலபமான மாய சீப்பு மேஜிக்கை செய்து காட்டுகிறீர்களா?
என்னென்ன தேவை?:
சீப்பு
காகிதம்
பிங்பாங் பந்து
எப்படிச் செய்வது?
காகிதத்தை சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளுங்கள்.
இப்போது சீப்பை எடுத்து உங்கள் தலை முடியை வாரிவிடுங்கள்.
அந்தச் சீப்பைக் காகிதத் துண்டுகளுக்கு அருகில் கொண்டு செல்லுங்கள். இப்போது நீங்கள் ஒரு மாயாஜாலத்தைப் பார்க்காலாம். அந்த காகிதத் துண்டுகள் சீப்புடன் ஒட்டிக்கொள்ளும்.
சீப்பை இன்னும் சில முறை முடியில் வாரி “ரீசார்ஜ்” செய்துகொள்ளுங்கள். இப்போது அதை பிங்பாங் பந்திடம் கொண்டு செல்லுங்கள். அது சீப்பு இருக்கும் திசை நோக்கி நகரும்.
சீப்பு எப்படி காந்தமாக மாறுகிறது என்று ஆச்சரியமாக உள்ளதா? உங்கள் சீப்பில் எந்த மாயமும் இல்லை, நீங்கள் வேகமாகச் சீப்பைக் கொண்டு தலைமுடியை வாரும்போது, உராய்வின் காரணமாக மின் காந்த விசை ஏற்படுகிறது. அதனால்தான் பிளாஸ்டிக்கில் உள்ள சீப்பு காந்தம் போல மாறுகிறது.